இக்காலத் தமிழில் எதிர்மறை எச்சம்

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்பொருள் வரலாற்றில் காலந்தோறும் தேவைக்கேற்பப் புதியன புகுதலும் பழையன கழிதலுமான மாற்றங்கள் நேர்கின்றன. இதை அறிவதன் மூலம் மொழி இயங்கியலைத் தெளிந்து மொழித்திறன் செறிக்கலாம். இந் நிலையில் தொல்காப்பியர் இலக்கணப்படுத்திய எதிர்மறை எச்சம் இக்காலத் தமிழில் இயலுமாற்றைச் சுட்டுவதாக இக் குறிப்புரை இயல்கின்றது.

எதிர்மறை எச்சம் : சொல் வகையில் ஒன்று எச்சம். அதாவது ஒரு சொல் தனித்துநின்று முழுக் கருத்தையும் சுட்டாமல் இன்னொரு சொல்லின் துணையால் கருத்தை நிறைவிப்பது. காட்டாக,  வந்த என்னும் இறந்தகாலப் பெயரெச்சம் தனித்துக் கருத்தை நிறைவிக்காமல், அடுத்து வருகின்ற பெயரோடு இணைந்து வந்த செய்தி என்று நிறைக்கும். இது தொடரியல் அமைப்புச் சார்ந்ததாகும். வேறொரு வகையான எச்சங்கள் இயல்வதைத் தொல்காப்பியர் எச்சவியலில் [நூற்பா 24 ] இலக்கணப்படுத் தியுள்ளார்.  பத்து வகையான எச்சங்களுள் முதல் ஏழும் அண்மையுறுப்பால் பொருள் தெளிவிப்பன; இறுதி மூன்றான சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் ஆகியன செய்யுளுக்குரியன; இவை தொடர்ப் பொருண்மை அடிப்படையில் இயல்கின்றன. இடையியலின் 07 & 08 ஆகிய நூற்பாக்களில் உம், ஓ ஆகிய இடைச்சொற்கள் எதிர்மறைப் பொருளில் பயில்வதைத் தொல்காப்பியம் குறிப்பது இவண் நோக்கற்பாலது. வந்தாலும் வருவேன்; யானோ அரசன்? என்னும்போது எதிர்மறைப் பொருள் தொனிக்கின்றது. இவற்றுள் வந்தாலும் வருவேன் என்னும் உம்மையெச்சம் இக்காலத்திலும் மாற்றமின்றி வழங்கப்படுகின்றது. ஆயினும் யானோ? என்னும் வழக்கு மாறி யானா? என்று இயல்கின்றது. அதாவது ஓ இடைச்சொல்லுக்குப் பதிலாக ஆ என்னும் வினாப் பொருள் இடைச்சொல் வினாப் பொருளிலும் [ வேண்டுமா? ], எதிர்மறைக் கருத்திலும் [ என்னையா கண்டாய்? ] இக்காலத் தமிழில் பயில்கின்றது. பழங்கால இலக்கியங்களைக் கற்பிக்கும்போது இத்தகைய மாற்றத்தைச் சுட்டி விளக்கினால் கருத்துத் தெளிவு வாய்க்கும்.

 நன்றி : இணையத் தரவுகள்                  ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு