தொல்காப்பியத்திலும் வள்ளுவத்திலும்அற்றம்’: சொல்  கருத்தாய்வு

. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

         தொன்மையான விளக்கவியல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும், அற இலக்கியமான திருக்குறளிலும் சொற்பொருள் ஆய்வுக்கான களம் நுட்பமாக அமைந்துள்ளது. தொல்காப்பியத்தில் கலைச்சொல்லாகவும், திருக்குறளில் வாழ்வியல் விழுமியமாகவும் பயில்கின்ற சொற்களின் கருத்தை நோக்கி அறிந்தால் தெளிவு வாய்க்கும். இம் முறையில் அற்றம்என்னும் தொழிற்பெயர்ச் சொல்லின் கருத்தைச் சூழல் நோக்கி விளக்குவதாக இக் கட்டுரை இயல்கின்றது.

கருதுகோள்: ஒப்புருச் சொல்லாக அற்றம் ஆளப்படுகின்றது.

அற்றம் : சொற்பொருள்:

            அறு > அற்று + அம் = அற்றம். இது அறு என்னும் குறை, நீக்கு என்னும் பொருளுடைய வினைப் பகுதியுடன் அம் என்னும் தொழிற்பெயர் விகுதியை ஒட்டித் தொழிற்பெயரும், குற்றம்/ இறுதி ஆகிய பெயர்ச்சொற்களும் ஆக்கப்படுகின்றன. இதனால் ஒப்புச்சொல்லாக இது ஆளப்படுவது புரியலாகும்.

தொல்காப்பியத்தில்அற்றம் ‘ :

            தொன்மையான விளக்கவியல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

     அற்றம் அழிவு உரைப்பினும் அற்றம் இல்லாத ( கற்பியல், நூ.09 அடி 03 )

என்னும் அடியில் தொடக்கத்தில் துன்பம்; இறுதியில் குற்றம் ஆகிய இரு வேறு பொருளில், ஒப்புருச் சொல்லாக வழங்கப்படுகின்றதுஇதனால் தொல்பழங் காலத்திலேயே இது ஒப்புருச் சொல்லாகப் பயில்வது தெளிவு.

வள்ளுவத்தில் :

            தொல்காப்பிய மரபுகளைப் போற்றுகின்ற திருக்குறளில், ஆறு இடங்களில் அற்றம் ஆளப்படுகின்றது. அவை வருமாறு:

அறிவு அற்றம் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
(421)

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை (434)

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி (846)

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும் (980)

விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு( 1186)

இவற்றின் சூழல் பொருள் நோக்கி, பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்.  

குறட்பா எண்

கருத்து

421

அழிவு

434

அழிவு

846

மறைக்கவேண்டிய உறுப்பு

980

குறை /மானக் கேடு

1186

முடிவு / இல்லாமை

1186

முடிவு / இல்லாமை

 

இதனால் அழிவு, மறைக்கவேண்டிய உறுப்பு, குறை /மானக் கேடு, முடிவு / இல்லாமை ஆகிய வெவ்வேறான பொருளில், ஒப்புருச் சொல்லாக அற்றம் பயில்வது தெளிவு. இவ்வாறு வள்ளுவத்தில் பயில்கின்ற ஒவ்வொரு சொல்லையும் நோக்கிக் கருத்துணர்ந்தால் விழுமியத்தைத் தெளியலாம்.

                                                                         *****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு