சொல்லின்
ஈறாகின்ற அனைத்து ஐயும் இரண்டாம் வேற்றுமை உருபுகளா?
முனைவர்
ப.
கொழந்தசாமி, இணைப் பேராசிரியர், காஅபமேஆநி, புதுவை.
தமிழின்
இலக்கண வரம்பு கட்டுக்கோப்பானது;
தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் இதைத் தெளிவுறுத்துகின்றன.
சொற்கள் முறைப்படி தொடர்ந்து இலக்கண மற்றும் பொருண்மைப் பொருத்தமுடைய
தொடர்களை ஆக்குகின்றன. ஒரு தொடரின் உறுப்புகளாக அமைகின்ற சொற்கள் அந்தத் தொடரின் பொருண்மை மற்றும்
ஒலி அமைப்புக்குக் கட்டுப்பட்டவை; மேலும் நடையியல் தாக்கம் கொண்டவை.
இந்த மொழியமைப்பைப் புணர்ச்சி என்று இலக்கணங்களும், உருபொலியனியல் என்று மொழியியலும் சுட்டுகின்றன. இத்தகைய
அமைப்புகளுள் ஒற்று மிகலும் ஒன்றாகும். இந்தக் கட்டுரையில்,
இரண்டாம் வேற்றுமை உருபான ஐ தொடரில்
அமையும் பாங்கும் ஒற்றுமிகல் பண்பில் அது ஆற்றுகின்ற பணியும் தொடர்ப் பொருண்மையியல்
நோக்கில் விளக்கப்படுகின்றன.
முறையான
இலக்கணப் புரிதிறன் வாய்த்தால்,
பிழை தவிர்க்கப்படும் என்னும் கருதுகோளில்,
பிழையில்லாமல் மொழியை ஆள வழிகாட்டுவதாகவும்
வலியுறுத்துவதுவதாகவும் இந்தக் கருத்துரை இயல்கின்றது.
பொருண்மை :
தமிழில் எழுவாய் மற்றும்
விளி வேற்றுமைகளைத் தவிர ஒவ்வொரு வேற்றுமைக்கும் உருபும் பொருண்மையும் உண்டு.
அதாவது வேற்றுமையின் பொருளைப் பெயரோடு பின்னொட்டாக இணைந்து உணர்த்துவதாக
இடைச் சொல்லான உருபு இயலும்; ஆயினும் தொடரில் வேற்றுமை உருபு
மறைந்து வருதலும் உண்டு. அதன்படி, ஐ என்பது இரண்டாம் வேற்றுமைக்குரிய உருபு ஆகும்; தொடரில் உறுப்பாகின்ற
ஒரு பெயரைச் செயப்படுபொருளாக்குதல் அதன் பொருளாகும். சான்றாக,
பாரி பறம்பைக் காத்தார்
என்னும்
தொடரைக் கருதலாம். இந்தத் தொடரில்,
Ø
பாரி
என்னும் பெயர்
எழுவாயாக இயல்கின்றது;
இது தொடரில் பேசப்படுகின்ற வினையைச் செய்பவரைக் குறித்துவருகின்றது ஆகவே இதை வினை முதல், செய்பவர், எழுவாய் வேற்றுமை எனவும் சுட்டுவதுண்டு. இச் சொல்லில்
ஒரே உருபன் உள்ளது.
Ø
பறம்பு+ஐ என்பது தொடரின் செயப்படுபொருளாக, வினையை ஆற்றுவதற்கான
களமாக இயல்கின்றது. அதாவது எதை? என்பதற்கு
விடையாய் விளங்குகின்றது. பறம்பை என்னும் சொல்லில்,
பறம்பு+ஐ என்னும் இரண்டு உருபன்கள் உள்ளன.
Ø
காத்தார்
என்பது செயப்படுபொருள்குன்றாத தெரிநிலை வினைமுற்று; இதில் எதை? எப்போது
? யார் செய்தார்? என்கிற பொருண்மைகளை உணர்த்துவதாக
அமைகின்ற கா+த்+ஆர் என்னும் மூன்று உருபன்கள் உள்ளன.
Ø
இத் தொடரில், பாரி+பறம்பு+ஐ,+கா+த்+ஆர் என்னும் ஆறு உருபன்கள் அமைந்துள்ளன.
அதாவது ஆறு பொருண்மைக் கூறுகள் இணைந்து, இந்தத்
தொடரின் பொருளை உணர்த்துகின்றன. இவற்றுள் எந்தவோர் உருபனை மாற்றினாலும்
பொருள் வேறுபடும். காட்டாக, த் என்னும்
இறந்த கால இடைநிலையை மாற்றி, ப் என்னும் எதிர் கால இடைநிலையைப்
பெய்தால், தொடர் உணர்த்துகின்ற காலம் மாறும்; இவ்வாறே மற்ற உருபன்களும் தொடர்ப் பொருள் ஆக்க மற்றும் மாற்றக் கூறுகளாக இயலும்
;சோற்றில் உப்புப் போட்டால் ஒரு சுவை: தேனைக் கலந்தால்
சுவை மாறுபடுவது போல இது அமைகின்றது.
ஒற்று
மிகல்
:
ஒரு தொடரின் உறுப்பான பெயர்ச்சொல், செயப்படுபொருளாக அமைந்து,
இரண்டாம் வேற்றுமையுருபாகிய ஐயோடு புணர்கையில், அதையடுத்து அமைகின்ற வருமொழியின் முதலொலி க்.ச்.த்,ப் என்று அமையுமானால், ஒற்று
மிகும். அதன்படி பாரி பறம்பைக் காத்தார்
என்னும் தொடரில், ஐயுருபை அடுத்து க்
மிகுந்தது. இது இலக்கண மரபுக்குட்பட்டது.
ஆயினும்
முறையான இலக்கணப் புரிதிறன் வாய்க்காததால்,
தொடர்ப் பொருளைக் கருதாமல், உருவத்தைப் பார்த்து
ஐயில் இறுகின்ற மற்ற தேவையற்ற இடங்களிலும், பிழையாக ஒற்று மிகுப்பது
தவிர்க்கப்படவேண்டியதாகும். சான்றாக,
சென்னைத்
திரும்பினார்
என்னும் தொடரைக் கருதலாம்.
இதில் சென்னை என்பதில் உள்ள ஐகாரவீறு வேற்றுமையுருபன்று. மேலும் இந்தத் தொடரமைப்பில் ஒற்று மிகுகின்ற ஒலி, பொருண்மைச்
சூழல் அமையவில்லை. ஆகவே ஒற்று மிகலாகாது. ஆயினும் இந்த ஐகாரவீற்றை வேற்றுமையுருபாக மயங்கக் கருதி
ஒற்று மிகுத்துள்ளனர்.
இது குழம்பில் தேவைக்கதிகமாக உப்பைச் சேர்ப்பதை ஒக்கும். இவ்வாறே மற்ற வேற்றுமைகளிலும் பிழையைக் காணமுடிகின்றது. இத்தகைய பிழைகளைத் தவிர்க்க :
ü சொல்லின் உருவத்தை மட்டும் கருதி ஒற்று மிகுக்காமல்,
தொடரின் பொருண்மை மற்றும் ஒலிச் சூழலை அறியவேண்டும்.
ü அத்தை, நத்தை, வாகை, சென்னை போன்ற சொற்களின்
ஐகாரவீறு இரண்டாம் வேற்றுமை உருபு அன்று : ஐயைப் பிரித்தால் சொற்பொருள்
சிதையும். ஏனெனில் இவை ஓருபனாக, பகாப்பதங்களாக
அமைவன.
ü வேற்றுமை உருபு பெயர்ச்சொல்லின் பின்னொட்டாக ஒட்டும்.
ஆகவே அதைப் பெயரிலிருந்து, பெயரின் சொற்பொருள்
மாறாமல் தனியாகப் பிரிக்கலாம். சான்றாக, கையை என்பதைப் பிரித்தால், கை +ஐ என்று அமையும். ஏனெனில் இது
ஈருபன்களாலான, பகுபதமாக அமைவது.
ஆகிய கருத்துகளை அறிந்து ஆராய்ந்து ஒற்று மிகுத்தால்
பிழை தவிர்க்கப்படும்; மரபு பேணப்படும்.
நன்றி : மின்னூலகங்கள் / நாளிதழ்கள்.
*****
Comments
Post a Comment