திருக்குறளில்நீடு’ : சூழற் கருத்துப் பொருண்மை

முனைவர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி.

மனித மேன்மைகளை எடுத்துரைத்து, மானுட வளர்ச்சிக்கு வித்தூன்றி, மனிதவள மேம்பாட்டை ஊக்குவிக்கும் வள்ளுவம், ஒவ்வொரு சொல்லிலும் நுட்பமாக வாழ்வை வளமாக்குகின்ற விழுமியத்தை விண்டுரைக்கின்றது. ஆகவே குறட்பாக்களை மேம்போக்காகப் படிக்காமல், ஒவ்வொரு சொல்லையும் பொருண்மையியல் அணுகுமுறையில் உற்று நோக்கினால் உள்பொருள் புலப்பட்டுத் தெளிவு வசப்படும்: இழிதகைமை தீர்ந்து, கட்டறுத்து மேம்படலாம். எனவே எந்தப் பொருண்மைக் களம் / சொல் / தொடர்ப் பயன்பாடு ஆகிய மொழி மற்றும் மொழியல்லாப் புறச் சூழலில், குறிப்பட்ட ஒரு சொல் ஆளப்பட்டுள்ளது என்பதை நோக்கிப் பொருளுணரவேண்டும். அவ் வகையில் நீடு என்னும் நீள் அடியாகத் தோன்றிய முதனிலைத் தொழிற்பெயர்   வினையெச்சப் பொருளில், பயில்வதை எடுத்துரைப்பதாக இப் பகுதி இயல்கின்றது.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

                                      நிலமிசை நீடுவாழ் வார் ( குறட்பா,  03 )

 

                                     பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க         

                                     நெறிநின்றார் நீடுவாழ் வார் ( குறட்பா,  06 )

 

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்   நீடின்றி ஆங்கே கெடும் ( குறட்பா,  566 )

 

ஆகிய குறட்பாக்களில் நீடு என்னும் சொல் பயில்கின்றது.

 

            *இறை நினைவு கேடில்லாத நீடித்த நல்வாழ்வை நல்கும் : பொறிகளை நன்னெறிப்படுத்தினால் கேடின்றி இன்பமாக வாழலாம் என்று உடன்பாட்டிலும்,

            ^கடுஞ்சொல் கூறுவானும், கருணையில்லாதவனும் வளமிழந்து வாடுவான் என்று அறநெறியற்றவரின் கேட்டையும் திருக்குறள் எடுத்துரைக்கின்றது.

      மேற்படி வழக்குகளை நோக்குகையில் , வள்ளுவம் உடன்பாட்டு / எதிர்மறை அமைப்பில், அறஞ் செய்தால் நிலைபேறு கிட்டும்; அறத்தை மறந்தால் கேடுறும் என்று எச்சரிப்பதை அறியலாம்ஆகவே புலனடக்கி, பேராசை கொள்ளாமல், உயர்வான / ஆக்கப்பூர்வமான/பொதுநல் எண்ணங்களோடு மேன்மையான வாழ்க்கையை வசப்படுத்திக் கேடின்றி  வாழ வழிகாட்டுவதாக வான்மறை வள்ளுவம் இயல்வதைத் தெளிந்தால் , மானுட வெற்றி வாய்ப்பாகும். இத்தகைய, மனித வளர்ச்சி இலக்குகளையும், அவற்றிற்கான  மனித வளங்களையும், உயிரிரக்கத்தையும் உள்ளடக்கிய நிலைத்த/நீடித்த வளர்ச்சியை உணர்த்த நீடு என்னும் சொல் வள்ளுவரால் பயன்கொள்ளப்பட்டுள்ளது.

பயன்பட்டவை

தமிழ் இணையக் கல்விக்கழகத் தரவுகள்

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு