திருக்குறளில் நீக்கலும் நீங்கலும்வழக்குப் பொருண்மைஒப்பு நோக்கு

      . கொழந்தசாமி, தமிழியல் துறைத் தலைவர், அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

        தமிழுக்கும் தமிழருக்கும் புகழீட்டி, மானுட மேன்மையை வாய்ப்பாக்குகின்ற   நன்மறையான திருக்குறள்,  மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது. வாழ்வியல் விழுமியங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும், இலக்கிய உத்திகளும் நடையியல் நுட்பங்களும் திருக்குறளில் செறிந்து காணப்படுகின்றன. வழக்குச் சூழலுக்கேற்பவும் தொடர்ப் பொருண்மை/ பயன் மொழியியல் / நடையியல்/ குடிமையியல்/ எடுத்துரைப்பியல் நோக்கிலும் இத்தகைய கூறுகளை நுணுகி ஆராய்ந்து கருத்துணரவேண்டும். அப்போது படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி, அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் மக்களிடம் இயல்பாகப் பிறக்கும். அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள மொழி, இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிந்திருக்கவேண்டியது தேவையாகின்றது. இந்த நோக்கத்தில், அறவியல் வகுத்தற்கு நீக்கல், நீங்கல் ஆகிய துறைச்சொற்களை வள்ளுவம் இயக்கியுள்ள பாங்கைப் பகர்ந்து , இச் சொற்களின் வழக்குப் பொருண்மையை ஆய்வதாக இக் கட்டுரை இயல்கின்றது. இதன்மூலம் வள்ளுவ மாண்பினையும் அறவியலையும்  வெளிப்படுத்த இயலும். இந்தச் சொற்களின் மூலம் நடத்தை விழிப்புணர்வை  விதைக்க வள்ளுவம் விழைகின்றது என்பது இக் கட்டுரையின் கருதுகோளாகும்.

நீக்கல்சொற்பொருள் :

 பன்மொழி மின்னியல் அகரமுதலியான விக்சனரி நீக்கல் என்னும் பெயர்ச்சொல்லின் பொருளாக நீக்குதல், அழித்தல்  ஆகியவற்றைச் சுட்டுகின்றது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி மாறுபட்ட ஐந்து பொருள் கூறி, அகற்றல், நீக்குதல், போக்கல், விலக்கல் ஆகிய பொருளை வழக்குப் பொருண்மை நோக்கில் குறிக்கின்றது.

            சாமி வேலாயுதம் தொகுத்த திருக்குறட் சொல்லடைவு (.173 ), துறத்தல், அகற்றல், நீக்குதல், போக்கல், விலக்கல் ஆகிய பொருளை வழக்குப் பொருண்மை நோக்கில் குறிக்கின்றது.

            இந்தப் பின்னணியில் , நீக்கல் என்னும் சொல் திருக்குறளில் வழங்கும் அட்டவணை வருமாறு:

குறள் எண்

வருகை

கருத்து

194

நன்மையின் நீக்கும்

விலக்கல்

327

தன்னுயிர் நீப்பினும்

போக்கல்

327

இன்னுயிர் நீக்கும்

போக்கல்

330

உயிர் உடம்பின் நீக்கியார்

போக்கல்

384

அல்லவை நீக்கி

அகற்றல்

436

தன் குற்றம் நீக்கி

துறத்தல்

442

உற்ற நோய் நீக்கி

விலக்கல்

685

தூவாத நீக்கி

விலக்கல்

787

அழிவனவை நீக்கி

விலக்கல்

920

திரு நீக்கப்பட்டார்

விலக்கல்

1160

அல்லல் நோய் நீக்கி

போக்கல்

          

நீக்கல் என்கின்ற சொல் நீப்பின், நீக்கப்பட்டார் என்றும், வினையெச்சம்; வினையாலணையும் பெயர்; வினைமுற்று  ஆகிய வடிவங்களிலும் வழங்கப்பட்டுள்ளதை மேற்படி அட்டவணையால் அறியலாம்இதனால் நீக்கல் என்கின்ற வினைச்சொல் வேறுபட்ட பொருளில் பயில்வதையும், சிறப்பாக அகற்றல், விலக்கல் என்னும் கருத்தில்    தேவையற்ற / அழிவை ஏற்படுத்துகின்ற ஒன்றைத் தன்னை அண்டாமல் விரட்டல் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்த, பிறவினைச் சொல்லாகத் திருக்குறளில் ஆளப்படுவதையும் தெளியலாம்.  

நீங்கல் : சொற்பொருள்:

பன்மொழி மின்னியல் அகரமுதலியான விக்சனரி நீங்கல் என்னும் வினைச்சொல்லின் பொருளாக விலகுதல், பிளத்தல்  ஆகியவற்றைச் சுட்டுகின்றது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி( . 131 ) மாறுபட்ட மூன்று பொருள் கூறி, அகறல், நீங்குதல் ஆகிய பொருளை வழக்குப் பொருண்மை நோக்கில் குறிக்கின்றது. சாமி வேலாயுதம் தொகுத்த திருக்குறட் சொல்லடைவு (பக்.173-174 ), அகறல், கெடுதல், இழத்தல், விலகல் ஆகிய பொருளை வழக்குப் பொருண்மை நோக்கில் குறிக்கின்றது.

நீங்கல் என்னும் சொல் திருக்குறளில் வழங்கும் அட்டவணை வருமாறு:

குறள் எண்

வருகை

கருத்து

98

சிறுமையுள் நீங்கிய இன்சொல்

துன்பம் தராத

154

நிறையுடைமை நீங்காது வேண்டின்

          அகறல்

195

சீர்மை சிறப்பொடு நீங்கும்

அகறல்

246

பொருள் நீங்கி

அகறல்

246

அருள் நீங்கி

அகறல்

341

யாதனின் நீங்கியான்

தவிர்த்தல்

352

இருள் நீங்கி

அகறல்

352

மருள் நீங்கி

அகறல்

353

ஐயத்தின் நீங்கி

அகறல்

358

பேதைமை நீங்க

அகறல்

383

மூன்றும் நீங்கா

விலகல்

495

அடும்புனலின் நீங்கின்

அகறல்

502

குற்றத்தின் நீங்கி

அகறல்

519

நீங்கும் திரு

அகறல்

562

ஆக்கம் நீங்காமை

அகறல்

592

நில்லாது நீங்கிவிடும்

அகறல்

864

நீங்கான் வெகுளி

அகறல்

1104

நீங்கின் தெறூஉம்

விலகல்

1124

அன்னள் நீங்கும் இடத்து

விலகல்

1155

அவர்நீங்கின்

விலகல்

1216

காதலர் நீங்கலர்

விலகல்

1234

பணை நீங்கி

குறைதல்

1234

துணை நீங்கி

விலகல்

1265

நீங்கும் என் மென்தோள்

தீர்தல்


          நீங்கல் என்கின்ற சொல் நீங்கலர் என்றும், பெயரெச்சம்; வினையெச்சம்; வினைமுற்று, தொழிற்பெயர் ஆகிய வடிவங்களிலும் வழங்கப்பட்டுள்ளதை மேற்படி அட்டவணையால் அறியலாம்இதனால் நீங்கல் என்கின்ற வினைச்சொல் அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் தீமையைத் தவிர்த்தல் என்கின்ற விழிப்புணர்வுத் துறைச்சொல்லாகவும்; காமத்துப்பாலில் பிரிவைச் சுட்டுகின்ற உளவியல் துறைச்சொல்லாகவும் வேறுபட்ட பொருளில் பயில்வதையும், சிறப்பாக அகறல், விலகல் என்னும் கருத்தில் தேவையற்ற / அழிவை ஏற்படுத்துகின்ற ஒன்றிலிருந்து தன்னை விலக்கிப் பாதுகாத்துகொள்ளல் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்த, தன்வினைச் சொல்லாக முன்னிரு பால்களிலும், காமத்துப்பாலில் தலைமக்களுக்கிடையிலான பிரிவை உணர்த்துவதாகவும் திருக்குறளில் ஆளப்படுவதையும் தெளியலாம்.  

நீக்கல்; நீங்கல் ஆகிய துறைச்சொற்களின் வாயிலாகவும் திருக்குறள் மானுட மேன்மைக்கான விழுமியங்களை வழிமொழிந்துள்ளது. இவ்வாறு வள்ளுவ அறவியலை / நடையியலைச் சொற்பொருண்மை நோக்கில் அணுகினால் கருத்துத் தெளிவு சிறக்கும்.

                                                       பயன்பட்டவை

சாமி வேலாயுதம் ( 2005 ) , திருக்குறட் சொல்லடைவு, சென்னை; தென்னிந்திய தமிழ்ச் சங்கம்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, ஐந்தாம் மடலம், - இரண்டாம் பாகம், பக்.129-132. தமிழ் இணையக் கல்விக் கழக மின்னூலகம்.

விக்சனரி , பன்மொழி மின்னியல் அகரமுதலி, கூகுள் இணையதளம்.

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு