ஒரு குறளில் ஐந்து வேற்றுமை
முனைவர் ப.
கொழந்தசாமி, புதுச்சேரி.
அற
இலக்கியமான திருக்குறள் மனித வளங்களை இனங்காட்டி
முன்னேறத் தூண்டுவதோடு , மனிதவளத் தளத்தில் உள்ள தனிமனித வேறுபாடுகளையும் சுட்டுகின்றது.
கல்வியாலும் பட்டறிவினாலும் உயர்திணையாகிய மனிதன் அறிவாற்றல், திட்டமிடல், செயல்திறன்,
கூட்டு முயற்சி, இயற்கையையும் விலங்குகளையும்
கருவிகளையும் கையாள்கின்ற திறமை போன்றவற்றால் நிகழ் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்வதோடு,
அறிவாக்க மேம்பாட்டிலும் / கருவிகளைக் கண்டறிந்து செயல்பாடுகளை விரைவாகவும் நுட்பமாகவும்
குறைந்த செலவில் நிறைவேற்றுகின்ற புத்தாக்கங்களையும் படைத்துப் பயன்கொள்கின்றான். தேடித்
தின்றவன் விளைவிப்பவனாக, கலப்பை/ காளை / நீரைத் தேக்கிப் பாய்ச்சல் / உணவுப் பொருள்
சேமிப்பு போன்றவற்றால் உற்பத்தியாளனானான். இதனால் வளர்ச்சி வாய்க்கின்றது; வாய்ப்புப்
பெருகுகின்றது. இக் கூறுகள் மனிதவளமை / மேலாண்மை ஆகிய தளங்களில் வினையாற்றுவதை வள்ளுவம்
வளமையான கலைச்சொற்களால் எடுத்துரைக்கின்றது. அதோடு தொடரியல் / வேற்றுமை இலக்கண நுட்பங்களையும்
செவ்வனே கையாண்டுள்ளது. இக் கட்டுரையில் தெரிந்து
வினையாடல் அதிகாரத்தின் 517ஆம் குறட்பாவில் மனிதவள மேலாண்மையை விளக்க வள்ளுவர் வேற்றுமை உருபுகளைச்
செவ்வனே கையாண்டுள்ளமை விளக்கப்படுகின்றது.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (குறட்பா 517)
என்னும் குறட்பாவில் ஐ, ஆல், எழுவாய் , ஐ, கண் ஆகிய வேற்றுமைகள்
இயல்கின்றன.
·
நீ என்பது தோன்றா எழுவாயான முதல் வேற்றுமை
Ø இதனை, அதனை ஆகியன செயப்படுபொருளான இரண்டாம் வேற்றுமை
v இதனால் என்பது கருவிப்
பொருளிய மூன்றாம் வேற்றுமை
Ø அவன்கண் என்பது
இடப்பொருள் ஏழாம் வேற்றுமை
எழுவாயாக அமைகின்ற, முடிவெடுக்கின்ற நீ என்னும் முன்னிலை,
செயலின் இயல்பையும்
தேவைப்படுகின்ற கருவிகளையும்
செய்பவனின்
தகுதி / திறன்/ ஈடுபாடு / உள்ள உறுதி ஆகியவற்றையும்
ஆராய்ந்து முடிவெடுத்து, அதைத் திறனாளியிடம் ஒப்படைத்துச்
செயலின் முழு வெற்றியையும் வாய்ப்பாக்கலாம் என்னும் ஆட்சிமைக் கொள்கை இவண் வகுத்துரைக்கப்படுகின்றது.
இந்தத் திட்டமிடல் நுடபத்தை இன்றைய வல்லுநர்கள் விரிவாக விளக்குகின்றனர்; வள்ளுவரும்
வகுத்துரைத்துள்ளார். அதற்கு வேற்றுமை அமைப்பும் வாய்ப்பாகியுள்ளது. இவ்வாறாக, குறட்பாக்களின்
இலக்கண அமைப்பும் குறட்பாவின் பொருண்மையை அறிய வாய்ப்பாகின்றது.
பயன்பட்டவை
தமிழ் இணையக் கல்விக்கழகத்
தரவுகள்.
**********
Comments
Post a Comment