பெரியசாமித் தூரனின் இளைஞர் ஊக்கக் கருத்துகள்
பெரியசாமித் தூரனின் இளைஞர் ஊக்கக் கருத்துகள்
பன்முகப்
பரிமாணத்தில் தனது இலக்கிய நெடும்பயணத்தை மேற்கொண்ட பெரியசாமித் தூரன்
அடிப்படையில் பள்ளித் தலைமையாசிரியராக இருந்தவர். எனவே அவருக்கு இளைஞர் மீது
இயல்பாகவே பற்றும் அவர்களது முன்னேற்றத்திலும் ஆளுமை வளர்ச்சியிலும் ஒழுக்க
மேம்பாட்டிலும் அக்கறையும் இருந்தது. அதோடு பக்திப் பாவலராகவும் முருகனின்
அடியவனாகவும் கதைக் கலைஞராகவும் காந்தியாவதியாகவும் கொள்கை மறவராகவும்
திகழ்ந்ததால், தூரனின் படைப்புகளில் இளைஞர் நலன் இயம்பும் கருத்துகள் அழுத்தமாக
இடம்பெற்றுள்ளன.
இளமை
இளமைப்
பருவம் என்பது சிந்தனையிலும் செயலிலும் ஒருவன் வளரவேண்டும் என்பதை உணர்த்தும்
பருவமாகும். தன் குறைகளை உணர்ந்து சீர்பெற்று
வாழ முற்படும் பருவம் இளமைப் பருவமாகும். இது புதியனவற்றை, புதிய தீர்மானங்களை
எடுத்துச் செயல்படுத்த வாய்ப்புத் தரும் பருவமாகும். வருங்கால வாழ்க்கை குறித்துச்
சிந்தித்து நேர்மையுடன் செயல்படத் தூண்டும் பருவம், உழைப்புக்கு அர்ப்பணிக்க
வேண்டிய பருவம். இதனால் ஒருவனின் வாழ்க்கையை அமைக்கும்
அடித்தளமாக இளமைப் பருவம் அமைவதை உணரலாம். ஆனால் இளங்கன்று பயம் அறியாது என்னும்
முதுமொழிக்கேற்ப, இளைஞர்கள் துணிச்சலான மற்றும் மாயவித்தையான செயல்பாடுகளில்
அவ்வப்போது ஈடுபடுவர். சில நேரங்களில் இது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக
அமைந்துவிடலாம். அதனால் இளைஞர்களுக்கு அறிவுறுத்தும், ஆலோசனை கூறும்,
நல்வழிப்படுத்தும் கருத்துகள் உலக இலக்கியங்களிலும் சமய மறைகளிலும் நாட்டுப்புற
இலக்கியங்களிலும் மக்களின் பேச்சு வழக்கிலும் பரவலாகக் காணப்படுகின்றன. தூரனும்
தனது படைப்புகளில் இளைஞர் நலன் இயம்பும் கருத்துகளை
எடுத்துரைத்துள்ளார். இதனால் எதிர்கால வளர்ச்சியில் தூரனுக்கிருந்த
அக்கறை புலனாகும். இளந்தமிழா என்னும் விளிப்பெயரால் கவிதை நூலைப் படைத்திருக்கும்
தூரன், அதில் இளைஞர் முன்னேற்றக் கருத்துக்களை இயல்பாக, அனுபவப் பிழிவாகப்
பதித்துள்ளார். இந் நூலின் முகவுரையில் ரா.பி.சேதுப்பிள்ளை ‘கவிச்சுவை அனைத்தும்
இனிதமைந்த இந் நூலை ஆசிரியர் இளந்தமிழ் உலகத்துக்கு உரிமையாக்கியுள்ளார். தன்
பெருமையும் பழமையும் அறியாது, ஊக்கமிழந்து உறக்கத்தில் ஆழந்துகிடக்கும்
இளந்தமிழனைத் தட்டியெழுப்புகின்ற தகைசான்ற நல்லுரை பகர்தலே இந் நூலின் தலையாய
நோக்கமாகும்’
என்று குறிப்பிட்டுள்ளார். நூலின் முதற் கவிதையில், தமிழகத்தின் தமிழ்ப்
பண்பாட்டின் பழம்பெருமையைக் கூறி, அதைப் போல இன்றைய இளைஞர்களும் வரலாறு
படைக்கவேண்டும் என்று ஊக்கமூட்டுகிறார். இந்த நூலிலுள்ள கவிதைகள் பல
இதழ்களில் வெளியானவை என்பதால் தொடர்ந்து
இளைஞர் நலச் சிந்தனைகளை ஆசிரியர் எழுதிவந்தார் என்பது பாராட்டத்தக்கது.
இளந்தமிழா
எழுந்திரடா!
இன்பமெலாம்
கொணர்ந்திடுவாய்!
வளம்பெருக்கித் தமிழ்நாட்டை
வானாடாய்ச்
செய்திடுவாய் (ப.9)
என்று கூவி அழைத்து, வியங்கொளக் கூறி, சமூகச்
சீர்கேடுகளைத் தகர்த்தெறிய அழைக்கும்போது,
வாழ்க்கையிலே
சமத்துவமும்
மனத்தினிலே
உயர்நோக்கும்
மாட்சிமிகும்
அறநெறியும்
ஆட்சிசெயப்
போரிடுவாய் (ப.9)
என்று முழுமனிதனாக, பண்பட்ட இளைஞனாக, வீர மறவனாக,
விழிப்புணர்ச்சி பெற்றவனாக, செயல்
வீரனாகச் சிறந்தோங்க இளைஞர்களைத் தட்டியெழுப்புகிறார். இத்தகைய இளைஞர்
மேம்பாட்டுச் சிந்தனை இந்திய இளைஞர்களுக்கு என்றைக்கும் தேவை. இந்திய அரசின்
இளைஞர் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘இளைஞர் மேம்பாட்டுக் கொள்கை 2014‘ (National Youth Policy 2014) இத்தகைய ஆற்றல்சார், பண்பாட்டுச் செம்மை மிக்க
இளைஞர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதும், இங்கு எண்ணத்தக்கது. பாரதியார்,
இராமகிருஷ்ணர், விவேகானந்தர், காந்தியடிகள் ஆகியோரைப் போற்றிய தூரன் இத்தகைய திறன்
மேம்பாட்டுக் கவிதைகளை எழுதியமை இயல்பான செயலாகும். மேலும்,
அனைவருக்கும்
பொது உரிமை
அனைவருக்கும்
பொது நீதி
அனைவருக்கும்
பொதுவுடைமை
ஆக்கிடவே
தோள் புடைப்பாய் (ப.10)
என்று பொதுவுடைமை போற்றும் கவிஞராகவும் தூரன்
விளங்கினார். அதோடு இந்தக் கவிதையில், சங்க இலக்கிய வாழ்வியலையும் குறிஞ்சி மணம்,
பாரி கொடை, யாதும் ஊரே முதலிய கருத்துகளையும் நினைவூட்டியுள்ளமை, இவரது பழமை
மீட்சி எண்ணத்தை வெளிப்படுத்தும்.
‘இளந்தமிழா‘
கவிதை நூலிலுள்ள ‘மேலே பற‘ என்னும் தலைப்பிலான கவிதை மனத்தை விளித்துச் சொல்வதாக இருந்தாலும்,
இதிலுள்ள கருத்துகள் இளைஞர்களுக்கான அறவுரையாகவும் கொள்ளத்தக்கது.
அப்பாலுக்கும்
அப்பாலே உயர்ந்து செல்
இன்பமெலாம்
கொண்டு வா
எனக்கு
எனக்கு என்று பேசாதே
எல்லாம்
எல்லோருக்கும்...
இன்பமே
எண்ணுவாய், அன்பே எண்ணுவாய் (ப.73)
என்றும்,
விண்ணிலேயுள்ள
அமுதத்தை மண்ணுக்குக் கொண்டுவா
வாழ்க்கையின்
குறுகிய பாதையிலே உழன்று
கீழ்நோக்கி நில்லாதே
உனது
பார்வை மேல் நோக்கியே விரியட்டும் (ப.75)
என்றும் எழுச்சியூட்டும் எண்ணங்களை
எடுத்துரைக்கிறார். இவ்வாறே, ‘செல்லடா‘ என்னும் தலைப்பிலான நாட்டுப்பற்றை
வலியுறுத்தும் கவிதையில்,
நாற்பது கோடியும் நல்லின்பந் துய்த்திட
ஆர்ப்பரித்தே எழுந்து ஐக்கியமாகநீ செல்லடா! (ப.76)
என்று நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நலனையும்
இளைஞர்கள் உள்ளத்தில் நிறுத்தி ஓயாது உழைத்துச் செழிக்க வேண்டும் என்று
வலியுறுத்துகிறார். இத்தகைய ஓயாத உயர் வாழ்வு வாழ்ந்து காட்டிய, தமிழுக்குத்
தகைதால் தகுதிகளைப் பெற்றுதந்த, வள்ளுவம் வகுத்த வாழ்வியலை வாழந்து சிறந்த தூரன்
வாழ்க்கையே ஒரு பாடப் புத்தகம் ஆகும். இளைஞர்கள் தூரனது படைப்புகளின் மூலமாகவும்
அவரது வாழ்வியல் வழியாகவும் அரிய வாழ்க்கை முன்னேற்றக் கருத்துகளைப்
பெற்றுய்யலாம்.
இளந்தமிழா
என்னும் நூலிலுள்ள ‘அறிவு தெளிந்தேன்‘ என்னும் தத்துவம் பொதிந்த வாழ்க்கை
மேம்பாட்டுக் கவிதையில்,
அச்சம்
நீக்கித் தயக்கமும் தள்ளிநீ
ஆண்மையோடு
முயன்றிடும் போதினில்
துச்சமாகும்
எதிர்ப்பும் பகைமையும்
தோழராகப்
பலர்வந்து கூடுவார்
மெச்சி
யுன்றன் பணியினில் சேருவார்
வெற்றி
காணலாம் நிச்சயம், ஆதலால்
கச்சை
கட்டிப் புறப்படுவாய் என்றான்
கலக்கம்
நீங்கி அறிவு தெளிந்ததே (ப.85)
என்று அச்சமற்றுத் துணிவுடன் செயலாற்றிச் சாதிக்க வா என வலிமைகூட்டுகிறார். முயற்சி
திருவினை ஆக்கும் என்னும் வாயுறைக்கேற்ப வாழந்து சிறக்க ஒவ்வோர் இளைஞனும்
உறுதிபூண்டால் உலகம் உயர்ந்தோங்குவதோடு, தனி மனித வாழ்க்கை யும் வளம் பெருகும்.
இத்தகைய வளர்ச்சி மானுட வெற்றிக்கு வாய்ப்பாகும். இவ்வாறே இளந்தமிழா நூலிலுள்ள
‘மானிடா எழுக‘ என்னும் தலைப்பிலான கவிதையில்,
வையகந்
தன்னை வானகம் ஆக்குக
திறமையில்
முதிர்ந்தவன் நீயே! (ப.89)
என்று வேண்டி, நம்பிக்கையூட்டி வழிகாட்டுகிறார்.
இதே நூலிலுள்ள ‘அழைப்பு‘ என்னும் தலைப்பிலான கவிதையில்,
தளையெல்லாம் இன்றே தகர்த்திடு
அரியவும் பெரியவும் புரியவந்தவன் நீ
புதுப்புதுக் கலைகளும் புதுப்புதுப் பொறிகளும்
புதுமையிற் புதுமை செய்
பழமையின் உயர்வையும்
அழகையும் நன்றாய் அறிந்திடு (ப.101)
என்று, பழைய சிறப்புகளை அறிவதோடு, புதுமைகள்
படைக்கவும் தகுதிப்படுத்திக்கொள் என்ற அறிவூட்டுகின்றார். ஒருவனின் வாழ்க்கை
வளத்திற்கும் வெற்றிக்கும், எண்ணும் எழுத்துமான, அறிவியலும் கலைத் துறைகளும்
உதவும். இளைஞர்கள் இவற்றில் கருத்தூன்றித் திறமையை வளர்த்துக் கொண்டால் சீரிய
புத்தாக்க வாழ்வை எளிமையாக அடையலாம். இத்தகைய சாதனை முயற்சிக்குக் கால
மேலாண்மையும் தேவை என்பதை இதே கவிதையில்,
ஞாலமின்புறுவே நன்மைசெய்
காலம் வருமெனக் காத்திருப்பவன் செயான்
இன்றே செய்திட இன்னே செய்திட
இளைஞனே எழுந்து நில் (ப.102)
என, தள்ளிவைக்கும் மனநிலையை விட்டுவிட்டுச்
செயலாற்றிச் சிறந்தோங்க, நன்மை மிகுக்க நல்வழி காட்டுகிறார்.
இதே
நூலிலுள்ள ‘அன்பு வழி‘ என்னும் தலைப்பிலான கவிதையில்,
மக்கள்
எல்லாம் தேவர்களாய்
மாறவொரு
வழியுண்டு
மனம்
படைத்த பெரும்பயனும்
மனிதனுக்கு
வாய்த்திடுமாம்
என்று தொடங்கி, மனத்தின் இயல்பையும்
இயக்கத்தையும் நாம் அறிந்து, மன இயக்கத்தை நேர்வழியில், ஆக்கப்பூர்வச்
சிந்தினையில் செலுத்தினால் மேன்மையடையலாம் என்று மொழிகிறார். உளவியல் நூல்களைக் கற்றுத் தேர்ந்த தூரன்,
மனத்தின் இயல்பை மனவியல் பாங்கில் விளக்கியுள்ளமை பயனுள்ளதாக அமைந்துள்ளது.
நல்ல
நல்ல பாட்டு (1965) என்னும் நூலிலுள்ள ‘சிறிதே பெரிது‘ என்னும் தலைப்பிலான
கவிதையில்,
சின்னச்
சின்ன நல்ல பேச்சால்
பெரிய பெரிய இன்ப மாகும்
சின்னச்
சின்ன உதவி செய்தால்
பெரிய
பெரிய இன்ப மாகும் (ப.11)
என, சிறுதுளி பெருவெள்ளம் என்னும் கருத்தின்
அடிப்படையில், சிறிதே பெரிதாகும் என்று அறிவுரை பகன்றுள்ளார்.
குமரப் பருவம் (19) என்னும் உளவியல் நூலில்,
குமரப்
பருவத்தினருக்கும் பரிவோடு பெற்றோர்களும் மற்றவர்களும் வழிகாட்டுவார்களானால்
உள்ளக் கிளர்ச்சிக் குமுறல்கள் அதிகமாக இரா. குமரப் பருவத்தில் ஏற்படும்
பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குக் குழந்தைப் பருவ இறுதியில் முன்னதாகவே பயிற்சியும்
ஆலோசனைகளும் தருவதும் நல்லது. குமரப்பருவத்தினரின் மனப் போராட்டங்கள் நல்ல
முறையிலே தீர்ந்துவிட்டால் வாழ்க்கையில் நுழைவதற்கு வேண்டிய நம்பிக்கையும்
உற்சாகமும் மிகுகின்றன. இல்லாவிடில் தோல்வி மனப்பான்மையும் சோர்வும் தலைகாட்டத்
தொடங்குகின்றன. (ப.33)
என்று தூரன் குறிப்பிட்டிருப்பதைப் பெற்றோரும் இளைஞர்களும்
புரிந்துகொண்டு செயல்படவேண்டும். குமரப் பருவத்தின் இயல்பை விளக்கும்போது,
குழந்தைப்
பருவமும் குமரப் பருவமும் வாழ்க்கையின் வெற்றிக்கும் இன்பத்திற்கும் மிக
முக்கியமானவை. ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பட்ட அமைப்புள்ள பிறவி. (ப.56) என்று
எழுதியுள்ளார். இந்த நூல் உருவாக்கப்பட்ட 1950களில் தமிழில் இத்தகைய எளிய நூல்கள் அரிதே. ஆங்கிலத்தில்
வெளியான உளவியல் வல்லுநர்களின் பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்தறிந்து, தனது
ஆசிரியப் பணி அனுபவம் மற்றும் பக்தி நெறி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உளவியல்
நூலை ஆசிரியர் படைத்து, இளைஞர் முன்னேற்றத்திற்குப் பாதை அமைத்துள்ளார். இதில்
குமரப் பருவ ஆண்கள், பெண்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் உளவியல் கேள்விகளுக்கு விடையாக
அமையும் பல கருத்துகள் எளிமையாகவும் இளைஞர்கள் விரும்பிப் படிக்கும் வகையிலும்
எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இளைஞர் அறிவு மேம்பாட்டுக்குக் கலைக்களஞ்சியம்
சிறுவர்களின்
அடிப்படைத் தேவை கல்வியறிவு. மாணவர்களின் அன்றாடப் பணிகளை அட்டவணைப்படுத்தி,
காலையில் படிப்பும் பாட்டும், மாலையில் விளையாட்டு என்று பாரதியார்
வகுத்துரைத்தார். படிக்க நூல்கள் தேவை.
பாட நூல்கள், நோக்கு நூல்கள் என்று நூல்களை இரண்டாகப் பகுக்கலாம்.
அகராதிகள், கலைக்களஞ்சியம் போன்றவை நோக்கு நூல்கள். தமிழில் உரைநடை நோக்கு நூல்கள்
இல்லாத காலகட்டத்தில், தூரன் கலைக்களஞ்சியத்தைப் பதிப்பித்ததோடு, மாணவர்களின்
அறிவு மேம்பாட்டிற்கு உதவக்கூடிய, பல்துறைச் செய்திகளைத் தமிழில் குழந்தைகள்
கலைக்களஞ்சியமாகப் பதிப்பித்தார். இதில் மாணவர்களின் அறிவு மேம்பாட்டுக்குரிய
பல்துறைச் செய்திகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. எனவே தூரனின் கலைக்களஞ்சியப்
பணிகள் தமிழக இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு அரிய வாய்ப்பானது பாராட்டிற்குரியது.
கதைகளில் இளைஞர் நலம்
குழந்தை
மனதின் வளமான கற்பனைகளுக்கு உரமூட்டுவது தூரனின் கதைகளில் காணப்படும் பண்பு.
இவற்றில் வரும் கிளி, குருவி ஆகியன சிறுவர்களின் ஆசை மனக் கற்பனைகளை அழகாகத்
தூண்டிவிடுகின்றன. (ப.70)
உயிர்களிடத்தில்
அன்பு வேணும், ஊனம் ஒரு குறையல்ல போன்ற கருத்துகளைக் கதைகளின் வாயிலாக
உணர்த்துகின்றார்.
கதைச்
சுவையோடு நோகாமல் நல்ல பண்புகள் பதிய வைக்கப்படுவது தூரனின் கதை சொல்லும் திறனில்
இன்னொரு பரிமாணமாகும். ‘தம்பியின் திறமை‘ கதையில் இளைஞனின் அறிவுக் கூர்மை வெற்றி
பெற்ற நிகழ்ச்சி எடுத்துரைக்கப்படுகிறது. தீமையை எதிர்த்துப் போராட மதிநுட்பத்தைப்
பயன்படுத்தும் சிறுவர்களைக் குறித்து ‘மந்திரத் தூரிகை‘, ‘மூச்சி‘ ஆகிய கதைகள்
பேசுகின்றன. ‘பொய் சொல்லி ராஜா‘ என்ற
கதையின் உண்மை பேசுபவன் பெறும் உயர்வு எடுத்துரைக்கப்படுகிறது. ஒற்றுமையால்
கிடைக்கும் நற்பயனை ‘மஞ்சள் முட்டை‘ கதை சித்திரித்துக் காட்டுகிறது. நகரங்களைக்
காட்டிலும் கிராமங்கள் தாழ்ந்தவை என்ற கருத்தை மாற்றி நல்லுணர்வு பெற்ற சிறுவனின்
கதையாக ‘யாரடா அவன்‘ அமைகிறது.
திருட்டு
மனப்பான்மையின் இழிவை ‘முத்துவின் முதல் திருட்டு‘ விளக்குகின்றது. உழைப்பின்
உயர்வை ‘ஓலைக்கிளி‘ எடுத்துரைக்கிறது. மிகமிக முக்கியமான தாய்மொழிப் பற்றைத்
‘தாய்மொழி பேசாத நாய்க்குட்டி‘ கதையின் வாயிலாக வற்புறுத்துகின்றார். தனக்கே உரிய
குரைப்பை மறந்த நாய்க்குட்டி வாத்துப் போலவும், எருமைக்கன்று போலவும் பேச முயன்று
அடிபட்டு அவமானப்படுகிறது. கடைசியில் தன் மொழியே மதிப்பைத் தரும் என்பதை உணர்ந்து
கொள்கிறது.
கதைகளின்
வாயிலாக அறிவியலைச் சொல்லுகிற முயற்சியையும், தூரன் மேற்கொண்டதற்கான அடையாளத்தை,
‘அற்புதச் செடிகள்‘ என்ற கதை உணர்த்துகிறது. எண்ணெயை முதன்முதலாக விளக்கு எரிக்கப்
பயன்படுத்தி செய்தியையும், பருத்தியை ஆடையாக்க அறிந்து கொண்ட செய்தியையும் கற்பனை
கலந்து தருகின்றார்.
தூரனின்
கதையுலகில் சிறுவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் துணிவுக்கும் செயல்திறனுக்கும்
தூண்டுதல்கள் அமைந்துள்ளன. இளைஞர்களின் தாழ்வு மனப்பான்மை தவிர்க்கப்பட்டுத்
தன்னம்பிக்கை தழைக்க வகை செய்யப்பட்டுள்ளது. (ப.72)
சாகித்திய
அக்காதெமிக்காக பெரியாசமித் தூரனின் வாழ்க்கை மற்றும் இலக்கியப் பங்களிப்பை
விளக்கி நூல் படைத்த சிற்பி பாலசுப்பிரமணியம், தூரன் படைத்த கதை மற்றும்
புதினங்களில் காணப்படும் இளைஞர் மேம்பாட்டுக் கருத்துகளை விரிவாக
எடுத்துரைத்துள்ளார். அத்தகைய திறனுரைகளுள் சில வருமாறு:
இளவயதுப்
பிள்ளைகளோடு ஆசிரியராகத் தன்னை இணைத்துக்கொண்ட தூரன், கதை சொல்லி மகிழ்விப்பது
வழக்கம் என்று அவரது மாணவர்கள் பாராட்டியுள்ளனர். (ப.68)
அரும்பு
வயதில் குழந்தைகளின் மனதைப் பண்படுத்திப் பக்குவம் செய்வது அவசியம் என்பதைத்
தெளிவாகத் தூரன் உணர்ந்திருந்தார். (ப.67)
குழந்தை மனதின் வளமான கற்பனைக்கு உரமூட்டுவது தூரனின் கதைகளில் காணப்படும்
பண்பு. இவற்றில் வரும் கிளி, குருவி ஆகியன சிறுவர்களின் ஆசை மனக் கற்பனைகளை
அழகாகத் தூண்டிவிடுகின்றன. (ப.70)
தூரனின் கதையுலகில் சிறுவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் துணிவுக்கும்
செயல்திறனுக்கும் தூண்டுதல் அமைந்துள்ளது. தாழ்வு மனப்பான்மை தவிர்க்கப்பட்டுத்
தன்னம்பிக்கை தழைக்க வகை செய்யப்பட்டுள்ளது.(ப.72)
மேற்கூறிய கருத்துகள் முற்றிலும் பொருந்துமாறே துரனின் சிறுகதைப்
படைப்புகள் அமைந்துள்ளன.
தூரன்
இளைஞர்களுக்குக் கூறிய கருத்துகள் முற்றிலும் ஏற்கத்தக்கனவாக அமைந்துள்ளதோடு உயர்வழி காட்டுவனவாகவும் மிளிர்
கின்றன. திருட்டு மனப்பான்மையின் தவறை உணர்த்துவதாக ‘முத்துவின் முதல் திருட்டு’ என்னும்
கதையமைய, உழைப்பின் மேன்மையை எடுத்துரைப்பதாக ‘ ஓலைக் கிளி’ என்னும் கதை படைக்கப்பட்டுள்ளது. ‘அற்புதச் செடிகள்’ என்ற கதையில் எண்ணெயை விளக்கு எரிக்க
மூலப் பொருளாக்கியதையும், பருத்தியைக் கொண்டு உடை நெய்த செய்தியையும் கதைப்
பாங்கில் எடுத்துரைத்துள்ளார். இது கதைகளின் மூலமாக அறிவியலைச் சொல்ல அவர்
மேற்கொண்ட முயற்சியாகும் என்று பாராட்டுகின்றார் சிற்பி பாலசுப்பிரமணியம்.
(சிற்பி1, ப71)
Comments
Post a Comment