சொல்லின்
ஈறாகின்ற அனைத்து குவும் நான்காம் வேற்றுமை உருபன்று.
முனைவர்
ப.
கொழந்தசாமி, இணைப் பேராசிரியர், காஅபமேஆநி, புதுவை.
தமிழின்
இலக்கண வரம்பு கட்டுக்கோப்பானது;
தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் இதைத் தெளிவுறுத்துகின்றன.
சொற்கள் முறைப்படி தொடர்ந்து இலக்கண மற்றும் பொருண்மைப் பொருத்தமுடைய
தொடர்களை ஆக்குகின்றன. ஒரு தொடரின் உறுப்புகளாக அமைகின்ற சொற்கள் அந்தத் தொடரின் பொருண்மை மற்றும்
ஒலி அமைப்புக்குக் கட்டுப்பட்டவை; மேலும் நடையியல் தாக்கம் கொண்டவை.
இந்த மொழியமைப்பைப் புணர்ச்சி என்று இலக்கணங்களும், உருபொலியனியல் என்று மொழியியலும் சுட்டுகின்றன. இத்தகைய
அமைப்புகளுள் ஒற்று மிகலும் ஒன்றாகும். இந்தக் கட்டுரையில்,
நான்காம் வேற்றுமை உருபான கு
தொடரில் அமையும் பாங்கும் ஒற்றுமிகல் பண்பில் அது ஆற்றுகின்ற பணியும் தொடர்ப் பொருண்மையியல்
நோக்கில் விளக்கப்படுகின்றன.
முறையான
இலக்கணப் புரிதிறன் வாய்த்தால்,
பிழை தவிர்க்கப்படும் என்னும் கருதுகோளில்,
பிழையில்லாமல் மொழியை ஆள வழிகாட்டுவதாகவும்
வலியுறுத்துவதுவதாகவும் இந்தக் கருத்துரை இயல்கின்றது.
பொருண்மை :
தமிழில் எட்டு வேற்றுமைகள்
உள. அவற்றுள் எழுவாய் மற்றும் விளி வேற்றுமைகளைத் தவிரப் பிற
ஒவ்வொரு வேற்றுமைக்கும் உருபும் பொருண்மையும் உண்டு. அதாவது வேற்றுமையின்
பொருளைப் பெயரோடு பின்னொட்டாக இணைந்து உணர்த்துவதாக இடைச் சொல்லான உருபு இயலும்;
ஆயினும் தொடரில் வேற்றுமை உருபு மறைந்து வருதலும் உண்டு. அதன்படி, கு
என்பது நான்காம்
வேற்றுமைக்குரிய உருபு ஆகும்;
தொடரில் உறுப்பாகின்ற
பெயர்ச் சொற்களுக்குள் நடக்கின்ற கொடுக்கல், உறவு, பகை போன்றவை அதன் பொருளாகும். சான்றாக,
பாரி அவ்வைக்குக் கொடுத்தார்
என்னும்
தொடரைக் கருதலாம். இந்தத் தொடரில்,
Ø
பாரி
என்னும் பெயர்
எழுவாயாக இயல்கின்றது;
இது தொடரில் பேசப்படுகின்ற கொடுத்தல் என்னும் வினையைச் செய்பவரைக் குறித்துவருகின்றது இச் சொல்லில் ஒரே உருபன் உள்ளது.
Ø
அவ்வை+கு என்பது கொடுத்ததைப் பெற்றுக்கொண்டவரைக் காட்டுகின்றது. யாருக்கு? என்பதற்கு விடையாய் விளங்குகின்றது. அவ்வைக்கு என்னும் சொல்லில், அவ்வை+கு என்னும் இரண்டு
உருபன்கள் உள்ளன.
Ø
கொடுத்தார்
என்பது செயப்படுபொருள்குன்றாத தெரிநிலை வினைமுற்று; இதில் என்ன செயல்? எப்போது ? யார் செய்தார்? என்கிற
பொருண்மைகளை உணர்த்துவதாக அமைகின்ற கொடு+த்+ஆர் என்னும் மூன்று
உருபன்கள் உள்ளன.
Ø
இத் தொடரில், பாரி+அவ்வை+கு+கொடு+த்+ஆர் என்னும் ஆறு உருபன்கள் அமைந்துள்ளன.
அதாவது ஆறு பொருண்மைக் கூறுகள் இணைந்து, இந்தத்
தொடரின் பொருளை உணர்த்துகின்றன. இவற்றுள் எந்தவோர் உருபனை மாற்றினாலும்
பொருள் வேறுபடும். காட்டாக, வினைமுற்றிலுள்ள
த் என்னும் இறந்த கால இடைநிலையை மாற்றி, ப் என்னும் எதிர் கால
இடைநிலையைப் பெய்தால், தொடர் உணர்த்துகின்ற காலம் மாறும்;
இவ்வாறே மற்ற உருபன்களும் தொடர்ப் பொருள் ஆக்க மற்றும் மாற்றக் கூறுகளாக
இயலும் ;சோற்றில் உப்புப் போட்டால் ஒரு சுவை: மாறாகத் தேனைக் கலந்தால் சுவை மாறுபடுவது போல இது அமைகின்றது.
ஒற்று
மிகல்
:
ஒரு தொடரின் உறுப்பான பெயர்ச்சொல், நான்காம் வேற்றுமையுருபாகிய
குவோடு புணர்கையில், அதையடுத்து அமைகின்ற வருமொழியின் முதலொலி
க்.ச்.த்,ப் என்று
அமையுமானால் ஒற்று மிகும். அதன்படி பாரி அவ்வைக்குக் கொடுத்தார் என்னும் தொடரில், குவுருபை அடுத்து க்
மிகுந்தது. இது இலக்கண மரபுக்குட்பட்டது.
ஆயினும்
முறையான இலக்கணப் புரிதிறன் வாய்க்காததால்,
தொடர்ப் பொருளைக் கருதாமல், உருவத்தைப் பார்த்து
குவில் இறுகின்ற மற்ற தேவையற்ற இடங்களிலும், பிழையாக ஒற்று மிகுப்பது
தவிர்க்கப்படவேண்டியதாகும். சான்றாக,
குரங்குத்
தாவியது
என்னும் தொடரைக் கருதலாம்.
இதில் குரங்கு என்பதில் உள்ள குகரவீறு வேற்றுமையுருபன்று.
மேலும் இந்தத் தொடரமைப்பில் ஒற்று மிகுகின்ற ஒலி, பொருண்மைச் சூழல் அமையவில்லை. ஆகவே ஒற்று மிகலாகாது. ஆயினும் இந்தக் குகரவீற்றை வேற்றுமையுருபாக மயங்கக் கருதி
ஒற்று மிகுத்துள்ளனர்.
இது குழம்பில் தேவைக்கதிகமாக உப்பைச் சேர்ப்பதை ஒக்கும். இவ்வாறே மற்ற வேற்றுமைகளிலும் பிழையைக் காணமுடிகின்றது. இத்தகைய பிழைகளைத் தவிர்க்க :
ü சொல்லின் உருவத்தை மட்டும் கருதி ஒற்று மிகுக்காமல்,
தொடரின் பொருண்மை மற்றும் ஒலிச் சூழலை அறியவேண்டும்.
ü குரங்கு, கிடங்கு போன்ற சொற்களின் குகரவீறு
நான்காம் வேற்றுமை உருபு அன்று : குவைப் பிரித்தால் சொற்பொருள்
சிதையும். ஏனெனில் இவை ஓருபனாக, பகாப்பதங்களாக
அமைவன.
ü வேற்றுமை உருபு பெயர்ச்சொல்லின் பின்னொட்டாக ஒட்டும்.
ஆகவே அதைப் பெயரிலிருந்து, பெயரின் சொற்பொருள்
மாறாமல் தனியாகப் பிரிக்கலாம். சான்றாக, கைக்கு என்பதைப் பிரித்தால், கை + கு என்று அமையும். ஏனெனில்
இது ஈருபன்களாலான, பகுபதமாக அமைவது.
ஆகிய கருத்துகளை அறிந்து ஆராய்ந்து ஒற்று மிகுத்தால்
பிழை தவிர்க்கப்படும்; மரபைப் பேணினால். மொழிச் செம்மை வாய்ப்பாகும்.
நன்றி : மின்னூலகங்கள் / நாளிதழ்கள்.
*****
Comments
Post a Comment