தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும்
‘தோல்’ – சொற்பொருண்மை
ப.கொழந்தசாமி, அரசினர்
ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
கன்னித் தமிழின் சொற்களஞ்சியம்
வரம்பில்லா வளமுடையது; காலந்தோறும் சொற்களின் பொருள் மாறியும் விரிந்தும்
வருகின்றது. அதனால் ஒரு பனுவலை வாசிக்கும்போது, அதில் பயில்கின்ற ஒவ்வொரு சொல்லின் பொருளையும் நோக்கிக் கருத்தறிந்து முறையாகப்
பொருள் அறிந்தால் விளம்பப்படுகின்ற விழுமியத்தைத் தெளியலாம். அந் நோக்கில், தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் பலபொருட்சொல்லான
‘தோல்’ பெயராகவும் கலைச்சொல்லாகவும் வினையாகவும்
பயிலுமாற்றை அணுகிக் கருத்தறிவதாக இக் கட்டுரை இயல்கின்றது.
தொல்காப்பியத்தில் :
தமிழின் சொல் வளத்தையும்
பொருண்மை அமைப்பையும் எடுத்துரைக்கின்ற தொல்காப்பியத்தில், சொல்
வழக்கு வரையறையை/ தொடராக்க நெறியை மரபியலில் சுட்டுகையில்,
தோல் என்னும் சொல் மரம்/ புல் ஆகியவற்றின் புறத்
தோலை, பொது வழக்காக இன்றுவரை பயில்கின்ற கருத்தில் வரையறுத்துள்ளது.
ஆயினும் புறத்திணையிலும், செய்யுளியளிலும் இலக்கணக்
கலைச்சொல்லாக ஆளப்பட்டுள்ளது. உழிஞைப் போரின் துறைகளுள் ஒன்றாக,
தோலது பெருக்கம் ( நூற்பா 1013
) எனும் துறை அமைந்து, தற்காப்புக் கேடயம் என்னும் கருத்தில் தோல் ஆளப்பட்டுள்ளது. செய்யுளியளில் இலக்கியத்தின் எண்
வகை வனப்புகளுள் நான்காவதாக விழுமிய கருத்துகளை விரிவாக இயற்றுவதான தோல் வகுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக, மாறுபட்ட மூன்று கருத்தில் பெயராக வழங்குகின்ற
இச் சொல், வஞ்சித் துறைகளுள்
ஒன்றாக, தோற்றோர் தேய்வு என்னும்
தோல்வி உளவியலைக் குறிக்கின்றது. இந்தத் தோற்றோர் என்னும் வினையாலணையும்பெயரின்
அடியாக தோல் என்னும் வினைப்பகுதி இயல்கின்றது. அதனால் இது பெயராகவும்
வினையாகவும் அமைவதைத் தெளியலாம்.
திருக்குறளில்
:
தொல்காப்பிய மரபுகளைப் போற்றுகின்ற வான்மறை வள்ளுவத்திலும் தோல் பெயராகவும்
கலைச்சொல்லாகவும் வினையாகவும் இயல்கின்றது. 80, 273 ஆகிய குறட்பாக்களில்
மனிதனின் புறத் தோலைக் குறிக்கின்றது.
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு
என்னும் நசை (1043)
என்னும் குறட்பாவில், தோல் என்னும் சொல் உடலழகு / பெருமை என்னும்
கருத்தில் சமூக உளவியல் கலைச்சொல்லாக இயல்கின்றது. அடுத்து,
சால்பிற்குக்
கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார்
கண்ணும் கொளல்
(986)
என்னும் குறட்பாவில், தோல்வி என்னும் தொழிற்பெயரின்
வினைப் பகுதியாக, தோல் இயன்றுள்ளது. இவ்வாறாக தோல் என்னும்
சொல் பொது வழக்குப் பெயராகவும் கலைச்சொல்லாகவும் வினையாகவும் வள்ளுவத்தில் பயில்கின்றது.
இவ்வாறாக, ஒரு பனுவலை வாசிக்கும்போது, அதில் பயில்கின்ற ஒவ்வொரு
சொல்லின் மாறுபட்ட சூழல் பொருளையும் நோக்கிக் கருத்தறிந்து முறையாகப் பொருள் அறிந்தால்
விளம்பப்படுகின்ற விழுமியத்தைத் தெளியலாம். இதனால் மானுடம் வெல்லும்;
உலகம் உய்வுறும்.
பயன்பட்டவை
தமிழண்ணல்(உரை.) 2008, தொல்காப்பியம், மதுரை; மீனாட்சி புத்தக நிலையம்.
இணையதளத் தரவுகள்.
**********
Comments
Post a Comment