வள்ளுவத்தில் தாள்

     முனைவர் ப. கொழந்தசாமி, தமிழியல் துறைத் தலைவர், அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

வான்மறையான வள்ளுவம் மனிதச் சிந்தனைகளையும் வாழ்க்கை நிகழ்வுகளையும் கூர்ந்து நோக்கி நல்லன; அல்லன என்பவற்றைச் சுட்டி, விழிப்புணர்வை விதைத்து, தன்னிலை உணர்ந்து தன்வலிமை தெரிந்து செயல்பட, வாழ்வாங்கு வாழ அறமுரைத்து மானுட மேன்மைக்கு வழிகாட்டுகின்றது. அதனால் திருக்குறளில் மொழியப்பட்டுள்ள அறநெறிகளை முறையாக உணர, கலைச்சொற்களைத் தெளியவேண்டும்அத்தகைய அறவியல் கலைச்சொற்களுள் ஒன்றான தாள் என்பது வள்ளுவத்தில் பயிலுமாற்றை விளக்குவதாக இக் கட்டுரை இயல்கின்றது.

  தாள்: பொருண்மை:

          மனித உறுப்பான காலின் அடிப்பகுதி அடி, தாள், பாதம், உள்ளங்கால் என்னும் சொற்களால் பொது வழக்கில் பெயராக வழங்கப்படுகின்றது.  இதோடு சிறப்புப் பொருளாக முயற்சி என்னும் கருத்திலும் தொன்றுதொட்டுப் பயில்கின்றது. எனவே, ஒரு தொடரில் தாளென்னும் சொல் பயிலும்போது அதன் பொருத்தமான கருத்தை உணர்ந்தால் பொருண்மைத் தெளிவு வாய்ப்பாகும்.            தொல்காப்பியத்தில் ,

               தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் ( நூ. 987 )

               தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் ( நூ. 1005)

              தாளாண் எதிரும் பிரிவினாலும் ( நூ. 1053)

ஆகிய நூற்பாக்களில் முயற்சி/ உறுதிக்கூற்று  எனும் பொருளில் தாள்; தாளாண்மை ஆகிய சொற்கள் இயல்கின்றன.  சங்க இலக்கியத்தில் அடி, முயற்சி என்னும் பொருளில் தாள் பயில்கின்றது {புறநானூறு, பா 161; அடி15 ]. இந்த மொழி மரபைப் போற்றுகின்ற திருவள்ளுவர், தாள் என்கின்ற சொல்லைப் பொது வழக்கில் 02, 07, 08 & 09 போன்ற குறட்பாக்களில் காலடி என்னும் பொருளில்,

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் ( 02 )

என்றவாறு ஆள்கின்றார்அடுத்து, சிறப்பு வழக்காக, 212, 613, 614, 617, 1065 போன்ற குறட்பாக்களில் முயற்சி  என்னும் கருத்தில்,

                     தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
                     வேளாண்மை செய்தற் பொருட்டு ( 212)

 

                     தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
                     வேளாண்மை என்னுஞ் செருக்கு (613)

எனுமாறு தாள், தாளாண்மை [முயற்சியால் பயனுறுகின்ற முறைமை] என்கின்ற சொற்களைப் பெய்துள்ளார். வேளாண்மை என்னும் பிறர்க்கு உதவுகின்ற பண்போடு, தாளாண்மையை இணைத்துநீவிர் வாழவும்; பிறருக்கு உதவவும் நன்முயற்சி தேவை என்பதை வலியுறுத்துகின்றார். தாள் என்னும் சொல்லிற்கு இணையாக முயற்சி [ முயல் + சி ] & முயற்று [ முயல் + து ]   என்கின்ற பொதுச்சொற்களையும்,

முயற்சி திருவினை ஆக்கும் ; முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் ( 616 )

என்று ஆண்டுள்ளார், நல்வாழ்க்கைக்கு இறை நினைவும் அறநெறி சார்ந்த நன்முயற்சியும் தேவை என்னும் விழுமியங்கள் இவண் ஒப்புருச் சொல்லான தாள் என்னும் கலைச்சொல்லால்  வலியுறுத்தப்படுகின்றன.

    பயன்பட்டவை :  இணையத் தரவுகள்

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு