தமிழ் உருபொலியனியல்
ஏற்படுத்தும் பொருண்மைத் தாக்கம்
முனைவர் ப.கொழந்தசாமி,
புதுச்சேரி-8, பேச:94863 66572.
தமிழ் இலக்கணம் அறிவியல்
பாங்குடனும், காரண காரிய இயைபுடனும் படைக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்படும்
விதிகளும் வாய்பாடுகளும் எளிதில் புரிந்துகொள்ளத்தக்கவை; இலக்கணக் கலைச்சொற்கள்
தன்விளக்கப் பாங்குடையவை. தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களில் ஒலியியல்,
ஒலியனியல், உருபனியல், உருபொலியனியல், தொடரியல், பொருண்மையியல் கொள்கைகள்
கூறப்பட்டுள்ளன. அதிலும் மற்ற இலக்கண நூல்களோடு ஒப்பிடும்போது தொல்காப்பியம்
பெருமையும் தெளிவும் உடையதாக அமைந்துள்ளது. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள்
என்னும் மூன்றினுள்
முதல் இரண்டு அதிகாரங்களில் தமிழ்மொழியின் இலக்கண
அமைப்புகளை விளக்கி, மூன்றாம் அதிகாரத்தில்
இலக்கியத் திறனாய்வியலை எடுத்துரைத்துள்ளது. இந்த இலக்கண விளக்கத்தில்
புணர்ச்சி ஒரு பகுதியாகும். எழுத்துகள் எனப்படும்
ஒலியன்கள் தனித்தும் சேர்ந்தும் உருபன்\ சொற்களை உண்டாக்குகின்றன. இவ்வாறு
ஒலியன்களால் உண்டாக்கப்படும் உருபன்களில் உள்ள ஒலியன்கள் உருபொலியன்கள் எனப்படுகின்றன.
உருபன்கள் சேரும்போது அவற்றிலுள்ள உருபொலியன்கள்
மாற்றமின்றியோ பல்வேறு மாற்றங்களைப் பெற்றோ அமைகின்றன. இத்தகைய மாற்றங்களை
விளக்குவது உருபொலியனியல் ஆகும். இவற்றைப் புணர்ச்சி இலக்கணத்தில் இயல்பு
புணர்ச்சி, திரிபுப் புணர்ச்சி என்று கூறுகின்றனர். சொற்கள் இயல்பாகப் புணர்தலும்
( வாழை+ மரம்> வாழை மரம் ), திரிந்து புணர்தலும் (அதை+ கொடு > அதைக் கொடு;
மரம்+ வேர்>மரவேர்; மரம்+கிளை >மரக்கிளை
) உண்டு. இத்தகைய புணர்ச்சி\ உருபொலியனியல் நிலை ஒலியமைப்பு நோக்கி
அமைந்திருந்தாலும், சில சுழல்களில் பொருண்மைத் தாக்கம் உடையதாகவும் இருப்பது
இந்தக் கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகின்றது.
தமிழ் உருபொலியனியல்
தமிழ் மொழியின் புணர்ச்சி
இலக்கணம் வடமொழிச் சந்தி முறையினும் வேறுபட்டிருப்பதோடு தனித்தன்மையும் வாய்ந்தது;
பொருள் மாற்றத்தையும் உண்டாக்கக் கூடியது. செந்தமிழில் முழு உயிரோடு உயிர்
மயங்காது. இடையில் உடம்படுமெய் தோன்றிப் புணர்க்கும்.
சான்று:
கை+ஐ> கை+ய் + ஐ > கையை.
கோ+ இல் > கோ+வ்\ய்+இல்> கோ(வி)யில்.
ஆனால், சில சொற்களில் பேச்சு வழக்கின் தாக்கத்தால்
மாறித் திரிபடைந்துள்ளதையும் காணமுடிகின்றது.
சான்று:
பகல் > பால் (பகு+ அல்), இரவு > இரா.
மெய்யெழுத்துகளில் பல முறைகளில் புணர்ச்சி நடப்பதுண்டு. அவற்றைத் திரிபுப்
புணர்ச்சி என்று சுட்டுவர். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திலுள்ள ஒன்பது இயல்களில்
புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப்
புணரியல் என்னும் ஆறு இயல்களில் புணர்ச்சி எனப்படும் உருபொலியனியல் விதிகளைக்
கூறியுள்ளது. இதனால் தமிழ் மொழியில் புணர்ச்சி இலக்கணம் பெறும் இடத்தை உணரலாம். எழுத்துகள்
தம்முள் புணருமாற்றை,
உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்
உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியுமென்று
இவ்வென அறியக் கிளக்குங் காலை
நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென்று
ஆயீ ரியல புணர்நிலைச் சுட்டே (நூ.107)
என்னும் நூற்பாவில் எடுத்துரைத்து, சொற்களில் உருபொலியன்களின்
வருகை வரையறையைப் பட்டியலைத் தந்துள்ளது. அடுத்த நூற்பாவில் உருபொலியனியல் செய்திகளைக்
கூறும் முகமாக, சொற்கள் தம்முள் புணருமாற்றை,
நிறுத்த சொல்லின் ஈறாகு எழுத்தொடு
குறித்துவரு கிளவி முதலெழுத்து இயையப்
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென
ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே (நூ.108)
என்று நான்கு நிலைப்படுத்தி எடுத்துரைத்துள்ளார். இந்த
இரண்டு நூற்பாக்களும் புணர்ச்சி அமையுமாற்றைத் தெளிவாக விளக்கிவிட்டன. இனி, அடுத்த
நூற்பாவில் மூவகைத் திரிபுகளைப் பட்டியலிடும்போது,
அவைதாம்
மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று
இவ்வென மொழிப திரியு மாறே (நூ.109)
என்று திரிதல் (மாற்றம்), மிகுதல் ( தோன்றல்), குன்றல்
(கெடுதல்) என்னும் மூவகைத் திரிபுகளை இனங்காட்டியுள்ளார். இங்குத் தொல்காப்பியர்
ஆண்டுள்ள கலைச்சொற்களின் தன்விளக்கப் பாங்கும் பொருண்மையப்பும் விதந்து
பாராட்டத்தக்கன. தனித்தனியாக நிற்கும் இரண்டு சொற்கள் சேர்வதைக் காரணப் பெயராக
‘புணர்ச்சி’ என்னும் கலைச்சொல்லாலும், எந்தச் சொல் புணர்ச்சிக்கு வாய்ப்பாக நிற்கிறதோ
அதை ‘நிறுத்த சொல்’ என்றும், இதோடு வந்து சேர்வதை ‘ குறித்துவரு கிளவி’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலைச்சொற்கள் தன்விளக்கம் உடையனவாகவும் காரணப் பெயர்களாகவும் நின்று பொருள்
தெளிவைத் தருகின்றன. இவ்வாறே உருபொலியனியல் செயல்பாட்டில்\ புணர்ச்சியில் வேற்றுமை
உறவு இருந்தால் அதை ‘வேற்றுமை குறித்த புணர்மொழி நிலை’ எனவும் அத்தகைய உறவு அமையாததை
‘வேற்றுமையல்வழிப் புணர்மொழி நிலை’ என்றும் (நூ.112)
சுட்டியுள்ளார். மேலும் புணர்ச்சியில் எழுத்தும் சாரியையும் ( பொருளில்லா
வெற்றுருபு) மிகுதலையும் (நூ.112) சாரியைகளின் பட்டியலையும் (நூ.119)
குறித்துள்ளார். மேலும் அத்துச் சாரியையின் அகரமும் இக்குச் சாரியையின் இகரமும்
முறையே அ,இ ஈற்றுச் சொற்களின் முன்னால் கெடுவதையும் இக்குச் சாரியையின் இகரம் ஐகார
ஈற்றின் முன்னால் கெடுவதையும்,
அத்தின் அகரம் அகரமுனை இல்லை (நூ.125)
இக்கின் இகரம் இகரமுனை இல்லை (நூ.126)
ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும் (நூ.127)
என்னும் நூற்பாக்களில் எடுத்துரைத்துள்ளர். அதோடு
வேற்றுமை உருபுகள் பெயரையடுத்து
( மகன்+ஐ) வருவதை ‘ வேற்றுமை வழிய பெயர் புணர்நிலையே’ (நூ.116) என்று
தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறே பல புணர்ச்சி\ உருபொலியனியல் விதிகள் புணரியலில்
கூறப்பட்டுள்ளன. சாரியைகள் எழுத்து\ புணர்ச்சிச் சாரியைகள் என்று இரு வகைப்படும்.
புணரியலில் பொருண்மைத் தெளிவிற்காக எழுத்துச் சாரியைகளையும் பட்டியலிட்டுள்ளார்.
புணர்ச்சியில் புள்ளியீற்றின் முன் உயிரெழுத்து வரின் தனித்துநிற்காமல்,
மெய்யோடு சேர்ந்து உயிர்மெய்யாவதைக் கூறி(138), இவ்வாறு புணர்ந்த சொற்களைப்
பிரிக்கும்போது புணர்ச்சியில் உருவான உயிர்மெய்யெழுத்தைத் தனித்தனியாக மெய்+ உயிர்
என்று புணர்ச்சிக்கு முன் இருந்தவாறே பிரிக்கவேண்டும்(139) என்று
வழிகாட்டியுள்ளார். அடுத்து, புணர்ந்த சொற்களை ஒலிக்கும்போது ஒலிப்பு வேற்றுமையால்
பொருள் வேறுபடும் என்பதைப் பதிவுசெய்து,
எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி
இசையில் திரிதல் நிலையிய பண்பே (141)
என்று தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, புணர்ச்சியில்
ஏற்பட்ட மாற்றத்தையும் அவற்றின் பொருள் நிலையையும் அறிந்து உச்சரிக்கவேண்டும்
என்னும் உருபொலியனியல் சார் பொருண்மைக் கோட்பாடு தெளிவாகின்றது. அடுத்த
நூற்பாவிலும் இத்தகைய இலக்கணத்தை அதாவது புணர்மொழிகளின் பொருளை எழுத்தாலன்றிக்
குறிப்பால் சூழல் நோக்கிப் பொருளுணர்க என்பதை,
அவைதாம்
முன்னப் பொருள புணர்ச்சி வாயின்
இன்ன என்னும் எழுத்துக்கடன் இலவே ( 142)
என்றும் அறிவுறுத்தியுள்ளார். பெயரையடுத்தே வேற்றுமை
உருபுகள் சேரும் என்று கூறிய தொல்காப்பியர், சிறப்பு விதிகள் சிலவற்றையும்
உருபியலில் பொருள்தெளிவு கருதிக் கூறியுள்ளார். எல்லாம் எனும் விரவுப் பெயருடன்
உருபு புணரும்போது நம் சாரியை வரும்
( எல்லாம்+
நம்+ஐ+உம் > எல்லாநம்மையும் ) என்று (190) சுட்டியுள்ளார். உயர்திணையில்
எல்லாரும்(படர்க்கை), எல்லீரும் (முன்னிலை) என்னும் சொற்களின் புணர்ச்சி விதிகளாக
எல்லார் தம்மையும், எல்லீர் நும்மையும் (191) என்பவற்றைப் பதிந்துள்ளார். இவை
பொருள் தெளிவிற்காகக் கூறப்பட்ட விதிகளாகும். அவ்வாறு உருபேற்கும்போது
தான்>தன், யான்>என் என்று உறழ்வதை (192) சுட்டியுள்ளார். இவ்வாறே எண்ணுப்
பெயர்களில் ஏற்படும் மாற்றத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த
உயிர் மயங்கியலில் ஒற்று மிகுதல் என்னும் உருபொலியனியல் நுட்பத்தை
எடுத்துரைத்துள்ளார்.
அகர
இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமையல்வழி கசதப தோன்றின்
தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே (203)
என்னும் நூற்பாவில், அகரவீற்றுப் பெயர்களை அடுத்து,
அல்வழிப் புணர்ச்சியில் கசதப தோன்றின் ஒற்றிடை மிகும் என்று
இலக்கணப்படுத்தியுள்ளார். 205,206 ஆகிய நூற்பாக்களில்
கசதபஞநம ஒற்று மிகுதல் வேண்டும் என்றும் யவ முன் வ
மிகும் எனவும் கூறியுள்ளார். மேலும் அகரச் சுட்டு செய்யுளில் நீண்டு நெடிலாக
வருவதையும்(208) எடுத்துரைத்துள்ளார். இவ்வாறான புணர்ச்சி விதிகள் பல
தொல்காப்பியத்தில் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. அவற்றுள்
நாடுரி (241), வேணவா(288), அங்கை(315), தேக்குடம்( 340),
தேத்திறால்(344), ஆந்தை, பூந்தை(348), அழக்குடம்(354),முன்றில் (355),
பொலந்தொடி(356) போன்றவை பொருள் நுட்பம்
கூறும் விதிகளாகும். இத்தகைய சொற்களின் புணர்ச்சிவிதி
தெரியாவிட்டால் அவற்றின் சரியான பொருளை அறியமுடியாது. சங்க இலக்கியங்களில் பொலந்தார்
எனும் சொல் மிகுதியாக ஆளப்பட்டுள்ளது. இதன் உருபொலியனியல் மாற்றத்தை
(பொன்+தார்> பொலந்தார்) அறிந்தால்மட்டுமே பொருள் தெளிவாகும்;
இல்லாவிட்டால் பொருள் குழப்பம் ஏற்படக்கூடும்.
தொல்காப்பியத்தில் உருபொலியனியல் விதிகள் கூறப்பட்டிருப்பது போலவே அதன்
வழிநூல்களிலும் ஒரு சில மாற்றங்களுடன் இத்தகைய செய்திகள் பேசப்பட்டுள்ளன.
நேமிநாதம் சுருக்கமாக சந்தியின் அடிப்படைச் செய்திகளைக் கூறியுள்ளது. இதன் 12ஆம்
நூற்பா உரைச் செய்தி இங்குக் கருதத்தக்கது.
சந்திகள் மும்மொழிக் கூட்டமாய்
இரண்டு சந்திபடுவனவும் இருமொழியாற்
பொருள்
வேறுபட்டு இரண்டு மூன்று சந்திபடுவனவும் உளவாதலான் அவை
படும்பகுதி அறிந்து ஒருவன் கேட்ட சந்தியை நீ கருதிற்றியாது? எனக் கேட்டு
முடிக்கப்படும் எனக் கொள்க.
சிறுவழுதுணங்காய் என்புழிச் ‘சிறுமை’ என நிறுத்தி வழுதுணங்காய் என
வருவித்து முடித்தல் செய்க. ‘சிறுவழுதுணை’ என நிறுத்தி முடித்தல் செய்யற்க.
செம்பொன்பதின்பலம், பொன்னாழி, பெண்ணீத்தார் என்பன பலபொருளவாதலான்
அவன்(கேட்டவன்)
கருத்தறிந்து முடிக்க. பிறவும் அன்ன.
( செம்பொன்பதின்பலம் =
செம்பொன்+பதின்பலம், செம்பு+ ஒன்பதின்பலம்
பொன்னாழி = பொன்+நாழி,
பொன்+ஆழி
பெண்ணீத்தார் = பெண்+ஈத்தார், பெண்+நீத்தார்)
புணர்ச்சியில் கூட்டுச் சொற்கள் ஆக்கப்படும்போது பொருள்
குழப்பத்திற்கு வாய்ப்பேற்படலாம்.
அதைப் பயன்மொழியியல் ( PRAGMATICS ) அடிப்படையில் தீர்க்கலாம் என்று
அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்
இரட்டை வழக்குடை மொழியாதலால் சில வழக்காறுகள் செய்யுளிலும் பேச்சு வழக்கிலும்
மாறுபடுவது இயற்கை. சொற்கூட்டாக்கத்தில் அடிப்படைச் சொற்கள் அடை பெறுமாற்றைத்
தொல்காப்பியம் கிளவியாக்கத்தில் வண்ணச் சினைச்சொல் ( 509) என்று கூறும்.
இதை மேலும் விளக்குவதாக அமையும்,
இனமின்றிப் பண்புண்டாஞ் செய்யுள் வழக்கேல்
இனமுண்டாய்ப் பண்புவந் தெய்தும்- புனையிழாய்
திண்ணம்
அடையுஞ் சினையும் முதலுமாய்
வண்ணச்
சினைச்சொல் வரும் (நூ. 39 )
என்னும் நூற்பாவும், ‘சொற்கட்குப் பண்பு
கொடுக்கும்பொழுது செய்யுளிடத்து இனமின்றியே பண்பு கொண்டுவரப்பெறும். வழக்கினிடத்து
இனமுண்டாய்ப் பண்பு கொண்டுவரப்பெறும்’ என்னும் உரைப் பகுதியும் பொருளுணர் நோக்கில் கவனத்தில்
கொள்ளத்தக்கன. இதோடு நன்னூலின் பதவியலில் கூறப்படும் சொல்லாக்க மரபுகள் கூர்ந்துநோக்கத்தக்கன.
பகுபதம், பகாப்பதம் என்பனவற்றில் பகுத்தால் பொருள் உணர்த்தும் பண்பு, அதாவது ஒரு
சொல் ஒரே பொருட்கூறு உடையதாக இருப்பின் பகுபதம்; ஒன்றுக்கு மேற்பட்ட
பொருட்கூறுகளைப் பெற்றிருப்பின் பகுபதம் என்னும் பொருண்மை நுட்பம் அறியற்பாலது.
நன்னூலின்,
பகுப்பால் பயனற்று இடுகுறி யாகி
முன்னே
ஒன்றாய் முடிந்தியல் கின்ற (நூ.131)
என்னும் கருத்துரு மேற்கூறிய பொருண்மை நுட்பத்தைத்
தெளிவுபடுத்துகின்றது. அதாவது, தனியோர் உருபோ உருபனோ அமைவதைப் பகாப்பதம்
என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட உருபுகளோ உருபன்களோ இணைந்தமைவதைப் பகுபதம்
எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சான்று:
பகாப்பதம்
: பூ, வா, செல், வாங்கு.
பகுபதம் :
பூத்தல் (பூ +தல்), வருக( வரு+க ), வாங்குகிறான்(வாங்கு+கிறு +ஆன்).
பொருட்கூற்றாய்வின்
அடிப்படையில் வாங்குகிறான் என்னும் பகுபத வினைமுற்றை ஆராய்ந்தால், இதில்
வாங்கு+ கிறு +ஆன் என்னும் மூன்று பொருட்கூறுகள் இருப்பதை அறியலாம். இவற்றுள் வாங்கு
என்னும் பகுதி செயலையும், கிறு எனும் கால இடைநிலை காலத்தையும், ஆன்
எனும் பால்காட்டும் விகுதி செய்பவனையும் உணர்த்துவனவாக அமைந்துள்ளன. இவ்வாறே
எச்சங்கள் பற்றிய வாய்பாடுகளும் நோக்கத்தக்கன.
வீரசோழியம் புணர்ச்சி
விதிகளை வடமொழி மரபு பற்றிக் கூறுவதால் இங்கு அவை கருதப்படவில்லை.
சிறப்புக் கூறுகள் :
தமிழ்
உருபொலியனியலில் மேலும் சில சிறப்புக் கூறுகளும் பொருண்மையியல் நோக்கில்
எண்ணத்தக்கன. தொல்காப்பியர் வேற்றுமை ஏற்கும்போது பெயர்ச் சொற்களடையும்
மாற்றங்ளையும் குறிப்பிட்டுள்ளார்.
நீயென்
ஒருபெயர் நெடுமுதல் குறுகும்
ஆவயின்
னகரம் ஒற்றா கும்மே (நூ.179)
என்னும் நூற்பா நீ+கு>நின் +கு> நினக்கு என்னும்
உருபொலியனியல் மாற்றத்தைப் பதிந்துள்ளது. மேலும்
சொல்லின் திணைக்கேற்பவும், தொடரின் வேற்றுமையுறவிற்கேற்பவும்
புணர்ச்சிப் பண்பு மாறுபடும். ஆ, மா என்பன ஒப்புருச்
சொற்கள். இவை இயங்கு திணையாகவும்( விலங்கு) இயங்காத் திணையாகவும்(மரம்) இயலும். இவை
இயங்கு திணையாயின் ஆ+கோடு > ஆன் கோடு, மா+செவி > மான்+செவி என னகரப்
பேறுற்றுப் புணரும். இயங்காத் திணையான மரப்பெயராயின் மா+கோடு>
மாங்கோடு என்று மெல்லொற்று மிகுந்து புணரும். இவ்வாறே புளி மரத்தைக்
குறிக்கையில் அம் சாரியை பெற்று (புளி+அம்+பழம்>புளியம்பழம்)எனவும், இது
சுவையைச் சுட்டும்போது இன மெல்லெழுத்து மிக ‘புளிங்கூழ்’ என்றும் புணரும். இதனால்
சொல்லின் பொருட்டன்மைக்கேற்பப் புணர்ச்சி அமைவதையும், இவற்றை உணர்ந்து
பொருளுணரவேண்டும் என்பதையும் உணரலாம்.
தொகை
மரபிலும் உயிர் மயங்கியலிலும் இகரவீற்றுப் புணர்ச்சி கூறும்போது, அல்வழிப்
புணர்ச்சியில் இகரவீற்றுப் பெயர்கள் இயல்பாகவும் வல்லெழுத்து மிக்கும் உறழ்ந்தும்
முடியும் என்று (நூ.158) மொழிந்துள்ளார். அடுத்து, வேற்றுமைப் புணர்ச்சியில்
வல்லொற்று மிகும் என்று குறித்துள்ளார். இவ்வாறே பிற ஈறுகளுக்கும் தொடரின்
வேற்றுமையுறவிற்கேற்பப் புணர்ச்சி விதி வகுத்துள்ளார். இவ்வாறே சொல்லின் ஒலியமைப்பிற்கேற்பவும்
புணர்ச்சி விதி மாறுபடுவதுண்டு. சான்றாக, கோல்+ஐ> கோலை என இயல்பாகவும், கொல்+ஐ>
கொல்லை என்று ஒற்று மிகுந்தும் அமைவதுண்டு. ஒற்று மிகல் விட்டிசையைத்
தவிர்த்தல் மட்டுமின்றிப் பொருள் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியது. ஓடா + குதிரை
புணரும்போது ஒற்று மிகுந்தால், (ஓடா+குதிரை> ஓடாக் குதிரை) ஓடா
என்பதை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகக் கருதவேண்டும். மேலும் ஓடா
என்பதை வினைமுற்றாக்கினால் ஓடாது\ஓடவில்லை என்றும், குதிரை
ஒன்றன்பாலாகவும் நிற்கும். ஆனால் புணர்ச்சியில் ஒற்று மிகாமல் ஓடா
குதிரை என்னும் உறழ்வில்லாத் தொடர் அமைக்கப்பட்டால் இதிலுள்ள ஓடா என்பது
பலவின்பால் வினைமுற்றாகும். எனவே, ஒற்று மிகுதல் / மிகாமை என்பது தமிழ்ப்
புணர்ச்சியில் பொருள் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். இதுபோலவே, அரசு கல்லூரி
மாணவியர் விடுதி என்னும்
தொடரிலும் ஒற்று மிகுந்தால் அரசால் நடத்தப்படும்
குறிப்பிட்ட ஒரு கல்லூரியில் பயிலும் மாணவியருக்கான விடுதி என்னும் பொருள்
உண்டாகும். ஒற்று மிகாவிட்டால் அரசினர் நடத்தும் விடுதி; அது பொதுவான
கல்லூரி மாணவியர்க்குரியது என்று பொருள்படும். மதுரை காமராசர்
பல்கலைக்கழகம் என்னும் பெயரிலும் ஒற்று மிகுந்தால் ஒரு பொருளும் மிகாவிட்டால்
மாறுபட்ட பொருளும் ஏற்படுவது கண்கூடு.
இத்தகைய
உருபொலியனியல் / புணர்ச்சி மாற்றங்கள் பொருண்மைத் தாக்கத்தை ஏற்படுத்துவது கண்கூடு.
இது போலவே போலி எழுத்துகளும், வேற்றுமை மயக்கமும் பொருள் தெளிவிற்காக முறையாக
இனங்காணப்பட வேண்டும்.
தொகுப்புரை
தமிழ்
மொழியமைப்பில் உருபொலியனியல் மாற்றங்கள் ஓசை நயத்திற்காக மட்டுமின்றிப் பொருண்மை
சார்ந்தும் நடைபெறுகின்றன. இவற்றைத் தமிழ் இலக்கணவாணர்கள் முறையாக
உணர்த்தியுள்ளனர். இவற்றை இனங்கண்டு முறையான கொள்கைகளை வகுத்தால் தமிழ்மொழியின்
அமைப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் செவ்வனே அறிந்து பிறழ்வின்றிப் பொருளணரலாம்.
துணை நின்றவை
தமிழண்ணல்(உரை.),
தொல்காப்பியம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2008.
மெய்யப்பன்,ச.
(பதிப்.), நன்னூல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை,1993.
சீனிவாசனார்,ச.
(பதிப்.), நேமிநாதம், வெற்றியரசி வெளியீடு, சென்னை, 2004.
கோதண்டராமன்,இரா., தமிழெனப்படுவது,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை,
2004.
----------------------------------------------------------
Comments
Post a Comment