திருக்குறளில் தா – கருத்தாய்வு
முனைவர்
ப.கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம்,
புதுச்சேரி 605 008.
அற
இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு
படைக்கப்பட்டுள்ளது. வாழ்வியல் விழுமியங்களை
விண்டுரைக்கும்போது நடையியல் நுட்பங்களை வள்ளுவம் செவ்வனே கையாண்டுள்ளது.. காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு
நுட்பங்களாலும் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை. குறட்பாக் கருத்துகளை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால்தான் படைப்பின்
பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி, அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் மக்களிடம் பிறக்கும். அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள மொழி, இலக்கண
அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிவது தேவை என்பது இவண் கருதுகோளாகும். குறட்பாக்களின் புரிதிறனில் உள்ள கடினத் தன்மை / மருட்சி
ஆகியவற்றை நீக்க இத்தகைய பொருண்மையியல் அணுகுமுறை வாய்ப்பாகும் என்னும் நோக்கில்,
திருக்குறளில் தா என்னும் சொல் சுட்டுகின்ற கருத்தை விளக்குவதாக இக்
கட்டுரை இயல்கின்றது.
தா-
கருத்தாய்வு:
தொல்காப்பியம் சொற்களை பெயர்,
வினை, இடை, உரி என்று நான்காக
வகைப்படுத்துகின்றது. இந் நால்வகைச் சொற்களையும் இலக்கியங்களும்.
மாநகர், மாமனிதன் என்று மக்களும் ஆளுகின்றனர்.
பெயர்ச் சொற்கள் உலக / கருத்துப் பொருள்களையும்;
வினைச் சொற்கள் பொருட்களின் இயக்கத்தையும் இயல்பையும்; இடைச்சொற்கள் தொடரிணைப்புக்கும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கும்; உரிச்சொல் சிறப்புப் பொருளிலும் அடையாகவும், கருத்தை
விளக்கத் தொடரில் இயல்கின்றன. ஒட்டுமொழியான தமிழில், மாமனிதன் பேசுகின்றார் என்னும் தொடரில் இந் நால்வகைச் சொற்களும் உள்ளன. தா என்ன்னும் சொல் செயப்படுபொருள் குன்றா
ஏவல் வினையாகவும், குற்றம் / கேடு
/அழிவு / வீழ்ச்சி / குறை
என்னும் கருத்தில் பெயரடையான உரிச்சொல்லாகவும் பலபொருள் ஒருசொல்லாகத் தொன்றுதொட்டு
வழங்கப்படுகின்றது. (பேரகராதி, நான்காம் மடலம்; முதற் பாகம், ப.337) தொல்காப்பியத்தில்
தா என்பது கொடு என்கின்ற பொருளில் வினையாகச் சுட்டப்பட்டுள்ளதோடு ( ஈ, தா,
கொடு – எச்சவியல் நூ,48) ; வலிமை / வருத்தம்
என்று பொருள்தரும் உரிச்சொல்லாகவும் ( உரியியல் நூ.
46 ) ; தாஇல் நன்மொழி கிளவி கிழப்பினும் ( களவியல்
நூ. 22) என்னும் நூற்பாவில் குற்றம் என்னும் பொருளுடைய
உரிச்சொல்லாக / பெயரடையாகவும் ஆளப்பட்டுள்ளது. தாவில் ( தா இல்லாத ) எனும்
இவ் ஆட்சி, திருமுருகாற்றுப்படை ( அடிகள்
89, 164, 175 ), நற்றிணை ( பா
271 அடி12 ), பதிற்றுப்பத்து (பா 81 அடி 34), அகநானூறு9
பா 37 அடி03 ) போன்ற சங்க
இலக்கியங்களிலும் திரிகடுகம் 02ஆம் பாடலிலும் இதே பொருளில் காணப்படுகின்றது. இவ்வாறே திருக்குறளில்,
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம்
தரும் (853)
என்னும்
குறட்பாவில் தா என்னும் உரிச்சொல் அழிவு / குறை / கேடு/
பாழ் என்னும் கருத்திலான பெயரடையாக அமைக்கப்பட்டுள்ளது.
இகல் என்னும் 86ஆவது அதிகாரம் பகல் என்னும் செயலைச்
சமூக நல்லிணக்கத்தைச் சீரழிக்கின்ற செயலாகச் சுட்டி, உறவுகளைப்
பிரித்தலைக் கடிந்து, அந்த மனநிலை துன்பம் செய்யும் என்று எச்சரிக்கின்றது. இதனால் தா என்னும் உரிச்சொல்,
சமூக உளவியல் கலைச்சொல்லாக, மானுட முன்னேற்றத்தை
விரும்புவார்க்கு ஒவ்வாத, விரும்பத்தகாத பண்பைக் குறிப்பதாகத்
திருவள்ளுவரால் ஆளப்பட்டுள்ளதை நோக்கி, ஒவ்வொருவரும் இகலென்னும்
எவ்வநோய் நீக்கித் தவலில்லாத் தாவில் விளக்காக ஒளிர்ந்து மனநிறைவும் புகழும் பெற்றுச்
சிறக்கலாம்.
பயன்பட்டவை
கூகுள்
இணைய, தமிழ்
இணையக் கல்விக்கழகத் தளங்கள்/ தரவுகள்.
Comments
Post a Comment