ஆணியால் வள்ளுவம் வகுக்கும் அறம்
பேராசிரியர்
குழந்தைசாமி, புதுச்சேரி
திருக்குறளில் ஆளப்பட்டுள்ள
ஒவ்வொரு சொல்லிலும் ஓர் அறக் கொள்கை இலக்கியத் தொழில்நுட்பத்துடன் புகுத்தப்பட்டிருப்பதால்,
மானுட மேன்மைக்கான விழுமியங்களை விண்டுரைக்கின்ற சீரிய செவ்வியல் இலக்கியமாக
வள்ளுவத்தை உலகம் உணர்ந்துள்ளது. இதனைத் தெளிவாக அறியத் திருக்குறள்
சொற்களின் கருத்தைத் தொடரமைப்பு , மொழிச் சூழல் , விளம்புகின்ற பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகி அறிவது இன்றியமையாததாகின்றது.
திருக்குறளில் ஆணி என்னும்
பெயர்ச் சொல் ஒன்றன்பால் பொருட்பெயராக,
உருவுகண்டு
எள்ளாமை வேண்டும்; உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார்
உடைத்து. (வினைத் திட்பம், குறட்பா 667 )
(Despise
not men of modest bearing; Look not at form, but what men are:
For some there live, high functions sharing,
Like linchpin of the mighty car!.)
உழுவார்
உலகத்தார்க்கு ஆணி ;அஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. ( உழவு, குறட்பா 1032 )
(Agriculturists are (as it were) the linchpin of the world
for they support all other workers who
cannot till the soil.)
என்னும் இரண்டு குறட்பாக்களில், இயல்கின்றது. வினைத்திட்ப அதிகாரப் பொருட் சூழலுக்கேற்ப,
தேரின் அச்சாணிப் பயன்பாடு உணர்த்தப்படுகின்றது. தேர் பெரியது ; வண்ணமயமானது; ஆற்றல்
மிக்கது, ஆனால் அச்சாணி சிறியது. இவ்வளவு
பெரிய தேர் இயங்க அச்சாணி இன்றியமையாதது. இதைக் கடையாணி என்றும்
வழங்குவர். சிறு
துரும்பும் பல் குத்த உதவுமாறு,
தேரின் இயக்கத்திற்கு அச்சாணி இன்றியமையாததாக அமைகின்றது. இதில் உருவக் காட்சி / இயங்கியல் மூலம் மனிதப் பயன்பாட்டு விழுமியத்தை வள்ளுவம் வகுத்துரைத்துள்ளது.
இதை ஆழ்ந்து நோக்கின் எவரையும் உருவங் கண்டு ஒதுக்காத மனநிலை / அணுகுமுறை அனைவரின் உள்ளத்திலும் ஊன்றும்.
உழவு அதிகாரத்தின் 1032ஆம் குறட்பாவில் உழவரின் உலகு புரக்கின்ற வேளாண்மைச் செம்மையைப் பாராட்டுகின்றார்.
மனிதர்க்கு மட்டுமல்லாமல் பிற உயிரினங்கட்கும் வாழ்வளிக்கின்ற வேளாளரின்
மேன்மை, உருக் காட்சி உவமை வழியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
உயிரியக்கத்திற்கு உணவு தேவை; இதை அனைவரும் விளைவிப்பதில்லை.
காராளர் விளைவித்து உலகு புரக்கின்றனர். அவர்கள் உயிர்களின் வணக்கத்திற்கு
உரியோர்.
மக்கள் இயல்பாக,
எளிமையாகப் பயன்படுத்துகின்ற அச்சாணி வாயிலாக, ஏற்றுப் போற்றுகின்ற வாழ்வியல் விழுமியத்தை உருக் காட்சி உத்தியில் விளக்குகின்ற
வள்ளுவத்தை நோக்கி அறிந்து சிறக்கலாம்.
--------------------------
Comments
Post a Comment