திருக்குறளில் ஒளி : பயில்வுப் பொருண்மை
முனைவர்ப. கொழந்தசாமி, தமிழியல் துறைத் தலைவர்,
அரசினர் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி.
மானுட மேன்மையை
வாய்ப்பாக்க வழங்கப்பட்ட வள்ளுவம் மொழி, இலக்கிய,
பொருண்மைத் தொழில்நுட்பங்களைக் கையாண்டு ஆக்கப்பட்டுள்ளது. செறிவான
கருத்தாலும் எடுத்துரைக்கின்ற சீர்மையாலும் திருக்குறள் மேன்மையானதாக ஒளிர்கின்றது.
திருவள்ளுவர் பெய்துள்ள சொற்கள் பொருண்மை & தொடரியல் நுட்பங்
கொண்டவை; அவற்றை உற்றுநோக்கித் தெளிந்தால் புரிதிறன் மேம்படும்.
அவ் வகையில் , திருக்குறளில் ஒளி என்னும்
சொல்லின் கருத்துப் பொருண்மையை விளக்குவதாக, இக் கட்டுரை இயல்கின்றது.
சொற்பொருண்மை நோக்கில் அணுகினால் வள்ளுவ விழுமியம் தெளிவாகும் என்பது
இதன் கருதுகோள் ஆகும்.
ஒளி- சொற்பொருள் :
ஒளி என்கின்ற சொல், பழி / அடி
/ கல்/ பார் / நடு ஆகியவற்றைப்
போன்று பெயராகவும் வினையாகவும் தொன்றுதொட்டு உலக & செய்யுள்
வழக்குகளில் பல்பொருட்சொல்லாக இயல்கின்றது. தொல்காப்பிய உரியியல்
நூற்பா ( 851 ) வெளிச்சம் என்ற பொருளிலும் : செய்யுளியல் நூற்பா (1436 ) பெருமை என்கின்ற கருத்திலும்
இச் சொல்லை ஒப்புருப் பெயர்ச் சொற்களாக ஆண்டுள்ளன.(
வ. ஜெயதேவன், ப,
79 ) ஒளிநுதல் ( முருகு. அடி 06 ); ஒளி படைத்த கண்ணினாய்
வாவா( பாரதியார் பா ) போன்ற இலக்கிய வழக்குகளும்
நிலவொளி / ஒளிந்துகொண்டான் போன்ற பேச்சு வழக்குகளும் பயில்கின்றன.
எனவே இச் சொல் பெயராக வெளிச்சம், புகழ்,
பெருமை, கண் பார்வை, அழகு
போன்ற பொருளைச் சூழலுக்கேற்பச் சுட்டுவதைத் தெளியலாம்; வினையாக
, மறைதல் /மறைத்தல் என்னும் பொருளில் இயல்கின்றது.
அதாவது நீ மறை
எனச்
செயப்படுபொருள் குன்றிய வினையாகவும், கையை மறைக்க என்று
செயப்படுபொருள் குன்றா வினையாகவும் வழங்கப்படுகின்றது.
( சொற்பிறப்பியல் பேரகராதி,
முதன் மடலம்; மூன்றாம் படலம், ப.380 ). இவ்வாறு ஒப்புருப் பெயராகவும் , இரண்டு நிலை வினைச்சொல்லாகவும் இது தொன்றுதொட்டு இருவகை வழக்குகளிலும் பயன்படுகின்றது.
இத்தகைய பொருண்மை நுட்பங்கொண்ட எளிய சொல்லை வள்ளுவம் வளமையான படைப்பு
வாய்ப்பாக அமைத்துக்கொண்டது.
வள்ளுவத்தில் ஒளி:
வினையாக:
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்
(1070 )
என்னும் குறட்பாவில்,
மறையும் என்னும் பொருளில்
எதிர்கால வினைமுற்றாக ஒளி என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. இரப்பவர்க்கு இல்லை என்று மறைக்கின்ற செயலைக் கடிவதாக , இக் குறட்பா
இயல்கின்றது.
பெயராக:
பின்வருமாறு அட்டவணைப்படும்
குறட்பாக்களில் ஒப்புருச் சொல்லாக, அதாவது உருவம் ஒன்று,
ஆனால் தொடர்புடைய வெவ்வேறு பொருளில் ( ஒரு பொருட்
களனில் ) ஒளி என்னும் பெயர்ச்சொல் பயில்கின்றது.
|
குறட்பா எண் |
சொல் வழக்கு |
கருத்து |
|
390 |
வேந்தர்க்கு ஒளி |
புகழொளி |
|
556 |
மன்னர்க்கு
ஒளி. |
நற்புகழ் |
|
653 |
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை |
மேன்மை, புகழ் |
|
698 |
நின்ற ஒளியோடு ஒழுகப்படும் |
நிலைமை |
|
714 |
ஒளியார்முன் ஒள்ளியராதல் |
அறிவாளி |
|
870 |
ஒல்லாது ஒளி |
விரும்பிப் பாராட்டப்படல் |
|
921 |
ஒளியிழப்பர் |
சிறப்பு, பெருமை |
|
939 |
ஒளி |
சிறப்பு, பெருமை |
|
970 |
ஒளி |
சிறப்பு, மேன்மை |
|
971 |
ஒளி |
சிறப்பு, மேன்மை |
இவ்வாறு புகழ்,
மேன்மை, பாராட்டு என உயர்வையும் சமூக மதிப்பையும்
குறிப்பதாக ஒளி நுட்பமாக ஆளப்பட்டுள்ளதைத் தொடர் மற்றும் பயில்வுச் சூழலின்
அடிப்படையில் (கருத்தை )அறியலாம்.
அடுத்து, பண்புப் பெயராக 27, 267, 1118 ஆம் குறட்பாக்களில் முறையே,
“சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் “ = கண் பார்வை
“பொன்போல்
ஒளிவிடும் “ = பளபளத்தல்
“முகம்போல் ஒளிவிட வல்லையேல்” = கவர்ச்சி / ஈர்ப்பு
என்னுமாறும், பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாக
1329 ஆம் குறட்பாவில்,
“ ஒளியிழை
“= விரும்பத்தக்க பெண்
என்றும்,
வினையாலணையும் பெயராக 487, 928 ஆம் குறட்பாக்களில் முறையே,
“ ஒள்ளியவர் “ = அறிவுடையார்
“ஒளித்ததூஉம் “ = “நெஞ்சில்
ஒளிந்திருந்த குற்றம் “ என்றும்,
பெயரடையாக 727, 1088, 1125 ஆம் குறட்பாக்களில் முறையே,
“பேடிகை ஒள்வாள்” = கூர் தீட்டியதால் ஒளிவிடுகின்ற வாள்
” ஒள் நுதலுக்கு” = ஒளி பொருந்திய மாதரது நெற்றி
”ஒள்ளமர்க் கண்ணாள்”= ஒள்ளிய அமரைச்
செய்யும் கண்ணள்
என்றவாறு பயில்கின்றது.
ஒள், அமர் என்னும் இரண்டு பண்புகள் கண்ணாள் என்னும்
பெண்பாற் பெயருக்குப் பெயரடைகளாக இயல்கின்றன. வாள், நெற்றி, கண் ஆகியற்றின் பண்புகளை விளக்குவதாக மேற்கண்ட
பெயரடைகள் அமைந்துள்ளன.
எதிர்ச் சொல்:
ஒளி
என்னும் பெயர்ச்சொல்லோடு கருத்தில் முரணும் எதிர்ச்சொற்களையும் திருக்குறள் ஆண்டுள்ளது.
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். (971)
என்னும் குறட்பாவில்
ஒளி (பெருமை ) என்பதன் எதிர்ச்சொல்லாக
இளி (இழிவு)என்னும் சொல் அமைக்கப்பட்டுள்ளது.
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை
வண்ணம் கொளல். (714)
என்பதில் ஒளியார் (அறிவிற் சிறந்தவர்) என்பதன் எதிர்ச்சொல்லாக வெளியார்(பேதையர்) என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. தனியாள்
உளவியலிலும் சமூக இயக்கத்திலும் உள்ள முரணை இத்தகைய எதிர்ச்சொற்கள் குறிக்கின்றன;
இவற்றைக் களைந்தால் வளமை வாய்க்கும்.
கருத்து வளத்தால் சிறப்புப்
பெற்றதைப் போலவே , சொற்பொருண்மைத் தளத்திலும்
வள்ளுவம் வானுயர்ந்து திகழ்கின்றது; நோக்கித் தெளிந்தால் மானுடம்
வெல்லும்.
பயன்பட்டவை
ஜெயதேவன்,
வ. 2004 , தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைகழகம்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
பேரகராதி https://www.tamilvu.org/ta/library-ldpam-ldpam00-html-ldpam00hom-244696
கூகுள் இணையச் செய்திகள்
____________
Comments
Post a Comment