தொல்காப்பியத்திலும் வள்ளுவத்திலும் ‘விழுமம்’- கருத்தாய்வு
ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம்,,
புதுச்சேரி.
உயர்தனிச்
செம்மொழியான தமிழின் சொல்வளம் விரிந்து பரந்துள்ள- தோடு, பொருண்மையியல் ஆய்வுக்கும்
வாய்ப்பாகிறது. இத்தகைய சீர்மையை அறியத் தொல்காப்பியமும் இலக்கியங்களும் அடிப்படையாகின்றன.
அவ் வகையில் விழுமம் என்னும் ஒப்புருப் பெயர்ச்சொல்லின் கருத்து விளக்கத்தைத்
தெளிவுறுத்துவதாக இக் கட்டுரை இயல்கின்றது. இவ் அணுகுமுறையால் படைப்பாளரின் விளம்பு
பொருளை முறையாக உணரவியலும்.
தொல்காப்பியத்தில் :
அகராதிப் பண்புடன் அமைந்துள்ள உரியியலின்,
விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (
நூற்பா 836 )
என்னும் நூற்பா,
மூன்று பொருளில் விழுமம் பயில்வதைச் சுட்டுகின்றது. சீர்மை / சிறப்பு என்கின்ற மேன்மையை
உணர்த்துவதோடு, இடும்பை என்கின்ற வன்மையை உணர்த்துவதாகவும் இச் சொல் விளம்பப்படுகின்றது. இதோடு, தொல்காப்பிய நடையை நோக்குகையில்,
வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத்தானும் (கற்பியல்,
நூற்பா 1092)
என்று துன்பம்
எனும் கருத்திலும், தோல் எனும் வனப்பை விளக்கும்போது,
இழுமென் மொழியால் விழுமியது
நுவலினும் (செய்யுளியல், நூற்பா 1494)
என்று சிறந்தது; நல்லது என்னும் கருத்திலும் விழுமம் தொல்காப்பியரால்
ஆளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருக்குறளை
நோக்குகையில்,
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு (107)
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும் (284)
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும் (313)
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும் (663)
ஆகிய குறட்பாக்களில்
விழுமம் என்கின்ற சொல் , துன்பம் என்னும்
பொருளில் பயில்கின்றது. மேலும் வீயா, உய்யா,
எற்றா என்கின்ற அழுத்தமான எதிர்மறைப் பெயரெச்சங்களுடன் இணைந்து இயல்வதும் எண்ணத்தக்கது.
இத்தகைய அடைகளின் மூலம் துன்பத்தின் வீரியம் விண்டுரைக்கப்- படுகின்றது. ஆயினும், விழுப்பம்
என்னும் ஒத்த பொருட்சொல்லால், சிறப்பைக் குறித்து வள்ளுவம்,
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும்
ஓம்பப் படும் ( 131 )
என்றும் 21, 201 ஆகிய குறட்பாக்களிலும் ஆண்டுள்ளமை இவண் ஒப்பத்தக்கது. தொல்காப்பியத்தை அடியொட்டி, வள்ளுவமும் விழுமம் என்னும் சொல்லை நுட்பமாக ஆண்டுள்ளது. இவ்வாறாக இலக்கண விளக்கத்தோடு, இலக்கண-
வாணரின் நடையும், இலக்கியச் சொல்லாட்சியும்
பொருண்மை ஆய்வுக்கும் படைப்பைத் தெளிவாக உணர்தற்கும் அடித்தளமாகின்றன. வள்ளுவத்தின்
கருத்தைத் தெளிந்தால் மானுட வெற்றியும் வாய்ப்பாகும்.
பயன்பட்டவை
தமிழண்ணல்(உரை.) 2008, தொல்காப்பியம், மதுரை;
மீனாட்சி புத்தக நிலையம்.
இணையதளத் தரவுகள்.
**********
Comments
Post a Comment