திருக்குறளில் ஆறு – பொருண்மை நோக்கு
முனைவர்
ப.கொழந்தசாமி,
தமிழியல் துறைத் தலைவர்,
அரசினர்
ஆய்வு நிறுவனம்,
புதுச்சேரி
605 008.
அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே
கையாண்டு படைக்கப்பட்டுள்ளது. வாழ்வியல் விழுமியங்களை விண்டுரைப்பதை
முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும், இலக்கண /இலக்கியவியல் உத்திகளும் நடையியல் நுட்பங்களும் திருக்குறளில் செறிந்து காணப்படுகின்றன.
காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர்
அமைப்பு நுட்பங்களாலும் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை.
குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால் படைப்பின்
பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி, அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் பிறக்கும். அதனால்
திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிவது
தேவையாகின்றது. குறட்பாக்களின் புரிதிறனில் உள்ள கடினத் தன்மை
/ மருட்சி ஆகியவற்றை நீக்க இத்தகைய பொருண்மையியல் அணுகுமுறை உறுதுணையாகும்.
சான்றாக, திருக்குறளில் ஆளப்பட்டுள்ள ஆறு என்னும் சொல்லைக் கருதலாம். இச் சொல் பெயராகவும் வினையாகவும் எண்ணுப் பெயரடையாகவும்,
ஆளப்பட்டுள்ளது. அமைப்புச் சூழலுக் கேற்பவும் தொடர்ப்
பொருண்மை நோக்கிலும் இத்தகைய சொற்களை நுணுகி ஆராய்ந்து கருத்துணரவேண்டும். அதாவது ஒரு சொல் சூழலுக்கேற்பப் பல பொருளுணர்த்தும் பலபொருளொருசொல்லாக வழங்கப்படுவதுண்டு.
ஆறு என்னும் சொல் திருக்குறளில் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறே இறை, எண், துணை ,
குறிப்பறிதல் போன்றவற்றையும் கருதலாம். இக் கட்டுரை ஆறு என்னும் சொல்லை
மாறுபட்ட பல கருத்துகளில் பலபொருளொருசொல்லாகவும்
ஒப்புருச் சொல்லாகவும் திருவள்ளுவர் ஆண்டுள்ளதைப் பகர்வதாக அமைகின்றது. சொல், தொடர்ப் பொருண்மை நோக்கில் அணுகினால் விழுமியங்களைத்
தெளிவாக அறியலாம் என்பது இவண் கருதுகோளாகும்.
ஆறு– சொற்பொருள் :
ஆறு என்னும் அடிச்சொல்லின் பொருளாகத்
திருக்குறள் சொல்லடைவு (ப.29 ) ,
பயன், நெறி, தன்மை, தீரும், எண்
ஆகியவற்றையும்,
பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
பேரகரமுதலி ( பக். 202 ) முதல் மடலம் இரண்டாம் பாகம்
யாறு, பாதை, வழிவகை, பயன், எண்
ஆகியவற்றையும் சுட்டுகின்றன. இதனால் ஆறு என்னும் சொல்
பெயராகவும் வினையாகவும் தமிழில் பழங்காலத்திலிருந்து வழங்கிவருவது தெளிவு. இக்காலப் பேச்சு வழக்கிலும் நெறி, எண், தீரும் ஆகிய பொருளில் பெயராகவும் வினையாகவும் இது ஆளப்படுகின்றது.
திருக்குறளில் ஆறு- சொல்லாட்சி அட்டவணை
|
குறள் எண் |
சொல்லாட்சி |
சொற்பொருள் |
சொல்
வகை |
|
37 |
அறத்து ஆறு |
பயன் |
பெயர் |
|
43 |
ஐம்புலத்து ஆறு |
நெறி |
பெயர் |
|
161 |
ஒழுக்கு ஆறா |
நெறி |
பெயர் |
|
219 |
அமைகலா ஆறு |
நெறி |
பெயர் |
|
222 |
நல் ஆறு |
நெறி |
பெயர் |
|
324 |
ஓர் ஆறு |
நெறி |
பெயர் |
|
465 |
ஓர் ஆறு |
நெறி |
பெயர் |
|
478 |
ஆகு ஆறு, போகு ஆறு |
வழி |
பெயர் |
|
662 |
ஆறு என்பர் |
நெறி |
பெயர் |
|
787 |
ஆறு உய்த்து |
நெறி |
பெயர் |
|
849 |
கண்ட ஆறு |
நெறி |
பெயர் |
|
932 |
வாழ்வதோர் ஆறு |
நெறி |
பெயர் |
|
943 |
நெடிது உய்க்கும் ஆறு |
நெறி |
பெயர் |
|
129 |
புண் உள் ஆறும் ஆறாதே |
புண்
காயும் |
எதிர்கால
வினைமுற்று
|
|
129 |
ஆறாதே
வடு |
நீங்காது |
எதிர்கால எதிர்மறைவினைமுற்று |
|
590 |
அறுதொழிலோர் |
திறனாளர் |
பன்மைத்
தொகைப் பெயர் |
மேற்கண்ட அட்டவணையால் பெரும்பாலும் பெயராகவும், 129ஆம்
குறட்பாவில் புண், வடு ஆகிய காய்கின்ற வினையையும் ,
590ஆம் குறட்பாவில் பன்மைத்தொகைப்
பெயராக ,முதல் சுருங்கி அறு என்கின்ற சொல் எண்ணுப்பெயரடையாகவும்
திருக்குறளில் வழங்கப்பட்டுள்ளதைத் தெளியலாம்.
நுவல்கின்ற கருத்தாலும்
மொழிநடைச் செம்மையாலும் வள்ளுவம் சிறப்படைகின்றது. அங்ஙனமே திருக்குறளின்
மேன்மைக்கும் நிலைபேற்றிற்கும் சொல்லாட்சி / பொருண்மைத் தகைமையும்
காரணம் ஆகின்றது.
பயன்பட்டவை
இராசேந்திரன்,தி.(உரை.), 2023, திருக்குறள், புதுவை; சேது அறக்கட்டளை.
வேலாயுதம்,(தொகு.), 2002, திருக்குறள் சொல்லடைவு
, சென்னை; சைவசித்தாந்தக் கழகம்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, முதல் மடலம்;
இரண்டாம் பாகம். https://www.tamilvu.org/ta/library-ldpam-ldpam00-html-ldpam00hom-244696
Comments
Post a Comment