அகராதிச் சொல்லியல் நோக்கில்
தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும்
‘ வண்ணம்
‘
முனைவர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி.
மக்களின் கருத்துப் பயன்பாட்டுக் கருவியான மொழி, நுட்பமானது;
மாறுகின்ற/ வளர் போக்கினது; நடை வேறுபாடு கொண்டது. யார்? எவருக்கு ? எதை ? எதற்காக
? எவ் ஊடகத்தில் ? எப்போது ? உணர்த்துகின்றார் என்பதிற்கேற்ப மொழியமைப்பு இயலும். ஒரு மொழியின் அமைப்புகளையும் அவற்றின் இயக்கத்தையும் இயைபையும், அந்த மொழியால் விளக்குகின்ற இலக்கணவாணரின் சொல்லாட்சி செறிவாகவும் கருத்துவிளக்கும்
அறிவாக்க நோக்கிலும் ; இலக்கியப் படைப்பாளரின் நடை எளிமையாகவும்
முருகியலை எடுத்துரைக்கின்ற நிலையிலும் இயலும். ஆயினும் இவற்றிற்கிடையே
பொதுப் பண்புகள் உண்டு; மொழித் தொழில்நுட்பம் இவ் இரண்டு தளங்களிலும்
வாய்ப்பாகும். இத்தகைய போக்கில் வண்ணம்
என்னும் பண்புப் பெயர்ச்சொல்லைத் தொல்காப்பியமும் வள்ளுவமும் நுட்பமாக ஆண்டுள்ளதை விளக்குவதாக
இக் கட்டுரை இயல்கின்றது.
தொல்காப்பியத்தில்
:
விளக்கவியல்
இலக்கணப் பனுவலான தொல்காப்பியத்தில் வேற்றுமையியல், பொருளியல், செய்யுளியல்
ஆகிய இயல்களில் 46 நூற்பாக்களில் வண்ணம் பயில்கின்றது.
இவற்றுள் வேற்றுமையியலில் 562ஆம் நூற்பாவிலும்
, பொருளியலில்1147ஆம் நூற்பாவிலும் வண்ணம் என்னும்
சொல் நிறம் என்னும் கருத்தில் இயல்கின்றது. இவை இரண்டும்
தவிர செய்யுளியலில் இயல்கின்ற மற்ற 44 நூற்பாக்களில்,
இலக்கணவியல் கலைச்சொல்லாக செய்யுள் ஓசை
/ நடைநலம் என்னும் என்கின்ற பொருளில் குற்றெழுத்து
வண்ணம்; நெட்டெழுத்து வண்ணம் போன்றவாறு ஆளப்பட்டுள்ளது.
அதாவது நிறம் என்னும் பொதுப் பொருளிலும் செய்யுளோசை/ நடை என்னும் சிறப்புப் பொருளில், துறைச்சொல்லாகவும் ஒப்புருச் சொல்லாக இயல்கின்றது.
அகராதிப் பதிவில்
திருக்குறளில்:
மொழிச் சீர்மையுடன் ஆக்கப்பட்டுள்ள
அற இலக்கியமான திருக்குறளில்,
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் (664)
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல் (714)
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து (561)
ஆகிய குறட்பாக்களில் வண்ணம் பயில்கின்றது. இவற்றுள் 664, 561
ஆகிய குறட்பாக்களில் வகை/ முறைமை என்னுமாறும், 714ஆம் குறட்பாவில் நிறம் என்னும் கருத்திலும் ஒப்புருச் சொல்லாக இயல்கின்றது.
இது தொடர்ப் பொருண்மைச் சூழலால் அறியப்படுகின்ற கருத்தாகும்.
அகராதிப் பதிவில் வண்ணம்1- பெயர், வண்ணம் 2 -பெயர் என்னுமாறு பதிவிடப்படும். ஆயினும் பாலகாண்டத்தில் இராமனின் வில்லாற்றலைப் போற்றுகின்ற கம்பன்,
கைவண்ணம், கால்வண்ணம் என்று ஆற்றலைக் குறிக்க வண்ணம் என்னும் சொல்லை ஆண்டுள்ளமை இவண் ஒப்பத்தக்கது.
இவ்வாறாக, சூழல் நோக்கி, ஒவ்வொரு
சொல்லையும் கருத்தறிந்தால் விளம்பு பொருள் விளங்கி, உரைக்கப்படுகின்ற
கொள்கை / விழுமியம் தெளிவுற்றுப் பனுவலின் பயன் மிகும்.
இதற்குப் பொருண்மையியல் / அகராதிச் சொல்லியல் உறுதுணையாகின்றது.
பயன்பட்டவை
ஜெயதேவன்,வ.,(பதி.),
2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.
தமிழ் இணையக் கல்விக்கழகத் தரவுகள்
Comments
Post a Comment