தொடர்ப் பொருண்மை நோக்கில் 877ஆம்  குறட்பாவின்  தொடர் அமைப்பு


  முனைவர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி

சீரிய  அற இலக்கியமான  திருக்குறளில்  தொடரியல் நுட்பங்கள்  காணப்படுகின்றன.  இவற்றை  முறையாகப்  பொருள் உணர்ந்தால்  அந்தக் குறட்பாவில்  சுட்டப்படும்  வாழ்வியல் விழுமியம்  அறியப்படும்.  அவ் வகையில்  பகைத்திறம் தெரிதல்  அதிகாரத்தின், கீழ்வரும்  877ஆம்  குறட்பாவின்  தொடர் அமைப்பைத் தொடர்ப் பொருண்மை நோக்கில்  இக் கட்டுரை  விளக்குகின்றது.

               நோவற்  நொந்தது  அறியார்க்கு;  மேவற்க

               மென்மை பகைவர் அகத்து 

இந்தக்  குறட்பாவில்  இரண்டு  தொடர்கள்  அமைந்துள்ளன.  அதாவது  உன்னுடைய நோவை அறிந்து போக்க இயலாதவர்களுக்கு  அதைப்பற்றி கூற வேண்டாம்;  அவ்வாறே  உமது மெலிவைப்  பகைவர்  அறியச்செய்ய வேண்டாம்  என்னும் இரண்டு தொடர்கள்  இக் குறட்பாவில் இயல்கின்றன.  ஆனால்  தொடர்களின் உறுப்புச் சொற்கள்  முறையான தொடரியல்  வரிசை முறையில்  அமையவில்லை.  அவற்றை  உரைநடைத்  தொடர்களாகப்  பின்வருமாறு அமைக்கலாம்.  அறியார்க்கு  நொந்தது  நோவற்க  என்றும்,  பகைவரகத்து மென்மை மேவற்க  என்றும்  முறைப்படுத்தலாம்.  இங்கு நோ என்பது முதனிலைத் தொழிற்பெயராக,  மன வருத்தத்தை வெளிபடுத்துவதைக்  குறிப்பதாக  இயங்குகிறது.  நண்பர்களிடத்தும்  பகைவர்களிடத்தும் உன்னுடைய மெலிவைக்  கூறக்கூடாது;  அது நலிவை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கையாக இந்தக் குறள் அமைந்துள்ளது.  இந்த இரண்டு தொடர்களையும் இணைக்கின்ற இணைப்புச் சொல்லாக அவ்வாறே / அதைவிட என்பதை அமைத்தால்  பொருள் தெளிவு  ஏற்படும்.  நோய் என்பதிலிருந்தும் நோவு என்பது மாறுபட்டது.  பொதுவாக  நோய் என்பது உடலின்  நலக்குறைவை, ஒரு நோயை / காய்ச்சல் , வலி போன்ற  உடல்  நலிவைக் குறிப்பதாக அமையும்.  நோ எனும் முதனிலைத் தொழிற்பெயராக அமைந்த நோவற் என்னும் சொல்  மன வருத்தத்தை வெளிப்படுத்தல் என்று அமைகின்றது. ஆகவே நோவை  மன வருத்தமாக  உணர்ந்தால்  தொடரின்  கருத்து  நன்கு விளங்கும்.  குறுந்தொகை நான்காவது பாட்டிலும் 202ஆவது பாடலிலும் நோமென் நெஞ்சே  என்பது  இயல்கிறது  ஆகவே  மன வருத்தத்தை  நோவு என்று சொல்வது  பழந்தமிழ் மரபாக அறியப்படுகிறது.

இங்ஙனம், ஒரு குறட்பாவில் எத்தனை தொடர்கள் உள? / அவற்றை இணைக்கின்ற சொல் எது? / தொடரின் உறுப்புகள் வரிசைமுறையில் இயல்கின்றனவா?/ சொல்லின் பொருள் இயல்பாக இயல்கின்றதா? என்று நோக்கி, முறைப்படுத்தி, ஏதேனும் சொல் மாறுபட்டிருந்தால்/விடுபட்டிருந்தால் அதையும் தகவமைத்துக் கருத்தறியவேண்டும்.

பயன்பட்டவை

தமிழ் இணையக் கல்விக்கழகத் தரவுகள்

*****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு