பொலந்தொடி / முன்றில்– புணர்ச்சி / கருத்து விளக்கம்
முனைவர் ப. கொழந்தசாமி,
அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
சங்க
இலக்கியங்கள் முதலிய தொன்மையான இலக்கியங்களை நோக்கும்போது பொலந்தொடி , பொலந்தார்,
முன்றில் போன்ற சொல்லாட்சிகளைக் கடக்க நேரிடும். இவை திரிபடைந்த
சொற்கள்; திரிபு நீக்கிப் பொருளுணரவேண்டும்.
பொற்றொடி என்பது பொலந்தொடி என்று திரிந்து
வழங்குகின்றது. இதற்கான புணர்ச்சி விளக்கம்,
பொன்னென் கிளவி ஈறுகெட முறையின்
முன்னர்த் தோன்றும்
லகார மகாரம்
செய்யுள் மருங்கின் தொடரியலான
( புள்ளி மயங்கியல் ,நூற்பா, 61 )
என்னும்
தொல்காப்பிய நூற்பாவில் விளக்கப்பட்டுள்ளது.
அதாவது, செய்யுள் தொடரமைப்பில், பொன் > பொலம் என்று திரிகின்றது. அதனால் பொன்+தொடி பொலந்தொடி என்று திரிகின்றது.
இது புணர்ச்சித் திரிபன்றிப் பொருள் மாற்றம் அன்று; பொருளில் மாற்றமில்லை. இவ்வாறே,
அணிலாடு முன்றில்
( குறுந்தொகை, 41;4 )
போன்ற
தொடர்களில் இல்லத்தின் முன் பகுதி (
இல் + முன் ) முன்றில் என்று திரிபுடன் ஆளப்படுகின்றது.
இதற்கான புணர்ச்சி விளக்கம்,
முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும்
இல்லென் கிளவிமிசை றகரம் ஒற்றல்
தொல்லியல் மருங்கின் மரீஇய மரபே (புள்ளி மயங்கியல் , நூற்பா,60 )
என்னும்
தொல்காப்பிய நூற்பாவில் சுட்டப்பட்டுள்ளது.
அதாவது, இல், முன் ஆகிய சொற்கள்
மாறியமைய, இடையில் றகர ஒற்றுப் பெற்று,
முன் + ற்
+ இல் > முன்றில்
என்று
திரிந்து, முன்றில் என்று புணர்கின்றன.
சொற்பொருள் விளக்கத்தில் இத்தகைய
திரிபுச் சொற்களை விதந்து, பிரித்துப் பொருளுணர்ந்து தெளியலாம்;
பொருத்தமான பொருளை/ கருத்தை அறியலாம். இதற்கு இலக்கண விளக்கம் வாய்ப்பாகின்றது.
பயன்பட்டது
தமிழண்ணல் ( உரை) 2008, தொல்காப்பியம், மதுரை; மீனாட்சி புத்தக நிலையம்.
*******
Comments
Post a Comment