வாகைஅவையகம்’ – மனிதவள அறவியல் நோக்கு

. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

தமிழியல் தளத்தில் தொல்காப்பியத்திற்குப் பல்வேறு சிறப்புகள் உள. இலக்கணவியல்இலக்கியவியல், பொருண்மைக் கொள்கைகள், மொழி வரலாறு போன்றவற்றை வகுத்துரைப்பதோடு மொழி/ இலக்கிய வளர்ச்சிக்கும் இக்காலத் தேவைகட்குக் கருத்தளிப்பதாகவும் இவற்றை ஊக்குவிப்பதாகவும் தொல்காப்பியம் தாய்மைப் பண்போடு மிளிர்ந்து, தமிழியல் ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமைகின்றது. முதல் இரண்டு அதிகாரங்களில் தமிழ் மொழியின் இயங்கியலையும் பொருளதிகாரத்தில் இலக்கிய வகைமை, அமைப்பியல், மரபுகள் போன்ற இலக்கியவியல் கொள்கைகளையும் தொல்காப்பியம் விண்டுரைக்கின்றது. ஆகவே தாய்மைப் பண்பும் தனிச் சிறப்புகளும் நிகழ்தகைமைச் சீர்மையும் பெற்றதாகத் தொல்காப்பியம் அறியப்படுகின்றது.

நோக்கம்:  தொல்காப்பியத்தின் தாய்மைப் பண்பை நிறுவல்.

கருதுகோள்: தொல்காப்பியக் கருத்துகள் வாழ்வியல் விழுமியங்ளாக                                                                                      

                              இலக்கியங்களில் ஆளப்படுகின்றன.

வாகைத் திணை :

            பொருளதிகாரத்தில் இலக்கியங்களை அகம், புறம் என்று இருபாற்படுத்து, முறையே ஏழு திணைகளைத் தொல்காப்பியர் முரணி விளக்கியுள்ளார். சான்றாக, பாலைத் திணையின் புறமாக இயல்வது வாகையாகும். இதை,

                                வாகை தானே பாலையது புறனே ( புற. நூற்பா 18 )

என்று முரணிய தொல்காப்பியர், தொடர்ந்து,

                                தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்

                                பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப ( புற. நூற்பா 19 )

என்று, போரில் மட்டுமின்றி, கடமையாற்றுவதிலும் மானுடம் வென்று முன்னேறவேண்டும் என்று சுட்டுகின்றார். இன்றைய நடத்தையியலில் வகுத்துரைக்கப்படுகின்ற மனிதவள மேம்பாட்டைக் கருதினால் இக் கருத்து வலிமையுறும். இத்தகைய வாகைத் திணைத் துறைகளுள் அவையகம் ஒன்றாகும். இதை,

                        நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும் (புற. நூற்பா 20; அடி 06)

எனவும்,

                       எட்டுவகை நுதலிய அவையகத்தானும் (புற. நூற்பா 21; அடி 16)

என்றும் தொல்காப்பியம் குறிப்படுகின்றது. அவையகம் என்னும் கலைச்சொல்லை விளக்கிய இளம்பூரணர்,

எட்டுவகை குறித்த அவையகம் என்றமையான், ஏனைய அவையின் இவ் அவை மிகுதி உடைத்தென்றவாறு. அவையாவன:- குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை [பொறாமைப்படாமை] , அவாவின்மை [பேராசை கொள்ளாமை ]என்பன’’

என்று விரிவுரை வழங்கியுள்ளார்அதாவது உயர்பண்புகளோடு மக்களில் மாணிக்கங்களாகவும் மானுட முன்னேற்றத்தை ஊக்குவோராகவும் அறநெறி சான்றோராகவும் விளங்குகின்ற திறனாளிகளை அடையாளப்படுத்துகின்றார். மேலும் இதற்கு ஆசிரியமாலைப் பாடலொன்றையும், 126,131, 118, 172, 181, 311, 161, 158 ஆகிய எட்டுத் திருக்குறட் பாக்களையும் சான்று காட்டித் தெளிவுறுத்துகின்றார். இன்றைய நடத்தையியல் மென்திறன்கள் என்று இத்தகைய பண்புகளை  மானுட மேன்மைக்கு அடைப்படையாக வகுத்துரைப்பதை இவண் ஒப்பலாம்.

 இதனால் தாய்மைப் பண்பு கொண்ட இத்தகைய தொல்காப்பியக் கருத்துகள் தொடர்ந்து வாழ்வியல் விழுமியங்களாக இலக்கியங்களில் ஆளப்படுவதைத் தெளியலாம்மேலும் வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய திணைகளில் இடம்பெறுகின்ற துறைகள் இந் நோக்கில் கற்கத் தகவுடையனவாகும்.

                                                            பயன்பட்டன

ஜெயதேவன், . (பதி.) ,2004,  தொல்காப்பிய அகராதி,  சென்னைப் பல்கலைக்கழகம்.

 தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம் tamilvu.org/node/154572?linkid=1927

                                                             ********

 

 

.

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு