Posts

Showing posts from January, 2025
                                                              இக்காலத் தமிழில் எதிர்மறை எச்சம் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்பொருள் வரலாற்றில் காலந்தோறும் தேவைக்கேற்பப் புதியன புகுதலும் பழையன கழிதலுமான மாற்றங்கள் நேர்கின்றன. இதை அறிவதன் மூலம் மொழி இயங்கியலைத் தெளிந்து மொழித்திறன் செறிக்கலாம். இந் நிலையில் தொல்காப்பியர் இலக்கணப்படுத்திய எதிர்மறை எச்சம் இக்காலத் தமிழில் இயலுமாற்றைச் சுட்டுவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. எதிர்மறை எச்சம் : சொல் வகையில் ஒன்று எச்சம். அதாவது ஒரு சொல் தனித்துநின்று முழுக் கருத்தையும் சுட்டாமல் இன்னொரு சொல்லின் துணையால் கருத்தை நிறைவிப்பது. காட்டாக,  வந்த என்னும் இறந்தகாலப் பெயரெச்சம் தனித்துக் கருத்தை நிறைவிக்காமல், அடுத்து வருகின்ற பெயரோடு இணைந்து வந்த செய்தி என்ற...
ஆரா × பேரா- எதிர்ப்பொருள் வழி வள்ளுவம் வகுக்கும் விழுமியம் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் ஒரு மனிதனின் எண்ணங்களும் செயல்களும் அவனுக்கு இன்ப, துன்பத்தை உண்டாக்குகின்றன என்னும் இயல்நெறிக் கோட்பாட்டை வள்ளுவம் நூல் நெடுகிலும் எடுத்துரைக்கின்றது. அந் நிலையில் அவா அறுத்தல் அதிகாரத்திலுள்ள, ஆரா இயற்கை அவாநீப்பின் அந் நிலையே பேரா இயற்கை தரும் ( 370 ) என்னும் குறட்பா உன்னத்தக்கது.   ஆரா, பேரா என்னும் எதிர்ப்பொருட் சொற்களின் மூலம் தகுதியற்ற / நலம்பயக்காத ஆசையை நீக்குக / வேரோடு கிள்ளியெறிக என்னும் அறவுரை அறையப்படுகின்றது. பேராசையின் இயல்பு மனநிறைவைத் தராமை, மென்மேலும் அலைத்தல் போல்வன என்பதை ஆரா இயற்கை என்னும் தொடர் குறிக்கின்றது. அடுத்து அவா நீப்பின் நிலையான / நீடித்த இன்பம் தங்கும் என்பதை, பேரா இன்பம் என்னும் தொடர் சுட்டுகின்றது. இதை வீடு / முக்தி என்றும் கருதலாம். இங்ஙனம் எதிர்மை வழியாக வள்ளுவம் வகுக்கும் விழுமியத்தைத் தெளிந்து, உயர்வுள்ளி, உலகம் தழுவி விழிப்புணர்வோடு வாழ்வாங்கு வாழ அனைவருக்கும் வாய்ப்பிருப்பதைத் தெளியலாம்.   நன்றி: இணையத் தரவுகள்   ...
                                                         வழி நாள் = அடுத்த நாள்- சூழல் தொடர்ப் பொருண்மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             பழந்தமிழ்ச் சொல்லான வழி பாதை என்னும் கருத்தில் மக்கள் வழக்கிலும் இலக்கியப் படைப்பிலும் இயல்கின்றது. இச் சொல் தொடரில் அமையும்போது அண்மையுறுப் பின் பொருள் தாக்கத்தால் சூழலுக்கேற்ப விரிவான பொருள் பயக்கின்றது. ஒரு தீர்மானத்தை ஒருவர் கூட்டத்தில் முன்மொழி ய, அடுத்த வர்   வழிமொழி கின்றார் ; இவண் அடுத்து என்னும் கருத்தில் வழி இயல்கின்றது.  கால்வழி என்னும் தொடரில் அடுத்த தலைமுறை என்று பொருள்படுகின்றது. இத்தகைய பொருண்மை மரபில் சங்க இலக்கியங்களில் வழி நாள் என்னும் தொடர் அடுத்த நாள் / அடுத்த பருவம் என்னும் கருத்தில் இயல்வதை,             வழி நாட்கு இரங்க...
                                    ஆக்கமுறக் கதம் காக்க ! வள்ளுவ விழுமியம் C ontrol anger to avoid Psychosomatic disorder புதுவை குழந்தைசாமி, புதுச்சேரி             அற இலக்கியமான திருக்குறள் மனித எண்ணத்தைச் சீர்தூக்கி, அல்லன விலக்கி நன்றாற்றி ஆக்கமுற வழிகாட்டுகின்றது. இவற்றுள் சினம் தவிர்த்தல் ஒன்றாகும். பிறழ் மனநிலையான சினம் சமூக, உளவியல், பண்பாட்டு, உடலியல் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. அதனால் சினத்தை விட்டொழிக்க வள்ளுவம் வலியுறுத்துகின்றது. கோபம், சினம், வெகுளி, சீற்றம், கதம் ஆகிய சொற்களால் இலக்கியங்கள் இவ் உணர்ச்சியைச் சுட்டுகின்றன.  அடக்கமுடைமை அதிகாரத்தில் திருக்குறள், கத ம் காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (130) பழந்தமிழ்ச் சொல்லான கதம் என்னும் சிறப்புச் சொல்லால் மிகுசினம் / உள்ளக் கொதிப்பு [hypertension] உன்னைத் தாக்காமல் காத்துய்க என்று உளவியல் / மருத்துவ அறிஞராகச் சினத்தின்...
                              தொல்காப்பியத்தில் நலி / நளி – ஒப்பொலிப் பொருண்மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் தமிழ் மொழிப் பொருண்மையையும் இயங்கியலையும் அறிந்திடத் தொல்காப்பியம் வாய்ப்பாகின்றது. இலக்கண அமைப்புகளோடு சொற்பொருள் விளக்கத்தையும் தொல்காப்பியம் தெளிவிக்கின்றது. இந் நிலையில் நலி / நளி ஆகிய ஒப்பொலிச் சொற்களின் கருத்தையும் தொல்காப்பியர் சுட்டியுள்ளார். மொழி இயங்கியலையும் இலக்கியப் புரிதிறனையும் இவை தெளிவாக்கும்.   கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி…….( மெய்ப்பாட்டியல் நூற்பா 12 அடி 04 ) என்னும் நூற்பாவில் மெலிதல் என்னும் தொழிற்பெயராக நலிதல் இயல்கின்றது. அடுத்து பெருமை என்னும் பண்புப் பொருண்மையி ல் நளி   பயில்வதை ,             தடவும் கயவும் நளி யும் பெருமை ( உரியியல் நூற்பா 22 ) என்று சுட்டி, தொடர்ந்து             நளியென் கிளவி செறிவு ம் ஆகும் ( உரி.25 ) என்று பொருளுரைக்கின்றார். ...
                                                    அமரர் – வள்ளுவச் சொற்பொருள் புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்             உயர்தனிச் செம்மொழியான தமிழ்   மாற்றம் / வளர்ச்சி ஆகியவற்றிற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு மக்களின் வழங்கு மொழியாக விளங்கிச் செழிக்கின்றது . இந் நிலையில் சொற்பொருள் வரலாற்றில் உயர்பொருட்பேறு , இழிபொருட்பேறு , விரிவாக்கம் போல்வன இயல் கின்றன . அமரர் என்னும் தொன்மச் சொல் இத்தகையது . பழந்தமிழ்ச் சொல்லான இது இறந்தோர் / வானோர் என்னும் கருத்தில் ’ அமரர் ஊர்தி ’ என்னுமாறு இன்றும் வழங்கப்படுகின்றது . அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும் செங்கண்மா லாயினும் ஆக ……… ( நாலடியார் பாடல் 373 ; 01-02 )   என்னும் பதிவில் , தொன்ம அடிப்படையில் வானோர் என்னும் பொருளில் இச் சொல் பயில்கின்றது . வள்ளுவத்தில் அடக்கமுடைமை அதிகாரத்திலுள்ள , அடக்கம் அமரருள் உய்க்கும் ; ...
                                                            இவணை – சொற்பொருள் புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம்             தமிழ் மொழியின் தொன்மை காரணமாகவும் பல்வேறு காரணங்களாலும் சொற்பொருளில் மாற்றம் ஏற்படுவதுண்டு . சான்றாக நாற்றம் , கழகம் ஆகியவற்றைக் கருதலாம் . அங்ஙனமே சொல் மறைவதும் தோன்றுவதும் உண்டு . இந் நிலையில் இவணை என்னும் பழஞ்சொல் நோக்கத்தக்கது . இக் காலத்தில் கடிதம் எழுதும்போது இறுதியில் இப்படிக்கு / இவண் என்று குறிப்பிடுகின்றனர் . ஆனால் இங்கு என்னும் பொருளில் அதிகமாக வழங்குவதில்லை . பழந்தமிழில் இங்கே என்னும் கருத்தில் இவணை ஆளப்பட்டதைக் கீழ்வருகின்ற வழக்காறுகளால் தெளியலாம் .              இன்று நீ இவணை ஆகி எம்மொடு ( நற்றிணை பா 215; 08)             ...
                                          ஒப்புரவாளனே உயிர் வாழ்வான் – சமூக நல்லிணக்கப் பொருண்மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் அற இலக்கியங்கள் மானுட மேன்மைக்கான கொள்கை வரைவுகளை விண்டு ரைக்கின்றன. அவற்றுள் சமூக நல்லிணக்கமும் ஒன்றாகும். கூடி வாழ விரும்புகின்ற விலங்காகிய மனிதன் இனிமையாக / வளமாக வாழப் பிற மனிதர்/ உயிரினங்களின் உறுதுணை இன்றியமையாதது. அதனால் ஒருவருக்கொருவர் உதவியும் உணர்வுகளை மதித்தும் இணங்கி வாழவேண்டும். ஊருக்குள் இருக்கின்ற நன்னீர்க் கிணறாகவும் மருத்துவப் பயனுடைய மரமாகவும் ஒவ்வொருவரும் பயன்படவேண்டும். இன்சொல், இணக்கம், உதவி, அறங்களை/ உணர்வுகளை மதித்து நடத்தல் ஆகிய பண்புகளைச் செயல்படுத்துபவர் ஒப்புரவாளர் [empathetic person] எனப்படுகின்றார். வள்ளுவம் இத்தகைய பண்பாளராக ஒவ்வொருவரும் இயல்பாக உலக நன்மை வாய்க்க இயங்கவேண்டும் என்று ஒப்புரவறிதல் அதிகாரத்தில் வலியுறுத்துகின்றது. இதை’’ஒப்புரவு ஒழுகு’ என்று அவ்வையின் ஆத்திசூடியும் வழிமொழிகின்றது. வள்ளலார் உயிரிரக்கத்தை...
         தீய பரப்பு ச் சொல் சான்றோர் வாய் த் தோன்றா   – கருத்தாடல் விழுமியம்                                          புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             மனித வாழ்க்கையில் கருத்தாடலுக்கு முதன்மையான இடமுண்டு. அதனால் அற இலக்கியங்கள் நன்மை, இனிமை, பண்புடைமை, சுருக்கம், தெளிவு, செறிவு, சூழலறிதல் ஆகிய பண்புகளைக் கொண்டதாகச் சொல்லாடல் இயலவேண்டியதை வலியுறுத்து கின்றன. இதில் நான்மணிக்கடிகையின் 95ஆம் பாடல் சுட்டுகின்ற ,             தீய பரப்பு ச் சொல் சான்றோர் வாய் த் தோன்றா   என்னும் சீர்மை அறியத்தக்கதாகும்.  பொய், குறளை, கரப்பு, வடு போல்வன தீமை பயக்கின்ற சொற்கள் / சொல்லாடல். இவற்றால் தீமை பரவும் / வளரும். இது சமூகச் சீர்கேடாகும் ; அமைதி குலையும்; தனிமனித மதிப்புக் கெடும்; நல்லிணக்கம் வாய்க்க...
                                        மூலை, மூழை, மூளை – ஒப்பொலிப் பொருண்மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             உயர்தனிச் செம்மொழியான தமிழில் ஒரே இலக்கண வகையைச் சார்ந்த மாறுபட்ட பொருளுடைய சொற்கள் ஒப்புருச் சொற்கள் எனப்படுகின்றன. அந் நிலையில், மூலை = இரண்டு பக்கங்கள் கூடுமிடம் – வடக்கு மூலை மூழை = அகப்பை- [ பாற்கூழை மூழை சுவையுணரா தாங்கு . நாலடியார், பா 321 ; 4] மூளை = உயிரின உறுப்பு ஆகியன இங்ஙனம் இயல்வதைத் தெளியலாம். இத்தகைய ஒப்புருச் சொற்களைப் பலபொருட் சொல்லிலிருந்து வேறுபடுத்தி அறியலாம்; பொருள் தெளிவை வாய்ப்பாக்கலாம்.                                    ************
                                            ஆற்றுத் துறை அம்பியும் அறத்துறை அம்பியும் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்               இலக்கியங்கள் நிலைபேறுடைய மானிட மதிப்புகளை விண்டுரைக்கின்றன. இதனால்  பண்பாட்டுச் சீர்மை வெளிப்படுவதுடன் மானுட மேம்பாடும் வாய்ப்பாகின்றது ; வாழ்கின்ற மக்களுக்கு வாழ்ந்தோர் பாடமாக அமைவதால் அறநெறி அறாமல் நிலைத்துத் தொடர்கின்றது. விழுமியங்களை விளம்ப எளிய உவமைகளைப் பெய்து புலவோர் கருத்துப் புலப்பாட்டை எளிமையாக்குகின்றனர். அம் முறையில் பாடாண்   திணை   இயன்மொழி த் துறையில் அமைந்த வேங்கட நாட்டுக் கரும்பனூர்    கிழானை   நன்னாகனார் பாடிய புறநானூற்றின் 381ஆம் பாடலின்,                 உறுவரும் சிறுவரும் ஊழ் மாறுய்க்கும்            ...
                                                       ‘வாரி ’- வளமைப் பொருண்மை புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             தமிழிலுள்ள சொற்கள் பொருள் உணர்த்துவதோடு, பண்பாடு, பொருளாதாரம், உளவியல் போன்ற துறைச் செய்திகளையும்  உள்ளடக்கியுள்ளன. அவற்றுள் ’வாரி’ என்னும் பழந்தமிழ் வளமைச் சொல் வள்ளுவத்தில் பயிலுமாற்றை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது. இச் சொல் பெயராக வளம் என்னும் பொருளிலும் அள்ளுதல் [ குப்பையை வாரிக்கொட்டு ] என்னும் பொருளில் வினையெச்சமாகவும் இன்று வரை வழங்கப்படுகின்றது. கொங்கு வட்டாரத்தில் கிணற்றில் மாடு கட்டி நீர் இறைக்கின்ற பகுதியை  வாரி என்று சுட்டுவர். வள்ளுவத்தில், ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்   ( 14 ) என்னும் குறட்பாவில், மழை வளம் என்னும் பொருளிலும், வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை (512) என்னு...
                                               உப் பக்கம் – சுட்டுப் பொருண்மை நீட்சி புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்             தொடரியல் நோக்கில்  இ, உ, அ ஆகிய மூன்று குற்றுயிர்களும் சுட்டு எழுத்துகள் எனப்படுகின்றன. இவை அக / புறச் சுட்டுகளாக இயல்கின்றன. ஒருவரை / ஒன்றைச் சுட்டிக்காட்டி விளக்க இவை பயன்படுகின்றன. இவற்றுள் ஒன்று மற்ற இரண்டுக்கும் எதிர்ப் பொருளில் இயலும். இவ்வாறு சுட்டும்போது சுட்டுவார்க்கும் சுட்டப்படுகின்ற பொருளுக்கும் இடையில் உள்ள இட அமைவை/ தூரத் தைக் கருதிச் சுட்டெழுத்துகள்,                 அண்மை = அருகிலுள்ள – இக் கட்டடம்                   நடுமை / பின்புறம்   = சற்றுத் தொலைவிலுள்ள – உவ் இடம் ; பின்னால் - உப் பக்கம் ...