உப் பக்கம் – சுட்டுப் பொருண்மை நீட்சி

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            தொடரியல் நோக்கில்  இ, உ, அ ஆகிய மூன்று குற்றுயிர்களும் சுட்டு எழுத்துகள் எனப்படுகின்றன. இவை அக / புறச் சுட்டுகளாக இயல்கின்றன. ஒருவரை / ஒன்றைச் சுட்டிக்காட்டி விளக்க இவை பயன்படுகின்றன. இவற்றுள் ஒன்று மற்ற இரண்டுக்கும் எதிர்ப் பொருளில் இயலும். இவ்வாறு சுட்டும்போது சுட்டுவார்க்கும் சுட்டப்படுகின்ற பொருளுக்கும் இடையில் உள்ள இட அமைவை/ தூரத்தைக் கருதிச் சுட்டெழுத்துகள்,

                அண்மை = அருகிலுள்ளஇக் கட்டடம்

                 நடுமை / பின்புறம்   = சற்றுத் தொலைவிலுள்ளஉவ் இடம் ; பின்னால்- உப் பக்கம்

                சேய்மை = தூரத்திலுள்ள- அம் மரம்

 

என்று  அமைந்துள்ளன. இம் மூன்றுள் சிறப்புப் பொருண்மை நீட்சி கொண்டதாகும். இதைக் கீழ்வருகின்ற இலக்கிய வழக்குகளால் தெளியலாம்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் ( 620 )

 

என்னும் குறட்பாவில் பின்புறம் / புறமுதுகு என்னும் கருத்தில், மேலும் பொருள் நீட்சி பெற்று மரபுத்தொடராக ‘தோற்கடிப்பர் ‘ என்னும் கருத்தில் இயல்கின்றது. இது வள்ளுவ நடைச் சீர்மையாகும். அடுத்து, நான்மணிக்கடிகை,

கற்பக் கழிமடம் அஃகும்; மடம் அஃகப்
புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் ; கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் ; அந்நெறி
இப் பால் உலகின் இசைநிறீஇ உப் பால்
உயர்ந்த உலகம் புகும் [பா, 27]

 

என்னும் பாடலில்    அண்மைச் சுட்டாக, பொருள் நீட்சியால் இவ் உலக வாழ்க்கையையும், சேய்மைச் சுட்டாக, பொருள் நீட்சியுற்று மேலுலக முத்தியையும் தொன்மப் பின்னணியில் சுட்டுகின்றது. இது சொற்பொருள் வரலாற்றுச் சிறப்பாகும். ஐந்தடிப் பஃறொடை வெண்பாவாலான இந்த நான்மணிக்கடிகைப் பாடலில் காரணகாரிய முறையில் அறக் கருத்துகள் அடுக்கப்பட்டுள்ளதால் இதில் காரணமாலையணி அமைந்துள்ளதும் அறியத்தக்கது.

            இங்ஙனம்  என்னும் சுட்டெழுத்து இடைமை, பின் / மேல் ஆகிய பொருளில் இலக்கியங்களில் பயில்கின்றது. இப் பொருள்நீட்சியை அறிந்தால் இலக்கியத்தைச் செவ்வனே உணர்ந்து சிறக்கலாம்.

 நன்றி : இணையத் தரவுகள்                    *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு