நிலையான செல்வம்- குறட்பாவின்
தொடர்ப் பொருண்மை
முனைவர்
ப.
கொழந்தசாமி, இணைப் பேராசிரியர், காஅபமேஆநி, புதுவை.
அற இலக்கியமான திருக்குறளை முறையாகவும் நிறைவாகவும்
புரிந்துகொண்டு, வாழ்க்கையில் கடைபிடித்தால் தனி
மனிதனும் சமூகமும் சிறப்புறலாம். இவ்வாறு திருக்குறளைக் கருத்துணர, இலக்கணக் கூறுகளும்
தொடரமைப்பு முறையும் வாய்ப்பாகின்றன. ஆகவே இவற்றில் கருத்தூன்றுதல்
இன்றியமையாதது. இத்தகைய கருத்து விளக்கப் பணிகளை உரைகள் செவ்வனே
ஆற்றிவருகின்றன.
ஒரு குறட்பாவின் கருத்தை அறிய,
அதில் எத்தனை தொடர்கள் உள்ளன? தொடரமைப்பு முறைமை
யாது ? தொடரில் பயிலுகின்ற சிறப்புச் சொற்கள் யாவை? ஆகியவற்றைக் கருதவேண்டும். இந்த நோக்கில் 39ஆம் குறட்பாவின் கருத்து இங்கு விளக்கப்படுகின்றது. அதன்படி,
அறத்தான் வருவதே இன்பம்;
மற்று எல்லாம்
புறத்த; புகழும் இல (குறட்பா,
39)
என்னும் குறட்பாவின்
பொருண்மை அமைப்பை அணுகலாம். இக் குறட்பாவில் பின்வருகின்ற நான்கு தொடர்களை அமைத்தால்
தெளிவு மிகும்:
1. அறநெறியில் ஈட்டப்படுகின்ற செல்வமே நிலைத்துநின்று இன்பம் பயக்கும்.
2. அது அழியாத
புகழையும் ஈட்டும்.
3. அறநெறிக்குப் புறம்பாகக் கிடைக்கின்ற செல்வம் நிலையில்லாதது;
புகழையும் தராது .
4. அதனால் புகழை ஈட்டுகின்ற அறநெறி சார்ந்த செல்வத்தைத் தேடி இன்பம் அடைக!
இவற்றுள், முதல் மூன்று தொடர்களும் குறட்பாவில்
விளம்பப்பட்டுள்ளன. பொருள் தெளிவிற்காக நான்காம் தொடரை நாம் வருவிக்கின்றோம்.
இதனால் வள்ளுவ அறநெறியை விளங்கிக்கொள்ளலாம். இதோடு
தொடர்புடைய குறட்பாக்களையும் இயைத்துக் கருதினால் தெளிவு வாய்ப்பாகும்.
அடுத்ததாக, தொடர்ப் பொருளாக்கத்தில் இடைச்சொற்கள் சீரிய பங்கு வகிப்பதால், இக் குறட்பாவில் ஆளப்பட்டுள்ள அத்து, ஆன், ஏ, மற்று, உம் ஆகிய இடைச்சொற்களின்
பொருளை உணரவேண்டும். சான்றாக,
நான் தந்தேன் /
நானே தந்தேன்/ நானும் தந்தேன் / நான் தந்தேனோ
ஆகிய பதிவுகளை ஒப்பிட்டால், இடைச்சொல்லின் தொடர்ப் பொருண்மை
ஆற்றல் புலனாகும்.
இந்தக் குறட்பாவிலுள்ள அறத்தான்
என்னும் சொல், அறம் +அத்து
+ஆன் என்னும் அமைப்புடையதாகும். இவற்றுள் அத்து
என்பது பொருளற்ற சாரியையாகும்; ஆன் மூன்றாம் வேற்றுமைப் பொருளில்,
உடனிகழ்ச்சிப் பொருளில், அதாவது ஒன்றுடன் மற்றொன்று
இணைந்து செல்வதைக் குறிப்பதாகும். இதை அறத்தோடு என்றும் கூறலாம்.
அறமும் இன்பமும் இணைந்தவை; இவற்றுள் அறம் தலைமையானது
என்னும் கருத்தை இது சுட்டுகின்றது.
அடுத்து, வருவதே
என்னும் சொல்லிலுள்ள ஏகாரம் கூற்றை உறுதிப்படுத்துகின்ற இடைச்சொல்லாகும்.
மற்று
என்னும் இடைச்சொல் வினைமாற்றுப் பொருளில் ஆளப்பட்டுள்ளது.
அதாவது முதலில் கூறப்பட்ட அறத்தான் வருவதே இன்பம் என்னும் கருத்திலிருந்து
மாறுபடுகின்ற நிலையைக் குறிக்கின்றது. புகழும் என்னும் சொல்லிலுள்ள உகரம் இழிவுப் பொருளை உணர்த்துகின்றது. அதாவது
இதைச் செய்யவேகூடாது என்று வலியுறுத்தப்பட்டு, நிலைத்த புகழை
இருத்துக என அறிவுறுத்தப்படுகின்றது.
இவ்வாறு ஊன்றி நோக்கும்போது,
மறத்தை விலக்கி, புகழை ஈட்டுகின்ற அறநெறி சார்ந்த
செல்வத்தைத் தேடித் தொய்வின்றிச் சிறக்கவும் என்னும் கருத்தை உணரலாம்.
நன்றி : மின்னூலகங்கள்.
********
அருமையான பொருளை எளிமையாக விளக்கியுள்ளீர். பேராசிரியப்பெருந்தகைக்கு நன்றி.
ReplyDelete