தொல்காப்பியத்தில் நலி / நளி – ஒப்பொலிப் பொருண்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

தமிழ் மொழிப் பொருண்மையையும் இயங்கியலையும் அறிந்திடத் தொல்காப்பியம் வாய்ப்பாகின்றது. இலக்கண அமைப்புகளோடு சொற்பொருள் விளக்கத்தையும் தொல்காப்பியம் தெளிவிக்கின்றது. இந் நிலையில் நலி / நளி ஆகிய ஒப்பொலிச் சொற்களின் கருத்தையும் தொல்காப்பியர் சுட்டியுள்ளார். மொழி இயங்கியலையும் இலக்கியப் புரிதிறனையும் இவை தெளிவாக்கும்.  

கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி…….( மெய்ப்பாட்டியல் நூற்பா 12 அடி 04 )

என்னும் நூற்பாவில் மெலிதல் என்னும் தொழிற்பெயராக நலிதல் இயல்கின்றது. அடுத்து பெருமை என்னும் பண்புப் பொருண்மையில் நளி  பயில்வதை,

            தடவும் கயவும் நளியும் பெருமை ( உரியியல் நூற்பா 22 ) என்று சுட்டி, தொடர்ந்து

            நளியென் கிளவி செறிவும் ஆகும் ( உரி.25 ) என்று பொருளுரைக்கின்றார்.      

இதனால் செறிவு என்னும் கருத்திலும் ஒப்புருச் சொல்லாக நளி இயல்வதைத் தெளியலாம். மேலும் நளி என்னும் சொல்லின் எதிர்ச்சொல்லாக இளி  இயல்வதை,

            நளியின் நீங்கிய இளிவரு நிலையும் ( கற்பியல் 06/10 )

என்னும் பதிவால் அறியலாம். பெருமை நீங்கிய தாழ்வு நிலை இவண் சுட்டப்படுகின்றது.  இளி என்னும் சொல் தாழ்வு உளவியலைக் குறிப்பதை இன்றைய பேச்சு வழக்கில் ’பல்ல இளிக்காதே’ என்று வழங்குவது ஒப்பத்தக்கது. இங்ஙனம் தொல்காப்பிய இலக்கணக் கொள்கைகளைத் தெளிதல் மொழித்திறன் செறிவுக்கு வாய்ப்பாகும்.

   நன்றி: இணையத் தரவுகள்                 *********

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு