குறளில் ‘அம்மா’
முனைவர் ப. கொழந்தசாமி,
புதுச்சேரி.
மொழிப்
பயன்பாட்டில் ஒரு சொல் பூ என்று தனிச்சொல்லாகவும் , பூப்பந்து போன்றவாறு கூட்டுச்சொல்லாகவும் இயலும். அதனால் சொல்லின் ஆக்க மரபையும் வழங்கு
சூழலையும் அறிந்து, கருத்துணரவேண்டும். அந் நிலையில் காமத்துப்பாலில் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தின்
1107 ஆம் குறட்பாவிலுள்ள அம்மா
என்னும் கூட்டுச்சொல் ஆழ்ந்து நோக்கிப் பொருளுணரத்தக்கது.
தம்மில்
இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
(1107)
என்னும் குறட்பாவில், அம் ( அழகிய ) + மா
( மாமை நிறம் ) என்னும் இரண்டு பெயர்ச்சொற்கள் புணர்ந்து அம்மா என்னும் கூட்டுச்சொல்
பண்புப்பெயரடையாக உருவானது. அதாவது அழகிய மாமை நிறமுடைய (இளம்பெண்)
என்பது இக் கூட்டுச்சொல்லின் கருத்தாகும்.
இந்த அதிகாரத்தின் கருத்துப் போக்கும் உளவியல் பண்பும் இதற்கு ஏற்பானவை.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (முதன் மடலம், முதற்பாகம், ப.241 )
அம் அழகு என்னும் பொருளில் இயல்வதைச் சுட்டுகின்றது.
இன்றைய பேச்சு வழக்கிலும் ‘அந்தப் பெண் மா நிறம்‘
என்று கூறுகின்றனர். ஆனால் அம்மா என்பது தாய் என்னும்
உறவைக் குறிப்பதாக மயங்கலாகாது.
பயன்பட்டது
https://www.tamilvu.org/ta/library-ldpam-ldpam00-html-ldpam00hom-244696
--------
Comments
Post a Comment