பழந் தமிழில் ’நுனி’- கருத்தாய்வு

ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

உயர்தனிச் செம்மொழியான தமிழ் நீண்டு பரந்த வரலாற்றைக் கொண்டது. ஆயினும் பழந் தமிழ் வழக்காற்றை இன்றும் புரிந்துகொள்கின்ற வாய்ப்பும் உள்ளது. அந் நிலையில்’நுனி’ என்னும் மரத்தின் முனைப் பகுதியாக அமைகின்ற உறுப்பைக் குறிக்கின்ற ஒன்றன்பால் சினைப் பெயர் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் இயல்கின்ற பான்மையை எடுத்துரைப்பதாக இக் கட்டுரை அமைகின்றது. இதனால் பழந் தமிழ்ச் சொல்லாட்சியையும் அதன் பொருண்மைத் தொடர்ச்சியையும் அறியலாம்.

நுனி: சொற்பொருள் :

            முதல், சினை என்று ஓர் உலகப் பொருள் இரண்டு நிலைகளில் வகைப்படுத்திப் பெயரிடப்படுகின்றது.  முதல் சினை உறவைத் தொல்காப்பியம் வேற்றுமை இலக்கணத்தில் விளக்குகின்றது. பொருண்மையியலிலும் இது ஆயப்படுகின்றது. சான்றாக,

                                 மரம்- முதல் ; கிளை- சினை

                                கிளை- முதல் ; இலை –சினை

என்னும் பதிவுகளைக் கருதலாம். தொல்காப்பியப் பிறப்பியலில் நுனி என்பது,

                        நாநுனி பரந்து…..(நூற்பா, 93)

என்று நாக்கின் இறுதிமுனையைக் குறிப்பதாக இயல்கின்றது. மேலும்,

                      நா விளிம்பு வீங்கி …..(நூற்பா, 96)

என்னும் நூற்பாவில் விளிம்பு என்னும் சொல் நுனி என்பதன் இணைச் சொல்லாக ஆளப்படுகின்றது.  அடுத்து, மரபியலின் இறுதி நூற்பாவில் செயப்படுபொருள் குன்றா வினையாக,

                        நுனித்தகு புலவர் ………

என்று , ஆழ்ந்து நோக்குகின்ற  என்னும் பெயரடையின் அடிச்சொல்லாக நுனி என்னும் வினை அமைகின்றது. இதனால் பெயராகவும் வினையாகவும் இச் சொல் இயல்வது தெளிவு.

            இந்தப் பின்னணியில் சங்க இலக்கியங்களை அணுகும்போது, பரிபாடலின் 19ஆம் பாடலின் 67ஆம் அடியில்,

                        நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்

என்று மரக் கிளையின் இறுதி முனைப் பதியைச் சுட்டுகின்ற பெயராக இயல்கின்றது. திருக்குறளில்,

                        நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
                        உயிர்க்கிறுதி ஆகி விடும் (குறள் 476)

என்று, வலியறிதல் அதிகாரத்தில், வலிமையறிந்து செயல்படுக என்று  எச்சரிக்கை விடுக்க நுனி என்னும் பெயர்ச்சொல், மரக் கிளையின் இறுதி முனையைச் சுட்டுவதாக, அறமுரைக்கக் கருத்துவிளக்கக் காட்சிக் குறியாக ஆளப்பட்டுள்ளது.

            இவ்வாறு தொல்காப்பியத்திலும், பரிபாடலிலும் திருக்குறளிலும் பெயராக ஆளப்பட்டுள்ள இச் சொல் வினையாகவும் பயில்வதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். நுனி என்பது இன்றளவும் வழக்கில் உள்ள இயற்சொல்லாக அமைகின்றது. இலக்கியத்தின் ஒவ்வொரு சொல்லையும் இவ்வாறு வரலாற்று நோக்கில் அறிந்து தெளியலாம்.

                                            பயன்பட்டவை

ஜெயதேவன், வ.(2004), தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.

 (http://tamilconcordance.in

****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு