வள்ளுவம்- உறழ்பொருள்: இல்லை × உண்டு
முனைவர்
ப.
கொழந்தசாமி, புதுச்சேரி
எண்ணவும்
ஆராயவும் வல்ல மனிதனின் மனநிலைமையும் வாழ்க்கைத் தேவையும் மாறக்கூடியது; முரண்பாடுடையது.
ஒரு நேரத்தில் தேவைப்படுவது, வேறொரு நேரத்தில்
தேவைப்படாமல் இருக்கலாம். ஒரு பொருளால் கிடைக்கின்ற மகிழ்ச்சியும்
களிப்பும் மற்றொன்றாலும் பெறப்படலாம். ஆனால் இவை இரண்டின் பண்பும்
மாறுபடலாம். ஒருவருக்கு மகிழ்ச்சியாக அமைவது பிறருக்கு ஏற்புடையதாக
இல்லாமல் போகலாம். இத்தகைய இருமை/ மாற்ற
முரண் நிலையை அற இலக்கியங்கள் வெளிப்படுத்தி அறமுரைத்தல் இயல்பானது; தேவையானது. தொல்காப்பியம் சுட்டுகின்ற காஞ்சித் திணை,
பத்துப்பாட்டின் மதுரைக்காஞ்சி, முரண் தொடை ஆகியன
இவண் ஒப்பத்தக்கன.
மனமும்
அறிவும் ஒன்றோடு மற்றொன்றை ஒப்பியும் உறழ்ந்தும் அறியத்தக்கன. அறிவாக்கத்திற்கும்
ஒன்றின் சிறப்புகளைத் தெளிவதற்கும் இத்தகைய ஒப்பீடுகள் வாய்ப்பாகின்றன. மானுட மேன்மைக்கான கொள்கை வரைவான வள்ளுவம், புணர்ச்சி
விதும்பல் அதிகாரத்தில்,
உள்ளக் களித்தலும்
காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல்
காமத்திற்கு உண்டு ( குறள் 1281)
என்னும் குறட்பாவில் இத்தகைய மாறுபாட்டை எடுத்துரைக்கின்றது. இக் குறட்பாவைத் தலைவன், தலைவி ஆகிய இருவரின் நாடகத்
தனிமொழியாகவும் மனித அனுபவமாகவும் ஏற்கலாம்; இளையோர்க்கு விளக்கலாம்.
பிரிந்து சென்ற தலைவன் வந்ததும்
/ பிரிவுக் குறிப்பு உணர்த்தியதும் , அவனோடு ஊடாமல்
தலைமகள் புணர்ச்சிக்கு விழைகின்றாள். அப்போது வெளிப்படுத்தப்பட்ட
கூற்றாக இது அமைகின்றது. இதில் கள்ளும் காமமும் உறழப்படுகின்றன.
காதல் தலைவனை/ தலைவியைக் கண்டதும் ஏற்படுகின்ற
மனநிறைவான மகிழ்ச்சியும் புணர்ச்சியால் கிடைக்கின்ற அகநிறைவும் காமத்தின் விளைவு.
இவ்வாறான விளைவு கள்ளால் ஏற்பட்டாலும், அது ஏற்புடையதன்று;
விலக்கத்தக்கது; உடல்நலனைக் கெடுக்கவல்லது;
பின்விளைவும் பயனற்றது. கள்ளுண்ணலைக் கடிந்து,
வெறுக்க அறமுரைத்த திருவள்ளுவர், இங்கும் அந்த
அறத்தை நினைவூட்டி, நல்லதை மட்டும் நாடுக என்று வலியுறுத்துகின்றார்.
கள்ளையும் காமத்தையும் இல்லை ×
உண்டு என்று உறழ்ந்து ஒன்றின் சிறப்பைச்
சுட்டி, அறமுரைக்கின்ற/ காம உளவியலை,
மகிழ்வித்து மகிழ் என்று விளக்கும் வள்ளுவம்
கற்று இன்புறத்தக்கது; இளையோர் ஒழுகி உயர வழிகாட்டுவது.
இதற்கு உரைகளும் வாய்ப்பாகின்றன.
*******
Comments
Post a Comment