தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு
தற்காலப்
பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு
( முனைவர்
ப. கொழந்தசாமி, புதுச்சேரி-605 008. பேச: 94863 66572.)
தமிழின் தொன்மையான / தலைமையான இலக்கண நூலாம் தொல்காப்பியத்தில் எழுத்து சொல் ஆகிய
அதிகாரங்களில் தமிழ் மொழியின் அமைப்புகளும் அவற்றின் இயங்கு முறையும்,
பொருளதிகாரத்தில் இலக்கியப் பொருண்மையும் விளக்கவியல் பாங்குடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
எழுத்து, சொல் தொடர் ஆகியவற்றின்
இலக்கணங்களை விளக்கும்போது மொழிப் பொருண்மைச் செய்திகள் ஆங்காங்கே
தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளன. இது குறித்துத் தொல்காப்பிய உரைகளில் காணப்படும் கருத்துகளையும் ஆய்வுக்
கட்டுரைகள்/நூல்கள் கூறும்
செய்திகளையும் தொகுத்து வகைதொகைப்படுத்தித் தனியான/முழுமையான ஆய்வை மேற்கொண்டால்
அது இலக்கண இலக்கியப் புரிதிறனுக்கும் படைப்புக்கும் ஆய்வுக்கும் உறுதுணையாகும்.
மேலும் தமிழ் மொழிப்பொருண்மைக் கோட்பாடுகளை உருவாக்கவும் இயலும். மொழியமைப்பைச்
செவ்வனே அறிய இலக்கணமும் மொழியியலும் உறுதுணையாகின்றன. இந்தக் கட்டுரை
தொல்காப்பியத்தில் காணப்படும் இலக்கணச் செய்திகள் தற்காலத் தமிழ்ப் பொருண்மையியல்
ஆய்வுக்கு உறுதுணையாவதை விண்டுரைப்பதாக அமைகின்றது. செ.வை. சண்முகம், ‘மொழியியல் வெளிச்சத்தில் இலக்கணத்தைப் பார்க்கக் கற்றுக்கொள்வது குன்றின் மேலிருந்து யானைப் போரைப்
பார்ப்பது போலாகும். அப்போது இலக்கணத்தை மதிப்பீடு செய்யக் கற்றுக்கொண்டுவிடுவோம். இது
இலக்கண ஆராய்ச்சியில் புதிய ஆர்வத்தைத் தூண்டிவிடும். மொழியியல் கோட்பாட்டிற்கேற்ப....மொழியமைப்பைப் புதிய
முறையில் நோக்கலாம்’ (ப. 14) என்று
என்று
சுட்டியிருப்பது இங்கு எண்ணத்தக்கது.
சொல் :
மொழியின் அடிப்படை அலகு சொல் ஆகும். தமிழில் சொல் என்பது பெயர்ச் சொல்லாகவும்
வினைச் சொல்லாகவும் வழங்கப்படுகின்றது. இலக்கணத்தில் ஒரு கலைச்சொல்லாகப் பயன்படும்போது சொல் என்பதை ஒலித் தொகுதி,
இலக்கணக் கூறு, பொருள் அலகு என்று
விளக்கலாம். மொழியியலார் சொல் என்பதை,
1.
தனித்துநிற்கின்ற பொருளுடைய மிகச் சிறிய
மொழிக்கூறு – புளூம்ஃபீல்டு
2. இன்றியமையாத பேச்சு, மொழி அலகு – உல்மன்
3. முழுக்கூற்றாகச் செயல்படக்கூடிய மிகச் சிறிய
பேச்சு அலகு – பாமர்
என்னுமாறு
(கொழந்தசாமி,ப.91) வரையறுத்துள்ளனர். மொழியியல் அகராதி, ‘தனித்தியங்கக்கூடிய மிகச் சிறிய பொருள்
அலகு: ஒரு கருத்தின் பேச்சு அல்லது எழுத்துக் குறியீடு எனவும் (கொழந்தசாமி,ப.91) சுட்டியுள்ளது. சொல்லாவது
எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமையுடைத்தாய்ப் பொருள் குறித்துவருவது’ (கிளவியாக்கம், நூ.01 )என்னும் சேனாவரையம்
இங்குக் கருதத்தக்கது, தமிழில் சொல்
ஓரொலியாகவோ ஒலித் தொகுதியாகவோ அமையும். சான்றாக, ஆ, ஈ என்பவை தனித்த ஒலியால் ஆன
சொற்கள். ஆடு, ஈதல், ஆட்டம் ஆகியவை ஒலித்
தொகுதியாலானவை. தொல்காப்பியத்தில் சொல் என்பது பல பொருள்களில் கையாளப்பட்டிருப்பதும்,
சொல் என்பதைக் குறிக்க வேறு சில சொற்கள் பயன்பட்டி ருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சொல் என்பது ஆறு பொருள்களில் தொல்காப்பியத்தில் ஆளப்பட்டிருப்பதாக
ஆய்வறிஞர்கள் கண்டறிந்துள்ளனர் (கொழந்தசாமி, ப.92). அவையாவன: 1. உருபன் 2. அடிச்சொல்
3 ஒட்டுநிலைச் சொல் 4. வார்த்தை, 5.தொடர்மொழி 6..உலகப் பொருள். மேலும் “ கிளவி, சொல், மொழி என்னும்
தொடக்கத்தன எல்லாம் ஒருபொருட் கிளவி ” என்று கிளவியாக்கம்
முதல் நூற்பா உரையில் சேனாவரையர் குறிப்பிடுவதால் கிளவி, மொழி ஆகிய சொற்களும் சொல் என்னும்
பொருண்மையை உணர்த்துதலை அறியலாம்.
தனிமொழியும் தொடர்மொழியும் :
தமிழில்
சொல் தனித்தும் (ஆடு, மாடு ), சொற்களின் கூட்டுறவால் ஒருசொல்நீர்மைப்பட்டும்
(கறுப்புப் பணம், தேனிலவு) அமையும். சான்றாக, கறுப்புப் பணம், தேனிலவு ஆகிய
சொற்களை நோக்கலாம். இங்கு, கறுப்பு என்பது நிறத்தைக் குறிக்காமல், கணக்கில்
காட்டப்படாத வருவாயைச் சுட்டி, ஒரு சொல்லாக அமைகின்றது. இவ்வாறே தேனிலவு என்பதின்
பொருளும், அச் சொல்லிலுள்ள இரண்டு கூறுகளின் பொருட்கூட்டாக அமையாமல், புதுமண
இணையர் மேற்கொள்ளும் இனிமையான சுற்றுலா என்று அமைகின்றது. இத்தகைய சொற்களன்கள் தமிழ்ப் பொருண்மைக்
கோட்பாடாக அறியப்படவேண்டும் . இதில்
தனிமொழி என்பது தனிச் சொல்லையும், தொடர் மொழி என்பது சொற்களின் கூட்டுறவாலான
ஒருசொல்நீர்மைப்பட்டு வரும் சொற்களையும் குறிக்கின்றன என்பதைத் தெளியலாம்.
திருக்குறள் (குறட்பா127) உரையில் பரிமேலழகர் சோகாப்பர் என்பதை ஒரு சொல்லாகக்
கொண்டு பொருளுரைத்துள்ளதோடு, ‘அல்லாப்பர் செம்மாப்பர் என்பன போலச் சோகாப்பர்
என்பது ஒரு சொல்’
என்று வரையறுத்
துள்ளமை இங்கு எண்ணத்தக்கதாகும்.
சொல்லும்
பொருளும் :
மொழியின் அடிப்படை நோக்கம் கருத்துப்
பரிமாற்றமாகும்; கருத்தை ஒலி/வரி வடிவக் குறியீடுகளால் பெரும்பான்மையும் உணர்த்துகிறோம்.
அதனால் மொழியில் பயன்படுத்தப்படும் எழுத்து, சொல் முதலிய ஒவ்வொரு குறியீடும்
பொருள் மதிப்புடையவை. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (பெயரியல், நூ. 01) என்று தொல்காப்பியர் எல்லாச் சொற்களும்
பொருள் குறிப்பன என்று வகுத்துரைத்துள்ளார். இது தற்காலப் பொருண்மையியல் ஆராய்ச்சிக்கு
உடன்பாடான/உறுதுணையாகும் மொழியியக்கக் கோட்பாடாகும். சொல், தொடர் ஆகியவற்றுள்,
சொல்லின் பொருள் குறிப்பாக அமையும்; தொடர் பொருள் உணர்த்துவதாக இருக்கும். தொடரில் பொருள் நம்பகத்தனமை இல்லாதபோது
பொருள் உணர்த்தாமலும் அமையலாம். இங்கு, ‘முற்றுத் தொடர்களும் எச்சத் தொடர்களும்
பொருளுடையதாகவும் பொருளற்றதாகவும் இருக்கலாம் என்று கூறினாலும் சொற்கள் பொருளுடையவை
அல்ல என்று கூறுவதே இல்லை. பொருளுடைமை என்பது இரண்டு அர்த்தத்தில் பயன்படுகிறது. பொருளுடையது அல்லது பொருளைக் குறிக்கிறது (having meaning) என்றும்
பொருளை உணர்த்துவது (significance or being significant )’ என்னும் செ.வை. சண்முகத்தின் (ப.16)
கருத்து எண்ணத்தக்கது. சான்றாக,
முயல், கொம்பு என்னும் சொற்கள் பொருள் குறிப்பினும் முயற்கொம்பு வலிமையானது
என்னும் தொடர் பொருளுணர்த்தினாலும், பொருளில் உண்மையில்லாததால் இது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே பொருள் குறிக்கும் சொற்கள் தொடராக
அமையும்போது பொருள் ஏற்புடைமை இருந்தால் மட்டுமே தொடராக நின்று பொருளுணர்த்துவதாக
ஏற்கப்படும். கிளவியாக்கத்தின் முதல் நூற்பா உரையில், ‘சொற்றான் இரண்டு வகைப்படும்.,
தனிமொழியும் தொடர்மொழியுமென. அவற்றுள் தனிமொழியாவது சமய ஆற்றலால் பொருள்
விளக்குவது. தொடர்மொழியாவது அவாய்நிலையானும் தகுதியானும் அண்மைநிலையாலும் இயைந்து
பொருள் விளக்குந் தனிமொழி ஈட்டம்’ என்று சேனாவரையர் விளக்கியுள்ளமை இங்குக்
கருதத்தக்கது. இவற்றுள் சமயவாற்றல் என்பது மொழிமரபையும், அவாய்நிலை என்பது
அண்மையுறுப்பையும், தகுதி என்பது சொற்சேர்க்கை வரையறையையும், அண்மை என்பது முறையான
ஒலிப்பு முறையையும் சுட்டுகின்றன.
சொல்லின்
அகராதிப் பொருளும் இலக்கண வடிவமும் :
ஒரு சொல்லின் அகராதிப் பொருளையும் இலக்கண
வடிவத்தையும் அச் சொல்லால் அறிந்துகொள்ளலாம் என்பதைத் தொல்காப்பியர், ‘பொருண்மை
தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லினாகும் என்மனார் புலவர்’ ( பெயரியல், நூ. 02 ) என்று
குறிப்பிட்டுள்ளார். அதாவது சொல்லுக்கு, பொருள் குறித்தல் (semantic or lexical aspect )இலக்கணம் சுட்டல் (grammatical or formal aspect) என்னும் இருபெரும் இயல்புகள் உள்ளன. பொருள்
குறித்தல் (semantic
or lexical aspect ) இலக்கணம் சுட்டல் (grammatical or formal aspect) பொருண்மை என்பது சொல் குறிக்கும் பொருள்.
சொன்மை என்பது சொல்லின் இலக்கண வடிவம். இந் நூற்பா (பெயரியல், 02) உரையில்
தெய்வச்சிலையார் ‘சொல்லினாற்
குறிக்கப்பட்ட பொருளின் தன்மை ஆராய்தலும் சொல்லின் தன்மை ஆராய்தலும் சொல் தன்னானே ஆகும். நிலம் என்பது
பொருளின் தன்மை ஆராய்வார்க்கு மண்ணினான் இயன்றதோர் பூதம் என்றாயிற்று. சொல்லின் தன்மை ஆராய்வார்க்குப்
பெயர்ச்சொல் என்றாயிற்று. அதனான் இரு பகுதிய சொல் நிலைமை என்று
விளக்கியிருப்பது இங்குக் கருதத்தக்கது. இது இன்றைய பொருண்மையியல் ஆய்வுக்கு
உறுதுணையாகுமாற்றை வ. ஜெயதேவன் (ப.36 ) எடுத்துரைத்துள்ளார். பொதுவாக, மொழியியலார்
சொல்லின் வடிவமும் பொருளும் பிரிக்கமுடியாதபடி இணைந்தவை என்றும் சொல்லும் பொருளும்
ஒரு தாளின் இரண்டு பக்கம் போன்றவை என்று கருதுகின்றனர்.
பொருளின்
இலக்கணம்:
ஒரு சொல்லுக்கும் அது உணர்த்தும் கருத்துக்குமிடையே
இணக்கமான தொடர்பும் தம்முள் எதிர்மாறும் தொடர்பும் (reciprocal and reversible relationship) உண்டு. இத் தொடர்பே பொருள் எனப்படும். இதனைக் கீழ்வரையப்பட்டுள்ள ஆக்டன்
ரிச்சர்டு ஆகியோர் வகுத்தளித்த பொருள் முக்கோணம் வழி விளக்கலாம்.
கருத்து
இ
அ
- - - - ஆ
சொல் உலகப் பொருள்
இம்
முக்கோணத்தில் சொல் (அ) என்பது சொல்லின் ஒலி/ வரி வடிவத்தைக் குறிக்கும். உலகப்
பொருள் (ஆ), அதாவது மொழியுலகிற்கு வெளியே உள்ள
பொருளென்பது சொல்லால் குறிக்கப்படும் உருவ/ அருவப் பொருளாகும். இவ் இரண்டிற்கும்
இடையேயுள்ள தொடர்பு நிலையானதன்று; இடுகுறித்தனமையது. அன்றியும் இவ் இரண்டிற்கும்
இடையே நேர்த்தொடர்பும் இல்லை. இதனைக் குறிக்கவே அ, ஆ ஆகியவற்றிற்கிடையே
இடைவெளியுள்ள கோடு வரையப்பட்டுள் ளது. இவ் இரண்டிற்கும் இடையிலான தொடர்பு
மூன்றாவதொன்றின் வாயிலாக ஏற்படுகின்றது. இதுவே கருத்து (இ) ஆகும். சொல் கருத்தைத் தெரிவிக்கின்றது; கருத்து
சொல்லை நினைவுக்குக் கொணர்கின்றது. எனவே
சொல் கருத்து ஆகியவற்றிற்கிடையே இணக்கமான தொடர்பும் தம்முள் எதிர்மாறும் தொடர்பும்
இருப்பதைத் தெளியலாம். இத் தொடர்பே பொருள் ஆகும். பேசும் /எழுதும்
நிலையில் கருத்திலிருந்து சொல்லுக்கும், கேட்கும்/படிக்கும் நிலையில்
சொல்லிலிருந்து கருத்துக்கும் செல்கிறோம். ஒரு சொல்லில் ஒன்று அல்லது பல
பொருட்கூறுகள் இருக்கும் என்பதையும், தமிழ் ஒட்டுநிலை அமைப்புடைய மொழி என்பதையும்
பகுதி, இடைநிலை, விகுதி ஆகிய இலக்கணக் கூறுகள் உணர்த்துகின்றன.
பொருள்
குறிக்கும் பொருள் :
தமிழில் பொருள் என்னும் பலபொருளொருசொல்லுக்குப்
பல பொருள்கள் உள்ளன. இச் சொல் வேற்றுமைப் பொருள், எச்சப் பொருள் எனச்
சொற்பொருளையும், பொருளடக்கம். பொருளதிகாரம் என்று உள்ளீடு அல்லது உள்ளுறையையும்,
செல்வம் என்னும் கருத்தையும் கொண்டுள்ளது. மேலும் பொருண்மைப் பொருளையும்,
உருவ/அருவப் பொருளையும் குறிக்கின்றது.
இலக்கணப்
பொருளும் சொற்பொருளும் :
ஒரு சொல்லுக்கு இரண்டு நிலைகளில் பொருள்
அமையும். ஒன்று இலக்கணப் பொருள்; அடுத்தது சொற்பொருள். மரம் என்னும் சொல் இலை,
கிளை முதலியவற்றையுடைய உலகப் பொருளை மனத்தில் தோற்றுவிக்கும் கருத்து சொற்பொருள் எனப்படும். தொடரில் அந்தச்
சொல் இடம்பெறும் அமைப்பு நோக்கி எழுவாய், அஃறிணை, ஒருமை ஆகிய செய்திகளைத் தருவது
இலக்கணப் பொருள் எனப்படும்.
வெளிப்படைப்
பொருளும் குறிப்புப் பொருளும்:
ஒரு சொல் வெளிப்படையாகவும் குறிப்பாகவும்
பொருளுணர்த்தும். அதாவது ஒரு சொல் நேரே தான் குறிக்கும் பொருளைச் சுட்டுவதும்,
அவ்வாறின்றி ஏதோ ஒரு குறிப்பினால் பொருளைச் சுட்டுவதும் உண்டு. பனை மரம் என்பது
மரத்தைச் சுட்டும்போது வெளிப்படையாக நேர்ப் பொருளையும், ‘பனைமரம் வருகிறான்’ என்னும்போது உயரமான மனிதனைக் குறிப்பாகவும்
உணர்த்துகிறது. இதைத் தொல்காப்பியர், ‘தெரிபுவேறு நிலையலும் குறிப்பின்
தோன்றலும் இருபாற் றென்ப
பொருண்மை நிலையே ( பெயரியல், நூ. 03 ) என்று உணர்த்தியுள்ளார்.
சொல்-பொருள்
உறவு:
சொல்லுக்கும் பொருளுக்குமிடையிலான உறவு தனிச்
சொல்லைப் பொருத்தவரையில் இடுகுறியானது என்றும் தொடர்மொழியில் காரணத்தன்மையது என்றும்
தெய்வச்சிலையாரை மேற்கோள் காட்டி செ.வை. சண்முகம் விளக்கியுள்ளார் (ப.18).தனிமொழி
இடுகுறித் தன்மையது என்பதற்குத் தெய்வச்சிலையார் கூறும் காரணம் ஒரே பொருளைக்
குறிக்க ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறான சொல் ஆளப்படுவதாகும். செ. வை. சண்முகம்,(ப18)
‘மொழியியலார் ஒரு மொழிக்குள் காலத்துக்குக் காலம் ஒரு பொருளைக் குறிக்கும் சொல்
மாறிவருவதையும் இடுகுறித் தன்மைக்கு இன்னொரு காரணமாகக் கூறுவர். உதாரணமாக,
எல்லாருக்கும் தெரிந்த பொருள்களின் பெயர்களான ஞாயிறு, திங்கள் என்று சங்க
காலத்தில் வழங்கிய சொற்கள் இந்தக் காலத்தில் சூரியன், நிலா என்று மாறிவிட்டன. எனவே
பொருளுக்கும் அதைக் குறிக்கும் சொல்லுக்கும் இடுகுறித் தொடர்பே உள்ளது
என்பது தெளிவாகின்றது. அதாவது சொல்லுக்கும்
பொருளுக்கும் தொடர்பிருந்தால் ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள்
இருக்கமுடியாது என்பதே கருத்து’ என்று இதை விளக்கியுள்ளமை இங்குக்
கருதத்தக்கதாகும். அதாவது தண்மை, நீர் ஆகிய தனிச்சொற்கள் இடுகுறியானவையானாலும் அவை
இணைந்து தண்ணீர் என்றாகும்போது தண்மையுடைய நீரென்று காரணப் பெயராகின்றது. இதனால்
தனிச் சொற்கள் இடுகுறித்தனமையன என்பதும் தொகைகளும் தொடர்களும் காரணத் தன்மையில்
அமைகின்றன என்பதும் தெளிவாகும்.
சொல்
வகைப்பாடு :
இலக்கணம், மொழியியல் ஆகிய துறைகள்
விளக்கவியல்/ அறிவியல் துறைகளாகும். இதனால் அறிவியலுக்குரிய வகைப்படுத்தல் பண்பு
இவற்றிற்கு இன்றியமையாதன. அவ்வாறு வகைப்படுத்தும்போது, தமிழ் இலக்கணத்
தொல்லாசிரியர்கள் அறிவாராய்ச்சிக்குட்படுத்தி, கூர்ந்தறிந்து காரணகாரிய இயைபுடன்
வகைப்படுத்தியுள்ளமை
சிறப்பானதாகும். தொல்காப்பியர் சொற்களை இலக்கண இயங்கியல் அடிப்படையில் பெயர்,வினை,
இடை, உரி (பெயரியல், நூ. 3, 4 ) என்றும் சொற்பிறப்பியல் நோக்கில் இயல், திரி,
திசை, வட சொற்கள் (எச்சவியல், 1 ) எனவும் பாகுபடுத்தியுள்ளார். மொழி இயக்கவியல்/
தொடர்ப் பொருண்மை நோக்கில் பெயர்ச் சொற்களை மக்கட் பண்புடையவை X பண்பு இல்லாதவை, ஒருமை, பன்மை என்னும்
அடிப்படையில் இருதிணை, ஐம்பால் என்று பகுத்துள்ளார். சார்ந்துவரும்
பண்புடையதாதலால் உரிச்சொல்லைக் குறைச்சொல் (குற்றியலுகரப் புணரியல், நூ. 77) என்று
சுட்டியுள்ளார்.
புற வடிவம், புதை/ பொருள் வடிவம் என்னும்
கோட்பாட்டை நுட்பமாகப் புரிந்துகொள்ளத் தொகைச் சொற்கள் பற்றிய இலக்கணமும், சொல்
உறவுகளைச் செம்மையாகப் புரிந்துகொள்ள இருபெயரொட்டுப் பண்புத்தொகைக் கோட்பாடும்
உறுதுணையாகும். பலபொருளொரு சொல், எதிர்மறை, வண்ணச்சினைச்சொல், முன்னம், தடுமாறு
தொழிற்பெயர், அடுக்குத் தொடர், வழக்கு, திணைபாலியைபு, குறிப்புரை, அல்வழிப்
புணர்ச்சி போன்ற தொல்காப்பிய இலக்கணக் கோட்பாடுகள் தற்காலத் தமிழ்ப் பொருண்மையியல்
ஆய்வுக்கு உறுதுணையாவன. மேலும் தொல்காப்பியரின் மொழிநடையில் பல சொற்களுக்கு அவர்
விளக்கமளித்துள்ளார்.
இவையும்
பொருண்மை / அகராதியியல் ஆய்வுகளுக்குப் பயன்படுவன. இதனால் தொல்காப்பியத்தின்
கருத்து வளமையும் பெருமையும் அறியப்படுகின்றது
பொருளதிகாரப்
பொருண்மை :
தொல்காப்பியத்தின் பொருளதிகாரம்
பழந்தமிழ் இலக்கிய மரபுகளின் வைப்பகமாக
விளங்குகின்றது. இது இலக்கியப் பாடுபொருள் அடிப்படையிலான இலக்கிய வகைமை குறித்த திறனாய்வாக
அமைந்துள்ளது. அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல்
முதலிய இயல்கள் இலக்கியப் பாடுபொருள்/ வகைமை குறித்தும் , மெய்ப்பாட்டியல் இலக்கிய
உணர்ச்சிகளையும் உவமவியல் இலக்கிய அழகியலையும் செய்யுளியல் இலக்கிய வடிவம்,
இலக்கிய உத்திகள் ஆகியன பற்றியும் மரபியல் இலக்கிய மரபுகள்/ சொல்லாட்சி வரையறை
குறித்தும் விரித்துரைத்துள்ளன.
தொல்காப்பியர் மூடு என்பது ஆட்டின் பெண்பாற் பெயர் (மரபியல், நூ.63) என்று
குறித்துள்ளார். இச் சொல் இன்றும் கொங்கு வட்டாரத்தில் பயன்படுத்தப்படுகிறது. எனவே
(கொங்கு) வட்டாரச் சொல்லகராதி ஆக்கத்திற்கும் மரபியல் துணையாவதை அறியலாம்.
இவ்வாறான செய்திகள் தற்காலப் பொருண்மையியல் ஆய்வுகளுக்கு வலுவான அடித்தளமாகின்றன.
காம உளவியலைக் குறிக்கோளிய நோக்கான பாடல்சான்ற புலனெறி வழக்கில் பாடிய அகப்
பாடல்கள் தொடர்பான இலக்கியக் கோட்பாடுகளையும், குடிமையியல்/ போரியல் மரபுகளை
விளக்கும் புறப் பாடல்கள் தொடர்பான இலக்கியக் கோட்பாடுகளையும் இவை தொடர்பான
தரவுகளையும் பொருளதிகாரம் ஆய்ந்துரைத்துள்ளது. அகம், புறம், களவு, கற்பு, மெய்ப்பாடு போன்ற கலைச்சொற்களைச் செவ்வனே
புரிந்துகொள்ளவும் விளக்கவும் பொருண்மையியல் துணையாவதோடு, தமிழ் இலக்கியப்
பொருண்மையியல் ஆய்வுக்கு இவையும், மரபியலில் கூறப்பட்டுள்ள இளமை /ஆண் /பெண்
பெயர்களும் செய்யுளியலில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளும் மற்றும் உரைகளில்
காணப்படும் விளக்கங்களும் உறுதுணையாகின்றன. மேலும் கலைச்சொல் அகராதி
உருவாக்கத்திற்கும் கலைக்களஞ்சிய ஆக்கத்திற்கும் உசாஅத்துணையாகின்றன. சான்றாக, ’ முதல் எனப்படுவது நிலம் பொழுது’ (அகத். நூ.4) “பெருமையும் உரனும்
ஆடூஉ மேன” (களவியல்,
நூ.7 ), ’தோழி தானே செவிலியது மகளே’ (களவியல், நூ.34 ), ’செவியுறை தானே
பொங்குதலின்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத்தன்றே’ ( செய்யுளியல், நூ.114
) முதலிய கருத்துவிளக்க
நூற்பாக்களையும் முந்நீர், நாடக/உலகியல் வழக்கு, கிழவன், கிழத்தி, மெய்ப்பாடு,
மதியுடம்படுதல், பண்ணை, சின்மை போன்ற
இலக்கணக் கலைச்சொற்களையும் சுட்டலாம். பாடல்களில் பயின்றுவரும் உள்ளுறை, இறைச்சி
முதலிய குறிப்புப் பொருள் பற்றிய செய்திகள் இலக்கியப் பொருண்மை ஆய்வுக்கு
உறுதுணையாகின்றன. தமிழ் இலக்கியக் கலைக்களஞ்சியம் உருவாக்குவோர்க்குத்
தொல்காப்பியமும் அதன் உரைகளும் கருத்தளித்துவருகின்றன. அகத்திணை ஏழாக இருக்கும்போது
புறத்திணையும் ஏழாகவேண்டும் என்பதை அகக்கை ஐந்து என்றால் புறக்கையும் ஐந்தாவதான
காரணகாரிய இயைபுடன் உரைகள் எடுத்துரைப்பதும், ‘மக்கள் நுதலிய அகனைந்திணையும்
சுட்டியொருவர் பெயர்கொளப்பெறாஅர்’ (அகத். நூ.54), ‘ காமம் சாலா
இளமையோள்வயின் ஏமம்சாலா இடும்பையெய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே’ (அகத். நூ.50) ஆகிய
கொள்கை வகுத்தளிக்கும் நூற்பாக்களும் இலக்கியக் கொள்கை விளக்கத்திற்கும் கலைக்களஞ்சிய உருவாக்கப் பணிக்கும்
துணைபுரிவனவாகும். அகப் பாடல்களில் பயின்றுவரும் முதல், கரு, உரி என்னும் இயற்கை /
உளவியல் சூழல் விளக்கப் பாடல்கள் இலக்கியப் பொருண்மை ஆய்வுக்கு வழிகாட்டுகின்றன. மகிழ்வித்து
மகிழ்; அறநெறிப் போரியல்; மக்களை மையமிட்ட அரசியல்; இயற்கையோடு இயைந்த இனிய
வாழ்க்கை போன்ற இலக்கிய விழுமியங்கள்/ நிலைபேறுடைய மானிட மதிப்புகள் பழந்தமிழ்
இலக்கிய அடிக்கருத்துகளாக நின்று இன்றும் தொடர்வதை இதனால் அறியமுடிகின்றது. இவ்வாறாகத்
தொல்காப்பியப் பெருங்கடல் வாடாமலராக நிலைத்துநின்று காலத் தகைமையுடன் தற்கால மொழி,
இலக்கியப் பொருண்மை மற்றும்
அகராதி / கலைக்களஞ்சிய ஆக்கப் பணிகளுக்கு உறுதுணையாவதை அறிந்தும் பயன்கொண்டும் தமிழாய்வுலகம்
மேலும் பயனுற வேண்டும்.
நூற்குறிப்புகள்
கொழந்தசாமி, ப. திருக்குறள் உரைகள் காட்டும் பொருள்நெறி,
சென்னை:பாரதி புத்தகாலயம், 2002.
சண்முகம்,செ.வை. சொல்லிலக்கணக்
கோட்பாடு- முதல் தொகுதி,
அண்ணாமலை
நகர்: அனைத்திந்திய மொழியியற்கழகம். 1989.
தமிழண்ணல் (உரை.), தொல்காப்பியம், மதுரை:
மீனாட்சி புத்தக நிலையம், 2008.
ஜெயதேவன்,வ., தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு,
சென்னை: ஐந்திணைப்
பதிப்பகம், 1985.
* * * * * * * * * * *
Comments
Post a Comment