ஆற்றுத் துறை அம்பியும் அறத்துறை அம்பியும்
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
இலக்கியங்கள் நிலைபேறுடைய மானிட மதிப்புகளை விண்டுரைக்கின்றன.
இதனால் பண்பாட்டுச் சீர்மை வெளிப்படுவதுடன்
மானுட மேம்பாடும் வாய்ப்பாகின்றது ; வாழ்கின்ற மக்களுக்கு வாழ்ந்தோர் பாடமாக அமைவதால்
அறநெறி அறாமல் நிலைத்துத் தொடர்கின்றது. விழுமியங்களை விளம்ப எளிய உவமைகளைப் பெய்து
புலவோர் கருத்துப் புலப்பாட்டை எளிமையாக்குகின்றனர். அம் முறையில் பாடாண் திணை இயன்மொழித் துறையில் அமைந்த வேங்கட நாட்டுக் கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடிய புறநானூற்றின் 381ஆம் பாடலின்,
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறுய்க்கும்
அறத்துறை
அம்பியின் மான மறப்பின்று
இருங் கோள் ஈராப் பூட்கை
கரும்பனூரன் காதல் மகனே. ( அடிகள் 23-26)
என்னும் அடிகள் உன்னத்தக்கன. ஆற்றுத்துறையைக் கடந்து இக் கரையிலிருந்து அக் கரைக்குப்
பாதுகாப்பாகச் செல்ல வாய்ப்பாகின்ற படகு [ அம்பி ] போல , பாவலரின் வறுமையை விலக்கி
வளமைக்கு வழிவகுக்கின்ற ஈகையை உறுதியுடன் இவ் வள்ளல் ஆற்றுமாற்றைப் பாவலர் பாராட்டுகின்றார்.
இங்கு ஆற்றைக் கடக்க உதவுகின்ற படகாக வள்ளல் உவமிக்கப்பட்டு, அவனது வண்மை போற்றப்படுகின்றது.
அறம் செய்வதில் வள்ளலுக்குள்ள உறுதிப்பாடு ஈற்றயலடியால் எடுத்துரைக்கப்படுகின்றது.
இத்தகைய வள்ளோரால் அறம் நிலைபெற்று அனைவருக்கும் நல்வாழ்க்கை வாய்ப்பாகின்றது; இனிய
உவமையால் இலக்கிய முருகியலும் இயல்கின்றது.
நன்றி : இணையத் தரவுகள் ********
Comments
Post a Comment