அடுத்த’ – குறளில்

முனைவர் ப. குழந்தைசாமி, புதுச்சேரி.

பல்லார் பகைகொளலிற் பத்து அடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல் ( 450 )

நகை வகையராகிய நட்பின் பகைவரால்
பத்து அடுத்த கோடி உறும் ( 817 )

என்னும் இரண்டு குறட்பாக்களில், பத்து அடுத்த (மடங்கு)  என்னும் கணிதவியல் கலைச்சொல் பயில்கின்றது. தொல்பழங் காலத்தில் தமிழகத்தில் கணிதவியல் (கூட்டல், பெருக்க, கழித்தல் ) சிறந்திருந்ததைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்ற எண்ணுப்பெயர்ப் புணர்ச்சியால் தெளியலாம்.  மேலும்,

   வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த அகநானூறு 346 / அடி 21        

  ஆம்பல்ஆயிர வெள்ள ஊழி, ஆத வாழிய பலவே பதிற்றுப்பத்து  63 / அடிகள் 20,21

போன்ற செவ்வியல் இலக்கிய அடிகளாலும், ஆம்பல், வெள்ளம் போன்ற பேரெண்கள் புழங்கப்பட்டதை அறியலாம். திருவள்ளுவர் இறந்தகாலப் பெயரடையான அடுத்த என்னும் கலைச்சொல்லை, மரபுத் தொடராக மிகுதியைக் குறிக்க, மடங்கு என்னும் சிறப்புப் பொருளில் புதுமையாக ஆண்டுள்ளதை உரைகளும் சுட்டுகின்றன. ஆன்றவிந்த கொள்கைச் சான்றோரின் தொடர்பைத் தொடராததன் தீமை பெரியது என்பதை 450இல் எடுத்துரைத்து, 817இல் வேடிக்கைக்காகப் பழகி, தீய வழியில் செலுத்தக்கூடிய நண்பர்களால் ஏற்படுகின்ற மிகு தீமையைச் சுட்டி எச்சரிக்கின்றார். ஆகவே தீமை குறித்து, விழிப்புணர்வை விதைக்க, அடுத்த என்னும் மிகுதிப் பொருட் சொல் ஆளப்பட்டுள்ளதைத் தெளியலாம். பொதுவாக, ஒன்றின் பக்கத்தில் இருப்பதை அடுத்த [அடுத்த ஆண்டு] என்று குறிப்பர்; வள்ளுவம் இதை மிகுதியைக் குறிக்க ஆண்டுள்ளது.

                                                       --------------

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு