வள்ளுவ ‘அடிமை’
முனைவர் ப.
கொழந்தசாமி, புதுச்சேரி
மானுட மேன்மைக்கான கொள்கைவரைவாகத்
திகழ்கின்ற வள்ளுவம், மனிதச் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கியும்
பல்துறை நெறிநூல்களைக் கற்றுத் தெளிந்தும் அனைத்து நிலையிலான மானுடர்க்குமான அறநெறிகளை
விண்டுரைத்துள்ளது ; குறிப்பிட்ட ஒரு பிரிவினர்க்குக் கூறப்பட்டவை
மற்றவர்க்கும் பொருந்தக்கூடும். அவ் வகையில், மன்னனுக்காக மடியின்மை அதிகாரத்தில் மொழியப்பட்ட,
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்
( 608 )
என்னும் குறட்பா நோக்கத்தக்கது. உரிய செயலைக் குறித்த
வரையறைக்குள் செய்யாத இழிபண்பான சோம்பல் என்னும் செயலாற்றாத் தன்மை. மாற்றானிடம் ஏவல் கேட்டுத் தாழ்ந்திருக்கவேண்டிய இழிநிலையை வாய்ப்பாக்கிவிடும்
என்பது அரசனுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பொருந்தக்கூடியதே. ஆகையால் சோமபல், தேவையின்றித் தள்ளிவைத்தல் ,
இழிபண்புகளுக்கு இடம்கொடுத்தல் போன்ற செயலாற்றாமையை ஆட்சியாளரும் மக்களும்
விழிப்புடன் விலக்கவேண்டும். இவண், திணை
விளக்கந் தருகின்ற தொல்காப்பிய 540ஆம் நூற்பா ஒப்பத்தக்கது.
அடிமையை உயர்திணையாக மட்டுமின்றி, அஃறிணையாகவும்
கூறுவதுண்டு என்று சுட்டி, நிலை தாழ்ந்தால் வறுமையுற்றும் ஏவல்
செய்தும் மதிப்பிழப்பாய் என்று குறிப்பாக எச்சரிக்கின்றார். வள்ளுவம்
பரிந்துரைக்கின்ற ஆள்வினையுடைமை, வினையாடல் போன்ற உயர் பண்புகளை அனைவரும் வளர்த்து, எச்சரிக்கின்ற
இழிதகைமையை விடுத்து வாழ்வாங்கு வாழ்ந்து வளநிலையை வாய்ப்பாக்கலாம். எச்சரிக்கையுடன், முறைப்படி திட்டமிட்டு காலந்தாழ்த்தாமல்
செயலாற்ற ஆட்சியினரும் மக்களும் உறுதிபூணவேண்டும்.
---------
Comments
Post a Comment