தொல்காப்பியத்தில் வேற்றுமை: சொற்பொருண்மை நோக்கு
முனைவர்
ப.
கொழந்தசாமி, புதுச்சேரி.
தொன்மையான, மரபு காக்கின்ற விளக்கமுறை
இலக்கணமான தொல்காப்பியத்தின் ஒவ்வொரு நூற்பாவும் இலக்கணக் கொள்கையை விண்டுரைக்கின்றன.
அவ் வகையில் சொல்லதிகாரத்தில், தமிழ்த் தொடரியல்
நோக்கில் வேற்றுமை இலக்கணக் கொள்கைகளும் எடுத்துரைக்கப்படுகின்றன. இங்கு வேற்றுமை என்கின்ற கலைச்சொல், ஒரு தொடரின் உறுப்புச்
சொல்லாக அமைகின்ற பெயர்ச் சொல்லின், தொடர்ப் பொருளை வேறுபடுத்தும்
பின்னொட்டின், இலக்கண இயங்கியல் என்னும்
கருத்தில் ஆளப்படுகின்றது. சான்றாக,
கண்ணன் குமரன் வென்றார்
என்னும்
தொடர்ப் பொருண்மைக் கட்டமைப்பில் இரண்டு ஆண்களுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெற்றவர்
குறித்துச் சுட்டப்படுகின்றது. இதிலுள்ள இரண்டு பெயர்ச்சொற்களும்
ஆண்பாலைக் குறிப்பன. எனவே இரண்டும் வென்றார் என்னும் செயப்படுபொருள்
குன்றா வினையை / பயனிலையை ஏற்கத்தக்கன. ஆனால் பொருண்மை வரையறையால் ஏதோ ஒரு பெயர் மட்டும் எழுவாயாக / செய்வானாக / வென்றவராக அமையும். தொடரியலின்படி எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்கின்ற அமைப்பில் இத் தொடர் இயன்றால்,
கண்ணன் குமரனை வென்றார்
என்று, கண்ணன் எழுவாயாகவும், குமரன் செயப்படுபொருளாயும் இயங்கி, கண்ணன் குமரனை வென்றார்
என்று அமையும். குமரனைக் கண்ணன் வென்றார் என்று நடை வேறுபாடு
செய்தாலும் தொடர்ப் பொருள் மாறாது; காரணம், ஐ என்னும் உருபைக் கொண்ட செயப்படுபொருள்
/ இரண்டாம் வேற்றுமைப் பொருண்மை ஆகும். அதாவது
ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு , தொடரின் செயப்படுபொருளோடு
மட்டுமே சேரும். செயப்படுபொருளாக அமைகின்ற பெயர் அந்தத் தொடரின் முதல் உறுப்பாகவும் அமையலாம்;
தொடர்ப் பொருள் மாறாது . சான்று:
குமரனைக்
கண்ணன் வென்றார்
ஒட்டுமொழியான
தமிழின் தொடர் இலக்கண அமைப்பில் , வேற்றுமை உருபு பெயர்ச் சொல்லின் பின்னொட்டாகவே அமையும்;
தொகையாகவும் இயலும்.
சான்று: பால் குடி ( நீ பாலைக் குடி என்பது இதன் புதை / பொருள் வடிவம்
).
இவ்வாறான தொடரியல் இலக்கண
அமைப்பை வேற்றுமை என்னும் இலக்கணவியல் கலைச்சொல்லால்
பெயரிட்டு வழங்கிய தொல்காப்பியர்,
யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது
கொச்சக ஒருபோது ஆகும் என்ப (செய்யுளியல் , நூ. 1409)
என்னும்
நூற்பாவில், பொது வழக்காக, வேறுபாடு என்னும் கருத்தில் ஆண்டுள்ளார்.
இதனால் தொல்காப்பியத்தில்
வேற்றுமை என்னும் சொல் இலக்கணவியல் கலைச்சொல்லாகவும், பொது வழக்கில்
வேறுபாடு என்னும் பொருளிலும், ஒப்புருச்
சொல்லாக ஆளப்பட்டுள்ளதைத் தெளியலாம். தொல்காப்பியர் வகுத்துரைக்கின்ற இலக்கணவியல்
கொள்கைகளோடு, தொல்காப்பிய நடையும் சொல்லாட்சியும் சொற்பொருண்மை ஆய்வுக்கு வாய்ப்பாகின்றன.
பயன்கொண்டவை
ஜெயதேவன்,வ.,(பதிப்.) 2004, தொல்காப்பிய
அகராதி,
சென்னைப் பலகலைக்கழகம்.
தமிழ் இணையக் கல்விக்கழகத் தரவுகள்
Comments
Post a Comment