1179ஆம் குறட்பாவின் தொடரமைப்பு
முனைவர் ப.கொழந்தசாமி,
புதுச்சேரி.
தமிழுக்கும்
தமிழர்க்கும் இணையிலாப் பெருமையைப் பெற்றுத்தருகின்ற, ஆய்வுக்கு விரிதளமாகத்
திகழ்கின்ற திருக்குறள் உலகெங்கும் போற்றிக் கொண்டாடப்படுகின்றது. ஆனால் திருக்குறள் கடைந்து திரட்டித் தருகின்ற வாழ்வியல் விழுமியங்களை,
மக்கள் முழுதும் அறிந்திருக்கின்றனர்/ புரிந்துகொள்கின்றனர்
என்று உறுதியாகப் பறையவியலாது. இந்த இடைவெளியைக் குறைக்க உரையாசிரியர்களைப்
போலப் பல அணுகுமுறைகளைக் கண்டறியவேண்டும். அவற்றுள் ஒன்று குறட்பாக்களின்
தொடரமைப்பை அறிதல் ஆகும். தொல்காப்பிய இலக்கணம் தொடரை அடிப்படையாகக்கொண்டதை
இவண் ஒப்பலாம். காட்டாக, பின்வருகின்ற 1179ஆம் குறட்பாவின் தொடரமைப்பை நோக்கலாம்.
வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடை
ஆரஞர் உற்றன கண்
இதில் தலைவியின் கண் படுகின்ற காமத் துன்ப
மனநிலை , மெய்ப்பாடு , பிரிவச்ச உளவியல் எடுத்திரைக்கப்படுகின்றது. இதை இக்கால
உரைநடை மொழியில் எளிதாக விளக்கின்,
1) தலைவன் பிரிந்திருக்கும்போது ஏக்கத்தாலும் தலைவனின் நிலை குறித்து எண்ணியும் கண்கள்
உறங்கவில்லை
2) பிரிந்துசென்ற தலைவன் வந்தால் புணர்ச்சி வேட்கையாலும். மீண்டும் அவன் பிரிந்துவிடுவானோ என்னும் கவலையாலும் கண் துயில்வதில்லை.
3) இவ் இரண்டு காரணங்களால் என் கண்கள் மிகு துன்பப்படுகின்றன
என்று அமைக்கலாம். இதனால் இக் குறட்பாவில் மூன்று தொடர்கள் இயல்வதைத் தெளியலாம். அதோடு கண் என்று ஒருமையில் கூறாமல் கண்கள் என்று பன்மையில் சுட்டியது வருத்தத்தின் மிகுதியையும் ஏக்கத்தின் ஆழத்தையும் வெளிப்படுத்த. மேலும் கண்கள் என்னும் உறுப்பின் பெயரை விளக்கணியாக, மூன்று தொடர்களுக்கும் எழுவாயாகவும் பிரிவு ஏக்கத்தை மூன்றாம் வேற்றுமையின் காரணமாகவும் நோக்கினால் கருத்து விளங்கும். எனவே குறட்பாக்களின் தொடரமைப்பு இலக்கணத்தைக் கொண்டு விடுபட்ட சொற்களையும் கொண்டுகூட்டிப் பொருள் தெளிய முயலலாம்; இது பொருண்மையியல் நோக்கினதாகும்.
பயன்பட்டது
குறள்திறன் (kuralthiran.com)
Comments
Post a Comment