பொருண்மை நோக்கில் புறநானூற்றில் கொண்டியும் போந்தையும்

முனைவர் ப. கொழந்தசாமி, இணைப் பேராசிரியர், காஅபமேஆநி, புதுவை.

தொன்மையான, சொல் வளம் மிக்க உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்வதால், தமிழ் இலக்கியங்களில் பல திறப்பட்ட சொற்கள் பெய்யப்பட்டுள்ளன. எனவே இலக்கியங்களைப் புரிந்துகொள்ள, அவற்றில் ஆளப்பட்டுள்ள சொற்களின் கருத்தைத் தெளிவாக அறியவேண்டும். இக் கருத்துரையில் சங்கத் தொகைப் புற  இலக்கியமான புறநானூற்றில் கொண்டி, போந்தை ஆகிய சொற்கள் பெயர் எனும் ஒரே இலக்கண வகையில் மாறுபட்ட  பொருள்களில் பயின்றுவருவது விளக்கப்படுகின்றது.

பல ஊரினரான, பல காலத்தைச் சார்ந்த157 புலவர்களால் இயற்றப்பட்ட புறநானூற்றுப் பாக்களில் மொழி மற்றும் பண்பாட்டுப் பன்முகத் தன்மை இயல்வது இயற்கை. தொல்காப்பியர் எச்சவியலில்,

 செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம்குறிப்பினவே திசைச்சொல் கிளவி  (நூற்பா, 883 )

என்று தொல்பழங் காலத்திலேயே தமிழில் வட்டார வழக்குச் சொற்கள் வழங்கப்பட்டதைச் சுட்டிள்ளார்.

இதனால். புறநானூற்றில் ஆளப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லையும்,  அது தொடரில் அமைகின்ற சூழல் நோக்கி முறையாகப் பொருளறியவேண்டும் என்னும் கருதுகோளுடன் இக் கருத்துரை இயல்கின்றது.

சொல் வருகைப் பட்டியல்:  போந்தை

பாடல்அடி            எண்

சொல் வகை

கருத்து

85/ 07

பெயர்

பனை மரம்

100 / 03

பெயர்

பனம்பூ

265 / 03

பெயர்

பனையோலை

297/10

பெயர்

பனை மரம்

338 /04

பெயர்

ஊரின் பெயர்

338 /06

பெயர்

பனம்பூ மாலை

375 / 04

பெயர்

பனை மரம்

 

மேற்படி பட்டியலால் , போந்தை என்னும் சொல் பனை மரத்தையும் அதன் சினைகளான ஓலை, ஓலை, பூ அகியவற்றைக் குறித்து வழங்கப்பட்டமையும், னம்பூ மாலை சேர மன்னரின் அடையாள மாலையாகத் திகழ்வதையும் அறிய முடிகின்றது. அவ்வாறே போந்தை என்னும் ஊர் நெடுவேள் ஆதனின் நகராக விளங்கியதும் (338ஆம் பாட்லின் 04ஆம் அடி ) புலனாகின்றது. இதனால் பனை மற்றும் ஊரைக் குறிப்பதாகப் போந்தை என்னும் சொல் புறநானூற்றில் பயில்வது தெளிவாகின்றது.

     அடுத்ததாக, கொண்டி என்னும் சொல் பகை நாட்டிலிருந்து கொள்ளப்பட்ட பொருளையும், அரசனுக்குச் செலுத்தப்பட்ட திறையையும் குறிப்பதோடு, பகை நாட்டிலிருந்து போரின் இறுதியில் அழைத்துவரப்பட்ட மகளிரையும் குறித்துவருகின்றது. அதாவது அரசனுக்குக் கிடைத்த வரவைப் பொதுவாகக் குறிப்பதைப் பின்வரும் பட்டியல் வெளிப்படுத்துகின்றது.

சொல் வருகைப் பட்டியல்:   கொண்டி

பாடல்அடி            எண்

சொல்       வகை

கருத்து

51 / 06

பெயர்

திறை

78 / 06

பெயர்

கொள்ளப்பட்ட பொருள்

198 / 12

பெயர்

கொள்ளப்பட்ட பொருள்

338 / 05

பெயர்

கொள்ளப்பட்ட மகளிர்

382/01

பெயர்

கொள்ளப்பட்ட பொருள்

390 / 23

பெயர்

 மிகுதியான பொருள்

 

இவ்வாறாக, புறநானுற்றில் பயிலுகின்ற சொற்களைத் தெளிவாகப் பொருளுணர்ந்து பொருத்தமான கருத்தை அறியவேண்டும், அப்போது இலக்கியத் தகைமையோடு தமிழ் மொழியின் சொல் வளமும் வெளிச்சமாகும்.

நன்றி;  மின்னூலகங்கள்     &   (http://tamilconcordance.in)

********

            

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு