வள்ளுவ எண்குணத்தான்
பேராசிரியர்
ப. கொழந்தசாமி, புதுச்சேரி
வான்மறை
வள்ளுவம் வாழ்வியல் விழுமியங்களை விளக்கி,
மானுட வெற்றிக்கும் மேன்மைக்கும் வழிவகுக்கின்றது; அதோடு ஏற்புடைய பண்பாட்டு மரபுகளையும் தத்துவ விளக்கங்களையும் எடுத்துரைப்பதைக்
கடவுள் வாழ்த்து
அதிகாரத்தால்
அறியமுடிகின்றது. அவ் வகையில்,
கோளில்
பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை ( குறள் 09)
என்னும் குறட்பாவில், எண்குணத்தான் என்கின்ற பெயர்த் தொடர்,
உரை வேற்றுமைக்கும் சிந்தனைக்கும் வாய்ப்பாகின்றது. இதில் கோளில் என்பது பயனற்ற என்னும் பொருளில் இயல்கின்றது; எண்குணத்தானை வணங்காத தலை பயனற்றது என்று கடிவதன் மூலம், வணங்குக; எண்ணுக என்பது வலியுறுத்தப்படுகின்றது.
ஆனால் எண் என்பது எட்டின் பெயரடையா? எண்ணுதல்
என்பதின் வினையெச்சமா? என்பதில் மாறுபாடு தோன்றுகின்றது.
இத் தொடரமைப்பில் மூவுலகம், வருவிருந்து போல இவை
இரண்டும் எற்புடையன.
மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், பரிமேலழகர்
ஆகிய உரையாசிரியர்கள் எட்டு என்றும்; காலிங்கர்
மாறுபட்ட உரையாக எண்ணப்பட்ட என்றும் பொருளுரைப்பர். எண் என்னும் சொல்லுக்கு எட்டுக் குணங்களைக் கொண்டவன்; எளிய குணம் உடையவன; எண்ணப்பட்ட குணங்களன் என்னும்
மூன்று விளக்கங்கள் காணப்பெறுகின்றன. திருக்குறளின் ஒட்டுமொத்த விழுமியங்களை நோக்கும்போது
எண்குணத்தான் என்னும் பெயர்த் தொடருக்கு,
போற்றத்தக்க நற்குணங்களைப் பெற்றுள்ள இறைவன் மற்றும் மாமனிதன் என்று கருத்துரைக்கலாம்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில்
உள்ள தெய்வத்தின் நிலையில் வைத்து மதிக்கப்படுவான் (குறள்
50) என்னும் மானுடம் போற்றுகின்ற வள்ளுவ வாயுரை இவண் நோக்கத்தக்கது. நீங்கள் தெய்வம்
போல என்று ஆன்றோரை மக்கள் பாராட்டுவர். கருத்தால்
உணர்ந்து கொள்கையால் நம்பப்படுகின்ற இறைவனுக்கு இணையாக ,உடன்
வாழ்கின்ற மனிதனைப் போற்றுவதும் மாண்பானதே. மாமனிதம் வெல்க!
*****
Comments
Post a Comment