வள்ளுவர் வெறுத்த ஏழை

முனைவர் ப. குழந்தைசாமி, புதுச்சேரி.

ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்

            பல்லார் பகைகொள்பவன் ( பகைத்திறம் தெரிதல், 873)

என்னும் குறட்பாவில் , பகை  என்னும் ஏளனத்திற்குரிய அரசனின் உளப் பணபையும் அழிவை ஏற்படுத்துகின்ற செயன்முறையையும் வள்ளுவம் கடிகின்றது. 873ஆம் குறட்பாவில், விளையாட்டிற்காகக் கூடப் பகை கொள்ளக்கூடாது என்று எச்சரித்த வள்ளுவர், அது பண்பற்ற/ பயனற்ற பிறழ் மனநிலை என்று அறுதியிடுகின்றார்; பகைவனிடமும் நட்பாடுவதைப் பாராட்டி, இது சீரிய உள்ளப் பண்பு என்று பரிந்துரைக்கின்றார். மன்னனின் உளவியலும், செயல்பாடுகளும் ஒட்டுமொத்த நாட்டையே பாதிக்கும்; அதனால் அறிவுநுட்பத்தோடு, சீரிய பண்புநலன்களோடு ஒரு நாட்டின் தலைவன் ஆளவேண்டும் என்பது இவண் வலியுறுத்தப்படுகின்றது. இதை அறியாமல் தன்னந்தனியனாய்ப் பல நாட்டு மன்னர்களோடு பகைபாராட்டல் அறிவுடைமையோ நல்லாட்சி முறையோ ஆகாது; இதைச் செய்ய முனைகின்ற மன்னனை அறிவில்லாதவன் / ஏழை என்று வள்ளுவம் கடிகின்றது. பொருள் / பணப் பற்றாக்குறையை விட, அறிவு வறட்சி தீங்கானது என்னும் அரசியல் அறநெறி இங்கு வகுத்துரைக்கப்படுகின்றது. முடியாட்சிக்கு மட்டுமல்லாமல் குடியாட்சிக்கும்; ஆட்சியாளர் மட்டுமின்றி, அனைத்து மக்களுக்கும் இவ் அறநெறி ஏற்புடையதே. அறிவு வறட்சி வேண்டாம்: பிறழ் உணர்ச்சி தவிர்க்கப்பட்டு, விளைவறிந்து வினையாற்றுகின்ற அறிவாண்மையே மனிதனை இயக்கவேண்டும். இங்கு ஏழை என்னும் எளிய சொல்லின் மூலம் சீரிய ஆட்சித் திறத்தை / உணர்ச்சி மேலாண்மையை வள்ளுவம் வகுத்துரைத்துள்ளது. வள்ளுவம் உணர்ந்து வாழ்வாங்கு வாழ்வோம்.

                                                     --------

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு