வள்ளுவ உணர்ச்சி மேலாண்மை
திருக்குறள் வகுத்த நகை
முனைவர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி.
மனித வாழ்க்கையின் மாண்பினை
விண்டுரைக்கும் அற இலக்கியமான வள்ளுவம் உணர்ச்சி மேலாண்மையையும் உணரக் கூறியுள்ளது.
மனிதச் செயல்பாடுகளில் ஒன்றான நகையையும் அதன் வெளிப்பாட்டு நெறிகளும் முறைப்படி
அமைய வலியுறுத்துகிறது. இனிமையாக நகைக்க வேண்டும்; பிறரைப் புண்படுத்துமாறு நகைக்க்க்
கூடாது என்றவாறு அறிவுறுத்துகின்றது. இதைத் தொல்காப்பியம் மற்றும் உளவியல்
நோக்கில் அணுகுவதாக இந்தக் கட்டுரை அமைகின்றது.
தொல்காப்பிய மெய்ப்பாடுகள்:
பொருளதிகார
மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் இலக்கிய உணர்ச்சிகளுக்கு மெய்ப்பாடுகள் என்று
பெயரிட்டு நகை முதலியவற்றைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் எள்ளல், இளமை, பேதைமை,
மடன் என்னும் நான்கு காரணங்களால் நகை தோன்றும் என நிலைக்களன் சுட்டியுள்ளார்.
அதாவது பெரும்பானமை பிறரிடமும் சிலபோது தன்னிடமும் தொய்வு காணும்போது நகைக்கும்
எண்ணம் ஏற்படும் என்பது தொல்காப்பியப் பதிவு. இதனால் நகை நன்மையும் புண்மையும்
செய்யும் என்பது அறியப்படுகின்றது.1
உளவியல் நோக்கு:
உளவியலாளர் சிக்மன் ஃப்ராய்டு நகைச்சுவை
பற்றிக் கூறியுள்ளதை அறிந்தால் நகைச்சுவையின் இயல்பையும் தாக்கத்தையும்
அறிந்துகொள்ள முடியும். இலக்கியப் படைப்பாளியின் நனவிலிக்கும் இலக்கியப் படைப்பிற்கும்
இடையேயுள்ள தொடர்புகளை இவர் விளக்கியுள்ளார். தனது ‘நகைச்சுவை
வெளிப்பாடுகளும் அவற்றின் நனவிலிமனத் தொடர்பும்’ என்னும் நூலில் ஃப்ராய்டு நகைச்சுவை
வெளிப்பாட்டின் பல்வேறு வகைகளைச் சுட்டியுள்ளார்2. அதன்படி
நகைச்சுவை வெளிப்பாடு நனவிலிமனத் தொடர்புடையது. நனவிலியில் ஒடுக்கப்பட்டு அடங்கிக்
கிடக்கும் இன்ப நாட்ட
விளைவுகள் நகைச்சுவை வடிவில் வெளிப்படுகின்றன. இதனால் கிடைக்கும் இன்பம் மனிதனை
மகிழ்ச்சிப்படுத்துகிறது. ஆனால் அடுத்தவரைக் கேலி செய்து பெறுகின்ற இன்பம்
பாராட்டத்தக்கதல்ல; வெறுப்பையும் பகையையும் உண்டாக்கக்கூடியது என்பது ஃப்ராய்டின்
கண்டுபிடிப்பாகும். இதனால் பொறுப்பற்ற நகைச்சுவை தனிமனித/சமூக அமைதியைச்
சீர்குலைப்பது அறியப்படுகின்றது.
இன்ப நாட்டத்திற்கு எதிரான செயற்கைக் கட்டுப்பாடுகளால் ஒருவன் பாதிக்கப்படும்போது
தன்முனைப்புக் காரணமாக, தாழ்வு மனப்பான்மை உருவாகி, அதனால் மனித மனதில் படியும்
துயரம் நகைச்சுவையாக வெளிப்படுகின்றது. அப்போது பிறரைக் கேலி செய்யவும் அதன்மூலம்
நகைப்பை உருவாக்கவும் ஒருவன் முயல்கின்றான். ஆனால் இவ்வாறு நகைச்சுவை என்னும்
பெயரில் கேலி செய்யும்போது மனித உறவுகள் பாதிக்கப்பட்டு விலகல் உணர்வுகள்
தலைதூக்குவதால் மன அமைதி குலைகின்றது. எனவே நிறைவேறாத ஆழ்மன ஆசையும் சமூகக்
கட்டுப்பாடுகளும் முறையற்ற நகைச்சுவை/வேடிக்கை உணர்வைத் தூண்டி விடுகின்றன என்பதைப்
புரிந்துகொள்ள வேண்டும்.
வள்ளுவ நகை அறவியல்:
மனிதனின் பக்குவப்பட்ட / முறை பிறழ்ந்த மன உணர்வுகளையும் அவற்றின்
தாக்கங்களையும் எடுத்துரைத்து நல்வாழ்க்கைக்கும் மேம்பட்ட மனித உறவுக்கும் சமூக
அமைதிக்கும் வள்ளுவம் வழிவகுக்கின்றது. அதனால் மெய்ப்பாடுகள் பற்றி வள்ளுவம்
அறநெறிகளை வகுத்துரைக்கின்றது. நகையின் தேவை, இழிநிலை ஆகியவற்றை வள்ளுவர் தெளிவாகச்
சுட்டியுள்ளார். மேலும் நகையென்பது ஒரு கருத்துப் புலப்பாட்டு முறையாகவும்
கருவியாகவும் பயன்படுவதையும் வள்ளுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
இடுக்கண்
வருங்கால் நகுக (குறள், 621)
என்று அறிவுறுத்தும் வள்ளுவம் துன்பத்தில் துவண்டுவிடாமல் இரு:
எதையும் எளிமையாக எடுத்துக்கொள் என்னும் உணர்வு அனுசரிப்புப் பண்பைப் பகர்கின்றது.
இத்தகைய ஆக்க மனநிலை உணர்ச்சி மேலாண்மைக்கு வழி வகுக்கும். இதனால் மனத் தடுமாற்றம்
தவிர்க்கப் படும்.
அடுத்ததாக
நகையை/ஆக்கப்பூர்வ மனநிலையை நட்பாடலுக்கும் மனித உணர்வுகளை வளப்படுத்தவும்
வாய்ப்பாகின்ற கருவியாக வள்ளுவம் வகுத்துரைப்பதை,
நகச்சொல்லி
நட்பாடல் (குறள் 187)
நகச்சொல்லி
நன்றிபயப்பது (குறள் 685)
என்னும் குறட்பாக்களால் அறியமுடிகின்றது. எனவே மேம்பட்ட சமூக உறவுக்கு
நகை துணையாவது உளங்கொளத்தக்கது. அதே நேரத்தில் வஞ்ச நகை குறித்தும் வள்ளுவம்
எச்சரிக்கின்றது.
வஞ்ச மனத்தான்
படிற்றொழுக்கம் (குறள் 271)
தீதே பொய்த்து
நகை (குறள் 182)
ஆகிய அறவுரைகள் சமூக அறிவியல் விழிப்புணர்வுக் கொள்கைகளாக
அமைந்திலங்குகின்றன. ஆகவே நன்னகை, புண்ணகை என்பவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
இங்கு,
தொழுத
கையுள்ளும் படை ஒடுங்கும் (குறள் 828)
என்னும் எச்சரிக்கைத் தொடரும் கருதத்தக்கது.
அடுத்ததாக, சமூக
மதிப்பின் அளவீடாக நகை அமைவதையும் திருக்குறள் சுட்டிக்காட்டுகின்றது.
உள்ளூர் நகப்படுவர்
(குறள் 927)
நிலம் என்னும்
நல்லாள் நகும் (குறள் 1040)
என்னும் குறள் தொடர்களில், உலகம் ஏற்றுக்கொள்ளாது; தகுதியானதல்ல;
கேலிக்குரியது என்னும் கருத்தில் நகை ஆளப்படுள்ளமை அறியத்தக்கது. இதனால் தனக்குத்
தகுதியான வாழ்க்கையை வாழாமல் இழிவாழ்க்கையை வாழ்ந்தால், உலகமும் சமூகமும் பழிக்கும்
என்னும் சமூகமதிப்பியல் செய்தி எடுத்துரைக்கப்படுள்ளது.
அடுத்ததாக, காதல்
மனநிலையில் குறிப்புணர்தலிலும் குறிப்புணர்த்தலிலும் நகையென்னும் உடல் மொழியின்
பங்கு முதன்மையாது.
யான்... நோக்காக்கால் தான்
நோக்கி மெல்ல நகும் (குறள் 1094)
ஒரு கண் சிறக்கணித்தாள்
போல நகும் (குறள் 1095)
என்னும் காமத்துப்பால் தொடர்கள் உடல்மொழி வெளிப்படுத்தும் செய்தியை
உணர்த்துகின்றன.
குறியீட்டியலில் உடல்மொழி
கருத்துப் பரிமாற்றம். பேச்சொலிப் பரிமாற்றத்தை விட அதிகமாகவும் அழுத்தமாகவும்
நடைபெறுவதைக் கண்டறிந்துள்ளனர்.3
அதன்படி உடல்மொழியான மெய்ப்பாடுகளுக்கு மனித
வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பங்குண்டு.
வள்ளுவம் வகுத்துரைத்த
நெறிப்படி நகையை ஆக்கப்பூர்வமான இன்பப் பரிமாற்றமாக அமைத்துத் துன்பமில்லாத
உயர்வாழ்க்கையை வாய்ப்பாக்கலாம்.
சான்றெண்
விளக்கம்
1.பொன்னுசாமி, மு., சங்க இலக்கியத்தில்
மெய்ப்பாட்டு இயக்கம்,
இந்து பதிப்பகம்; கோவை, 1998, ப.5.
2. கந்தசாமி, இரா., “பாரதியார்
படைப்புகளில் நகைச்சுவை; உளவியல்
அணுகுமுறை ஆய்வு” பக். 31-40, செல்வராசு, நா. (பதிப்.).
தமிழியல் ஆய்வுகள், காவ்யா; சென்னை, 2001.
3. உடல்மொழி,
விக்கிபீடியா இணையதளம்.
**********
Comments
Post a Comment