எள் வேளாண்மை- ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்கள்

                   புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

தமிழகம் வேளாண் பெருநாடு. இங்கு நன்செய், புன்செய் வளநிலங்களில் பல்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றுள் எள் பழங்காலத்திலிருந்து பரவலாகப் பயிரிடப்படுகின்ற புன்செய்ப் பயிராகும். ஏரோட்டி எள் விதைத்துப் பாத்தி கட்டியபின் மழையால் / நீர் பாய்ச்சி வளர்ப்பதாக எள் விளைவிக்கப்படுகின்றது. முற்றிய  செடியைப் பிடுங்கி உலர்த்தித் தட்டி எள் எடுத்துத் தூய்மையாக்கி, செக்கில் ஆட்டி எண்ணெய் பிழியப்படும். எள்ளோடு கருப்பட்டி, சர்க்கரை சேர்த்து ஆட்டுவதும் உண்டு. இதன் பிண்ணாக்கு மிருகங்களுக்கு இணை உணவாகவும் , நிலத்திற்கு உரமாகவும் பயன்படுகின்றது. பயனற்ற/ திறனற்ற  மனிதனைப்  புண்ணாக்கு என்று நகையாடுவதுமுண்டு.

எள் விதைத்து இரண்டு மாதங்கள் ஆனதும் செடிகளில் பூப்பூத்து இளங்காய்களாக வளரும். இதனுள் விதைகள் அடுக்காக முதிரும். அப்போது எள் செடியைக் கையால் பிடித்தால், ஒரு கைப்பிடி உயரத்தில் குறைந்தது ஏழு காய்கள் இருக்கவேண்டும் என்று காராளர் கூறுவர். இது இன்றும் உழவோரிடம் உள்ள மரபாகும். இதை மலைபடுகடாமில் கபிலர், 

கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்

நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் ( அடிகள் 105-106 )


என்று எடுத்துரைக்கின்றார். அதாவது எள் செடியின் அமைப்பையும்இளங்காய் முற்றிக் காயாகி எண்ணெய் [ எள்+நெய்]  தருவதையும் படம்பிடிக்கின்றார்.

இவ்வாறு மக்களை மையமிட்டு, மக்கள் இயக்கம் சார்ந்து இயற்கையைப் படம்பிடிப்பதால் இலக்கியங்கள் விரும்பப்பட்டு நிலைபெறுவதுடன், மரபும் பேணப்படுகின்றது. மனோன்மணீயம் சுந்தரனார் பாராட்டுமாறு பத்துப்பாட்டு இலக்கியங்களில் வெறும் கற்பனை இல்லை; மக்களின் இயங்கியலை அவை நுட்பமாக இலக்கியமாக்கியுள்ளன. 

                            நன்றி: இணையத் தரவுகள்                    ***

Comments