தொல்காப்பியத்திலும் வள்ளுவத்திலும் ‘தறுகண்’; சொற்பொருண்மை ஒப்பீடு
முனைவர் ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
முந்து நூல் கண்டு முறைப்படி
ஆய்ந்து ஆக்கப்பட்ட, விளக்கவியல் இலக்கணமான தொல்காப்பியத்தை வள்ளுவர்
பொன்னேபோற் போற்றி அனைத்து நிலைகளிலும் பயன்கொண்டுள்ளார். இது
தொல்காப்பியத்தின் பெருமைமிகு தாக்கமாகும். அம் முறையில் தறுகண் என்னும் சொல்
ஒப்பிட்டறியத்தக்கது.
கல்வி தறுகண் புகழ்மை கொடை எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே ( மெய்ப். நூ. 09 )
என்னும்
நூற்பாவில் பெருமிதம் என்கின்ற மெய்ப்பாட்டுக்குத் தறுகண்
நிலைக்களனாக அமைவதாகத் தொல்காப்பியம் வரையறுக்கின்றது. இச் சொல்லுக்கு,
‘ போரில் வெளிப்படுத்தும் அஞ்சாத வீரம் ; ஆண்மை
‘ என்பது பொருள். இத்தகைய மறச் செம்மை பெருமித
உணர்வை ஏற்படுத்தும். தொல்காப்பியத்தைத் தழுவி, தறுகண்ணை இப் பொருளில் வள்ளுவம்,
பேராண்மை என்ப தறுகண்; ஒன்றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. ( குறள் 773 )
என்னும்
குறட்பாவில் ஆண்டுள்ளது.
ஒருவனை ஒருவன் போரில் அடுதல் ஏற்கப்பட்டதே. ஆனால்
அதே போர்க்களத்தில் தன்னை எதிர்த்துப் போரிடுகின்றவனுக்குத் தாழ்வு வந்தபோது இரக்கமுடன்
செயல்படவேண்டும். இக் குறட்பாவிற்கான பரிமேலழகர் உரை வருமாறு:
தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேற் கண்ணோடாது
செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்;
ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு - அவர்க்கு ஒரு தாழ்வு
வந்ததாயின், கண்ணோடி அது தீர்த்துக்கோடற் பொருட்டு ஊராண்மை
செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர்.('என்ப'
என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை - உபகாரியாம்தன்மை, அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை
முழுதும்படத் தமினாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற்செல்லாது,
'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என
விட்டாற்போல்வது. இது தழிஞ்சி (பு.வெ.மா.வஞ்சி 3).
இவ்வாறாக, ஆண்மை மிக்க போராற்றலைக் குறிக்கின்ற போரியல்
கலைச்சொல்லைத் தொல்காப்பியத்தை அடியொற்றி வள்ளுவமும் ஒத்த பொருளில்ஆண்டுள்ளது.
இது ஒருமொழி ஒப்பீட்டிற்கும், மொழி வரலாற்றுக்கும்,
சொற்பொருண்மை ஆய்வுக்கும் அடித்தளமாகின்றது.
பயன்பட்டவை
தமிழிணையக் கல்விக்கழக நூலகம்.
Comments
Post a Comment