அறநெறிச்சாரம் வகுத்துரைக்கின்ற அற இலக்கியக்
கொள்கைகள்
முனைவர் ப. கொழந்தசாமி, தமிழியல் துறைத் தலைவர், அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
மனித வாழ்வியலைக் கூர்ந்துநோக்கி, மானுடம் வெல்ல / மகிழ
இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. ஆர்வத்தைத் தூண்டுகின்ற இலக்கிய அழகியல் கூறுகளோடு, நிலைபேறுடைய மானிட மதிப்புகளும்
மரபுகளும் அறவியல் பதிவுகளும் இலக்கியத்தில் இடம்பெறுகின்றன. இலக்கியம் இலக்கியத்திற்காகவா ? வாழ்க்கைக்காகவா ?
என்பது உலகத் திறனாய்வாளர்களிடையே நெடுங்காலமாகப் பேசுபொருளாக
உள்ளது. ஆயினும் இலக்கியம் அறிவுறுத்தி மனிதனை நெறிப்படுத்தவேண்டும்
என்பதே தமிழகக் கொள்கையாகும். தமிழில் நீண்ட காலமாக அற
இலக்கியங்கள் ஆக்கப்படுகின்றன ; மற்ற வகை இலக்கியங்களிலும்
இலக்கண நூல்களிலும் அவற்றின் உரைகளிலும் அறநெறிகள் சுட்டப்பட்டுள்ளன. சமுதாய நல்லிணக்கத்தையும் மதிப்பையும் பேண, இயல்பாகவே
மக்களின் எண்ணத்திலும் சொல்லாடலிலும் அறக்
கருத்துகள் இயங்குகின்றன.
பட்டறிவினால், மரபாகப் பின்பற்றப்பட்டுவருகின்ற சமூக மதிப்புகள் இலக்கியங்களில்
பதிவாவதோடு, உடன்வாழ் உயிரினங்களின் மீது இயல்பாக
ஏற்படுகின்ற ஈர்ப்பு / அக்கறை காரணமாகவும் அறநெறிகளைப்
படைப்புகளில் பறைகின்றனர். இத்தகைய அறக் கருத்துகள் சட்ட விதிகளல்ல; நெகிழ்ச்சித் தன்மையுடையவை; கால/சமூகச் சூழலுக்கேற்ப மாறக்கூடியவை. இலக்கியங்கள் நெறிகளை அறைவதோடு இலக்கியக் கொள்கைகளையும் ஆங்காங்கே சுட்டுகின்றன.
பொதுவாக இக்கால இலக்கியத் திறனாய்வில் மேலைத் திறனாய்வுக்
கொள்கைகளைச் சுட்டி, தமிழ் இலக்கியவியலை விளக்குகின்றனர்;
இதோடு தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்ற இலக்கியக் கொள்கைகளையும்
இணைத்து நோக்கின் சீர்மை ஓங்கும். இந்த நோக்கில், அறநெறிச்சாரத்தில் முனைப்பாடியார் வகுத்துரைக்கின்ற அற இலக்கியக்
கொள்கைகள் இங்கு எடுத்துரைக்கப்படுகின்றன.
கொள்கை: விளக்கம்
கொள்கை, கோட்பாடு ஆகியன இலக்கியத்தின் அமைப்பியல்,
கருத்து, வளமை, நிலைபேறு,
தகைமை, அழகியல் ஆகியவற்றை விண்டுரைக்கும்
முயற்சிகளாக அமைகின்றன. ஓர் இலக்கியத்தை ஆய்ந்து உரைப்பதைக்
கொள்கை என்றும்; முழு இலக்கிய வகைமையையும் உட்படுத்தி
விரிவாக ஆய்ந்துரைப்பதைக் கோட்பாடு என்றும் வரையறுக்கலாம்.
அறம்
: விளக்கம்:
அறம் என்னும் இலக்கியவியல் கலைச்சொல்லை விளக்குகின்ற அறிஞர்கள்
பல்வேறு விளக்கங்களைத் தந்துள்ளனர். குறிப்பாக, க.த. திருநாவுக்கரசு “ அறத்தின்
பொருள் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளையும் அணைத்துச் செல்வதாக அமைந்துள்ளது. அறத்தை
முப்பட்டைக் கண்ணாடிக்கு ஒப்பிடலாம். ஒழுக்கம்,
வழக்கம், இராச நீதி ஆகியன அவை மூன்றும் இணைந்த
முழுநிறை வடிவே அறம்” ( ப. 50 ) என்று வரையறுக்கின்றார். திருக்குறள், மன மாசற்ற அறம் அனைத்தையும் தரும் ( குறட்பா 31
), பொய்யாமையும் இன்சொல்லும் ( குறட்பா 96,
297 ) மேலான அறங்கள்
என்றவாறு விண்டுரைக்கின்றார். உயர்திணையாகிய மனிதன் மேற்கொள்ளவேண்டிய உரிய/உயர்ந்த
வாழ்க்கை முறையை, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பதை அறநெறி என்று சுட்டலாம். அண்ணல் காந்தியடிகள் ‘
ஒரு பயன், அதையடைந்த முறையால் மதிப்பிடப்படும்
‘ என்று வரையறுப்பது இங்குக் கருதத்தக்கது.
அறநெறிச்சாரம்:
அறநெறிச்சாரம் ஓர் அற நூல். அறத்தின் வழியைச் சாரமாகக் கொண்டதால் அறநெறிச்சாரம்
எனப்பட்டது. இந் நூலின் ஆசிரியர் முனைப்பாடியார்; சமணர்,
அறநெறிச்சாரம் இருநூற்றிருபத்தாறு
வெண்பாக்களைக் கொண்டது. அருக
சமயத்தைச் சிறப்பாகக் கொண்டுரைக்கும் வெண்பாக்கள் நீங்க, அறம் ஒழுக்கம் முதலியன கூறும் ஏனைய வெண்பாக்கள்
செம்பாகமாய்ச் சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல் முதலிய அழகு
நிறைந்து சமய வெறுப்பின்றி எவரும் பயின்று மேற்கொள்ளத்தக்கனவாக இயல்கின்றன. உருவக முறையில்
விளக்கியிருக்கும் பாடற் கருத்துக்கள் பசுமரத்தாணிபோல் மனத்திற் பதியும் பண்பு
வாய்ந்தவை. தமிழ் அற இலக்கிய உலகில் இந் நூலுக்குச் சிறப்பான இடம் உண்டு. ஐந்நூறு ஆண்டுகட்கு முன் பன்னூல்களினின்றும் திரட்டப்பெற்ற பாக்களின் தொகுப்பான புறத்திரட்டு நூலில். அறநெறிச்சார வெண்பாக்கள் சில காணப்படுகின்றன. ஆகவே, இவ் அறநெறிச்சாரம் ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதொரு
பழைய நூல் என்று துணியலாம்.
அற இலக்கியக் கொள்கைகள்:
அருக சமய விளக்கத்தையும் , பொது அறநெறிகளையும் விளக்குகின்ற அறநெறிச்சாரம் , அற
இலக்கியக் கொள்கைகளை நூலின் பாயிரமாக முற்பகுதியில் வரையறுக்கின்றது.
மறவுரையும் காமத் துரையும் மயங்கிய
பிறவுரையும்
மல்கிய ஞாலத்-தறவுரை
கேட்கும்
திருவுடை யாரே பிறவியை
நீக்கும்
திருவுடையார். (பா 02)
என்னும்
வெண்பாவில் , கற்பவற்றைக் கற்க என்று வள்ளுவம் வகுத்துரைக்குமாறு , திருவுடையார் ஆதற்கும் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கும் அறவுரையைக்
கற்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். இங்கு அற நூலின் பயனாகப் புகழ் வாழ்வும் பிறவி நீக்கமும் சுட்டப்படுகின்றன. அதாவது துன்பமின்றி வாழவும் மேன்மையடையவும் நெறி
காட்டுவனவாக அற நூற்கள் இயல்கின்றன.
தொடர்ந்து
அறத்தின் இயல்பு, நற்பொருளாகவும், தீமை இல்லாததாகவும், நெறிப்படுத்துவதாகவும்,
அமையவேண்டும் என்று வரையறுக்கின்றார்.
சீரிய
அறங்கள்:
மெய்ம்மை
பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம்
செம்மை
ஒன்றின்மை துறவுடைமை நன்மை
திறம்பா
விரதந் தரித்தலோடு இன்ன
அறம்
பத்தும் ஆன்ற குணம் ( பா 12)
என்னும்
வெண்பா சீரிய அறப் பண்புகளைப் பட்டியலிடுகின்றது. இவற்றுள் ஒன்றின்மை என்பது தன்னலத்துடன் எதையும் அணுகாமல், பொது நன்மைக்காகச்
செயலாற்றலைச் சுட்டும்.
அறவுரைக்கு இன்றியமையா
நான்கு :
உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ
துரைத்தனா லாய பயனும் -
புரைப்பின்றி
நான்மையும் போலியை நீக்கி
அவைநாட்டல்
வான்மையின் மிக்கார்
வழக்கு. (பா, 02)
என்னும்
பாடலில், அறங் கூறுபவனையும், அதனைக் கேட்பவனையும், உரைக்கப்படும் அறத்தினையும், உரைப்பதனால்
உண்டாகும் பயனையும் ஆராய்ந்து, பிழைபடுவனவற்றை நீக்கி, அவையறிந்து முறைப்படி உரைப்பது சான்றோர் கடனாகும் என்று குறிப்பிட்டு விளக்கியுள்ளார். அவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
உரைக்கத்
தக்காரும் தகாதாரும்:
ü அறநூற் கருத்துகளைப் பிறர்க்கு
விளக்கியுரைப்பவர், அறநூற் பயிற்சி மிக்கவராகவும், அருளுடையவராகவும்,
புலனடக்கம் கொண்டவராகவும், பற்றற்றவராகவும், அடக்கமுடையவராகவும், வீடுபேற்றுக்கு வழிகாட்டுவாராகவும் அமையவேண்டும். (பா,
04 )
Ø அறநூற் பயிற்சி இல்லாதவர், தெளிவில்லாதவர், சென்றதற்கு வருந்துபவர், அறிவிலி, குடிகாரன், தீங்கு
செய்ய நினைப்பவர், பேராசைக்காரன், ஆக்கச்
சிந்தனை குறைந்தவர் ஆகியோர் (பா, 05 ) பிறர்க்கு விளக்கியுரைக்கலாகாது.
அறவுரை
கேட்கத் தக்காரும் தகாதாரும்:
ü தடுமாறாமல், பழிகாத்து, உதவி, பெரியோரை மதித்து, நடக்கின்ற அறிவுநாட்டத்தினனுக்கு
உரைக்க.
·
பிடிவாதக்காரன்,
பிணக்கன், மூடன், புரிதிறனற்றவன் போன்றோர்க்கு உரைப்பது பயனற்றது.
நிறைவுரை:
வாழ்க்கை நிலைமை மாற்றத்திற்குரியது என்பதை
நன்குணர்ந்து, நலிவை நலமாக்க இளமையிலிருந்து முயலவேண்டும். அனைத்து மேன்மைகளையும் அள்ளித் தருகின்ற
அறநெறியை பாதையாகக் கொண்டு, ஆன்றோரின் வழிகாட்டலோடு, வாழ்வாங்கு வாழ வாழ்க்கையை
வாய்ப்பாக்கி நிறைவதற்காக, தக்காரிடம் ஆர்வத்தோடும் புத்தாக்கச் சிந்தனையுடனும் அற
நூல்களைக் கற்றறிந்து மேம்படுக என்பது முனைப்பாடியார்
விண்டுரைக்கின்ற அற இலக்கியக் கொள்கையாகும்.
அறநெறிகளோடு, இலக்கியக் கொள்கைகளையும் இலக்கணப் பாங்கில் எடுத்துரைத்தமை
சிறப்பானதாகும். இத்தகைய அறநெறிமை தனி மனித முன்னேற்றத்திற்கும் ஒட்டுமொத்த மானுட
சமூகத்திற்கும் பல்லுயிர் வளமைக்கும் வாய்ப்பவன; இவற்றைத் தெளிந்து சிறக்கவும்,
திறன் மேம்படவும் மானுடம் வெல்லவும் அற இலக்கியங்கள் வழிகாட்டுகின்றன.
பயன்கொண்டவை
திருநாவுக்கரசு, க.த., , 1977, திருக்குறள் நீதி இலக்கியம்,
சென்னைப் பல்கலைக்கழகம்.
நடராசன், தி. சு., 2009 (ஏழாம் பதிப்பு). திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.
தமிழ்
இணையக் கல்விக்கழகத் தரவுகள்.
---------
Comments
Post a Comment