தொல்காப்பியத்தில்போ’ – சூழற் பொருண்மை

. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

            தமிழின் இயக்கத்தைத் தரவுகளின் அடிப்படையில் ஆய்ந்துரைக்கின்ற தொல்காப்பியம் வகுத்துரைக்கும் இலக்கணவியல் கொள்கைகளால் மொழி வரலாற்றையும் சொற்பொருண்மை மரபையும் தெளியலாம். அந் நிலையில் போ என்னும் ஓரெழுத்தொருமொழி தொல்பழங்காலத்திலிருந்து பலபொருள் தன்மையில் இயல்வதை அறிந்தால் இலக்கியங்களை முறையாக உள்வாங்கி வரலாற்றை விளக்கலாம். புறத்திணையியலில்,

            புடைகெடப் போகிய செலவே….(நூற்பா 1008 அடி 02 )

என்னும் நூற்பாவில் இடம் பெயர்தல் என்னும் கருத்தில் போ பயில்கின்றது. அடுத்ததாக, இடையியலில்

             பிற, பிறக்கு, அரோ, போ …….அசைநிலை… ( நூற்பா 764 )

என்னும் பயில்வில் பொருளற்ற அசைநிலையாக இயல்வது இலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே போ வினையாகவும் இடைச்சொல்லாகவும் பழந்தமிழில் பல்பொருளொரு சொல்லாக வழங்கியமை தெளிவு.

            இப் பொருண்மை மரபு இன்றும் தொடர்கின்றது. போனான் என்று இயக்கத்தைக் குறிப்பதோடு, ’வந்தா வா; வராட்டிப் போபோன்ற சொல்லாடலில் போ அசைநிலையாக, பொருளற்ற வெற்றுருபாக ஆளப்படுகின்றது. பன்னெடுங்காலமாக நீடிக்கின்ற இத்தகைய சொற் பயன்பாடு உலக மொழிகளில் சிலவற்றில் மட்டுமே வாய்க்கக்கூடும்; இப் பெருமையை / வரலாற்றை உணர்ந்து , உலகுக்கும் இளைஞர்களுக்கும் உணர்த்தவேண்டியது பொறுப்புடையோர் பணி.

                                                       பயன்பட்டது

  ஜெயதேவன்,. (பதி.), 2004, தொல்காப்பிய அகராதி,  சென்னைப் பல்கலைகழகம்.

                                                                          *******

                                

Comments