வள்ளுவ ஏர்’ : கருத்துப் பொருண்மை

முனைவர் ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

தமிழ் மொழி தொன்மையானது; வளம் மிக்கது. கால வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்துக் கன்னித் தன்மையுடன் திகழ்வது. இத்தகைய போக்கினை இலக்கண நூல்கள் மட்டுமின்றி இலக்கியப் பனுவல்களும் வெளிப்படுத்துகின்றன. அந் நிலையில் திருக்குறளின் நடைநலம் மொழி வரலாற்றையும் பொருண்மை மரபையும் அறிய வாய்ப்பாவதால்ஏர்என்னும் பெயர்ச்சொல் வள்ளுவத்தில் இயலுமாற்றை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது.

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை (1031
)

என்னுமாறு உழவைப் போற்றுவதாக, பொது வழக்கில்ஏர்அமைந்துள்ளது.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை (872)

என்னும் குறட்பாவில் ஏர் திறன் என்னும் கருத்தில் வீரர், மொழித்திறனாளர் என இயல்கின்றதுஇது வள்ளுவர் படைத்த சிறப்பு வழக்காகும்.

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோர் ஏஎர் உடைத்து ( 1053 )

என்னும் குறட்பாவில் ஏர் அளபெடுத்து, பெருமை/ அழகு என்னும் பொருளில் இயன்றுள்ளது. இவ்வாறு     1098, 1305 போன்ற குறட்பாக்களிலும் ஆளப்பட்டுள்ளது. ஆனால்,

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. (1038)

என்பதில், மூன்றாம் வேற்றுமைத் தொகை அமைப்புடன் ஆகுபெயராக, உழவுத் தொழிலைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து (1089)

கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது (1272)

என்னும் குறட்பாக்களில் மான் போன்ற; மூங்கில் போன்ற என்கின்ற கருத்தில் உவம உருபாக போன்ற என ஒப்புமைப் பொருளில் வழங்குகின்றது.

            இவ்வாறாக, ஏர் பல்பொருளொருசொல்லாக வள்ளுவத்தில், பெயராக, ஆகுபெயராக, உவம உருபாக அறியப்படுகின்றது. தொல்காப்பியத்தில், 1192 ஆம் நூற்பாவில் புதிய உடல் பொலிவு என்றும், இவ்வாறே சங்க இலக்கியங்களிலும் இயல்கின்றது. இந்த மொழி மரபை வள்ளுவம் பின்பற்றியுள்ளதோடு, ஆகுபெயராகவும் உவமவுருபாகவும் அமைத்துள்ளது. இத்தகைய புரிதலுடன் வள்ளவத்தை அணுகின் புரிதிறன் மிகும்.

                                                                             _________ 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு