கசடு- வள்ளுவ ஆட்சிப் பொருண்மை 

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் 

                உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்பொருண்மைக் களம் விரிவானது; ஆராயத்தக்கது. இரட்டை வழக்காலும் கால வளர்ச்சியாலும் அணுகுமுறையாலும் ஒரு சொல்லின் பொருளில் விரிவும் மாறுபாடும் தோன்றுவதுண்டு. அத்தகைய பல்பொருளதான பழந்தமிழ் ஒன்றன்பால்ப் பெயர்ச்சொற்களுள் கசடு என்பதும் ஒன்றாகும்.

மு. சண்முகனாரின் தமிழ் அகராதி:

கசடு=குற்றம் ; அழுக்கு ; மாசு ; தழும்பு ; ஐயம் திரிபுகளாகிய குற்றங்கள் ; வடு ; அடிமண்டி ; குறைவு .(https://www.tamilvu.org/ta/library-ldttam-html-ldttamws-159468)

 ஆகிய பொருளைச் சுட்டுகின்றது.               

சங்க காலத்தில், அழுக்கு, குற்றம் என்னும் கருத்தில், 

        கைக் கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொருநராற்றுப்படை .அடி,70 = அழுக்கு 
                    களைக என அறியாக் கசடு இல் நெஞ்சத்து – பதிற்றுப்பத்து, பா44 அடி06 =  குற்றம்  
               ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி – புறநானூறூ, பா 214 அடி02= அழுக்கு 
என்னுமாறு கசடு என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. புதுமை படைத்தலோடு மரபையும் போற்றுகின்ற திருக்குறள் கசடு என்னும் சொல்லை,

கற்க கசடுறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக ( 391 ) = ஐயம், திரிபு 

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடுறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து (717 ) = வழு / குற்றம் 

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற

வல்லதூஉம் ஐயம் தரும் ( 845 )  = = வழு / குற்றம்

 

என்னும் மூன்று குறட்பாக்களில் ஐயம், திரிபு, வழு ஆகிய கருத்தில் ஆண்டுள்ளார். இக் காலத் தமிழில் அடிமண்டி என்னும் கருத்தி வழங்கப்படுகின்றது. மேலும் நுணுகி வள்ளுவம் முழுவதையும் ஒப்பிட்டுச் சூழல் கருதிப் பயன் நோக்கில் கருதும்போது 391ஆம் குறளில்,

                அறியாமை முதலியவற்றைப் போக்கி, மெய்ப்பொருள் காண, வளமாக்க

              உதவுமாறு கல்வியும் கற்றல் செயல்பாடுகளும் இயலலாம்

என்னும் மானுட மேம்பாட்டுக் கொள்கையை வள்ளுவம் உணர்த்துவதையும்  அறியலாம். சொன்னதிலிருந்து சொல்ல விழைவதையும் அறியின் இலக்கியப் பயன் பல்கும் ; வள்ளுவத்தில் இதற்கான வாய்ப்புகள் மிக்குள்ளன.

                நன்றி : இணையத் தரவுகள்                             ********

 
 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு

தமிழியலாய்வு