பாத்தி : திரிபுப் புணர்ச்சிப்
பொருண்மை
முனைவர் ப.கொழந்தசாமி,
அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
உயர்தனிச் செம்மொழியான தமிழில்
சொற்கள் முறையாக இணைந்து தொடராகும்போது இயல்பாக மாற்றம் இல்லாமலும், மாற்றத்தோடும் புணர்கின்றன. சான்றாக, வாழை மரம்,
மட்குடம், பாத்தி ஆகியவற்றைச் சுட்டலாம்.
இவற்றுள் பாத்தி என்பது பகுத்தது என்னும் பொருளிலான வினையாகுபெயர்.
இதன் பகுதி / வேர்ச்சொல் பகு ஆகும்.
பகு என்னும் சொல்லின் ஒலியமைப்பில் அகரத்தையடுத்து இயல்கின்ற க் ஆனது,
ஹ் என்று தணிந்து, அ+ஹ்>
ஆ என்று ஆகின்றது. அதனால் பகுத்தி என்னும் பகுக்கப்பட்ட
பகுதி எனும் பொருளதான ஆகுபெயர் பாத்தி என்று திரிகின்றது.
அதனால் இதில் நிகழ்ந்த புணர்ச்சித் திரிபைத் தெளிந்தால் பொருள் விளங்கும்.
தொல்காப்பிய அகத்திணையியலின்
02ஆம் நூற்பாவில் பாத்திய (பகுத்த)
என்னும் இத்தகைய பதிவும் ; புறத்திணையியலின்
03ஆம் நூற்பாவில் பாதீடு (பகுத்துக்
கொடுத்தல்; ஈகை ) என்னும் இத்தகைய பதிவும்
உள்ளதை இவண் ஒப்பலாம். குறுந்தொகை 262ஆம்
பாடலின் ஏழாம் அடியிலும், ஐங்குறுநூற்றின் 65ஆம் பாடலின் முதலடியிலும் ’’ கரும்பு நடு பாத்தி
“( வயலின் ஒரு பகுதி) என்னும் இவ்வாறான பதிவுகள்
இயல்வதையும் நோக்கலாம்.
மானுட மேன்மைக்கான கொள்கைவரைவாக,
மக்களிலக்கியமாகத் திகழ்கின்ற வள்ளுவம் மொழி மரபைப் பின்பற்றி,
மக்களின் இயங்கியலை நோக்கி 465, 718 ஆகிய குறட்பாக்களில்
பாத்தி ( வயலின் ஒரு பகுதி) என்றும், 44, 227 ஆகிய குறட்பாக்களில் பாத்து(பகுத்துக் கொடுத்தல்;
ஈகை) என்றும், 481ஆம் குறளில் பகல்
(பிரித்தல்) எனவும் , 322ஆம் குறட்பாவில் பகுத்து ( பிரித்து
; ஈகை) என்றும் பகு என்பதன் அடியாகத் திரிபுற்ற பதிவுகளைக்
கொண்டுள்ளது. இவற்றால் ஈகையையும், எச்சரிக்கையாகச் செயல்படுக என்கின்ற விழிப்புணர்வையும், மக்கள் மனத்தில் ஊன்றி, திருக்குறள் மக்கள் வாழ்வாங்கு
வாழவும் மானுடம் வெல்லவும் வழிகாட்டுகின்றது.
பயன்பட்டவை
தமிழிணையக் கல்விக்கழகத்
தரவுகள் & http://tamilconcordance.in
Comments
Post a Comment