பழந்தமிழில்ஊர்’ : பொருட்பன்மை

பேராசிரியர் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

உயர்தனிச் செம்மொழியான தமிழ் நீண்டு பரந்த வரலாற்றைக் கொண்டது. ஆயினும் பழந்தமிழ் வழக்காற்றை இன்றும் புரிந்துகொள்கின்ற வாய்ப்பும் உள்ளது. அந் நிலையில் ஊர் என்னும் மக்கள் வாழிடத்தைக் குறிக்கின்ற ஒன்றன்பால் இடப்பெயர் இன்று வரை பெயராகவும் வினையாகவும் பொருட்பன்மையில் இயல்வதை எடுத்துரைப்பதாக இக் கட்டுரை அமைகின்றது. இதனால் பழந் தமிழ்ச் சொல்லாட்சியையும் அதன் பொருண்மைத் தொடர்ச்சியையும் அறியலாம்.

ஊர் - பொருண்மை :      மக்கள் சேர்ந்து வாழ்கின்ற குடியிருப்பு, தெரு ஆகியவற்றின் தொகுதியை ஊர், சேரி என்னும்  ஒன்றன்பால் இடப் பெயர்களால்  குறிக்கின்றோம். அதோடு இது ஏறிச் செல்லல், படர்தல், பொருந்தல் என்னும் செயப்படுபொருள்குன்றா/ குன்றிய வினையாகவும் தொன்றுதொட்டுப் பயில்கின்றது.

01.பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

             ” ஊரும் பேரும்….” ( நூற்பா 1048 அடி 11 )

என்னும் அடியில் இடப் பெயராக ஊர் பயில்கின்றது. அடுத்து,

            ” ஊர்ந்தனர் இயங்கலும் …. “( நூற்பா 1057 அடி 02 )

என்னும் அடியில் செலுத்தல் என்னும் கருத்திலும், மேலும்

”குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே ( நூற்பா 36 அடி 02 )

என்னும் அடியில் பொருந்தல் என்னும் கருத்திலும் செயப்படுபொருள்குன்றா வினையாக இயல்கின்றது.

02. மரபைப் பேணுகின்ற வள்ளுவம் இவ்வாறே ஊர் எனும் சொல்லைப் பெயராகவும் வினையாகவும் ஆண்டுள்ளது.

             யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
             சாந்துணையுங் கல்லாத வாறு ( 397 )

என்னும் குறட்பாவில் இடப் பெயராக ஊர் பயில்கின்றது. அடுத்து செயப்படுபொருள்குன்றிய வினையாக,

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசு மாய்ந்து கெடும் (601)

என்று படிதல் என்கின்ற கருத்திலும்,

            மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்  … (1136)

என்று ஏறிச்செல்லல் என்கின்ற கருத்திலும்,

       …..என் மேனி பசப்புர்வது (1185 )

என்னும் குறட்பாவில் பரவுதல் என்னும் கருத்திலும் ஊர் பயில்கின்றது.

            மேற்கூறியவாறு பெயராகவும் செயப்படுபொருள்குன்றிய வினையாகவும் ஊர் பயில்வதை அறிந்து திருக்குறளை அணுகின் தெளிவு வாய்க்கும்; விழுமியம் புலப்படும்; மானுடம் வெல்லும்.

03. இதனால் தமிழின் சொற்களஞ்சியப் பெருக்கும், ஒரு சொல் பொருட்பன்மையில்  /பல கருத்தில் இயல்வதையும் தெளியலாம்.

நன்றி : இணையத் தரவுகள்           *********

 

 

Comments