வள்ளுவ ‘தவல்’- பொருண்மை நோக்கு
முனைவர்
ப. கொழந்தசாமி, புதுச்சேரி
அற இலக்கியமான திருக்குறள் இலக்கிய, மொழித் தொழில்நுட்பத்தோடு
அறிவுக்கு விருந்தாகவும் ஆய்வுக்கு வாய்ப்பாகவும் சீரிய வாழ்வுக்கு அடித்தளமாகவும்
ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் சொற்பொருண்மை நோக்கும் ஒன்றாகும்.
அந் நிலையில் தவல் என்னும் சொல்லை வள்ளுவம் ஆண்டுள்ள செம்மையை விளக்குவதாக
இக் கட்டுரை அமைகின்றது. ஒவ்வொரு சொல்லின் கருத்தையும் உற்றுநோக்கித்
தெளியின் வள்ளுவ வாயுரை விளக்கமாகும்.
தவ்- பொருண்மை:
சொற்களை, வெளிப்படையாக/ தெளிவாகப் பொருள் சுட்டுவன[ தாய், அண்ணன்]; குறிப்பால் ஆய்ந்தால் பொருள் அறியத்தக்கன[
சுர், சல, தவ ] என்று இரண்டு வகைப்படுத்தலாம். தொல்காப்பியம்,
தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்
இருபாற்றென்ப பொருண்மை நிலையே (நூ. 642)
என்கின்ற
நூற்பாவில் இதைச் சுட்டியுள்ளது.
வள்ளுவத்தில் இவ் இரு வகைச் சொற்களும் ஆளப்பட்டுள்ளன.
குறிப்பால் ஆய்ந்து பொருள் அறியத்தக்க சொற்களுள் சுருங்குதல்
/ வலுவிழத்தல் என்னும் கருத்துடைய தவ் என்னும் சொல்லாட்சி ஆய்ந்து
அறியத்தக்கதாகும்.
கவ்வையால் கவ்விது காமம் ;அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து(1144)
என்னும் குறட்பாவில்
குறிப்புப் பொருள் கொண்ட இடைச்சொல்லாக,
பொலிவிழக்கும் என்னும் கருத்தில் தவ் பயில்கின்றது. அடுத்து, அழிதல்; குறைதல் என்னும் பொருளதான தவு என்னும் வினையடியாகத் தோன்றிய தவல் என்னும் தொழிற்பெயராக,
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும் ( 853)
என்னும் குறட்பாவில்
அழிவு என்னும் கருத்திலும்,
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து ( 856 )
என்னும் குறட்பாவில்
வறுமையடைதல்/ குறைதல் என்னும் பொருளிலும் ஆளப்பட்டுள்ளது.
எனவே பிறழ் மனநிலையைச் சுட்டி எச்சரிக்க, விழிப்புணர்வூட்ட இச் சொல் பயன்கொள்ளப்பட்டுள்ளது. இருமை / முரண் கொண்ட உலக வாழ்க்கையில் ஆக்க மனநிலை அடிப்படையானது என்கின்ற அறம் இதனால்
வகுத்துரைக்கப்படுகின்றது.
பயன்பட்டவை : இணையத் தரவுகள்.
----------
Comments
Post a Comment