வள்ளுவத்தில் ‘மாலை’: சூழல் பொருண்மை
ப.கொழந்தசாமி,
அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி
உயர்தனிச்
செம்மொழியான தமிழின் சொற்பொருண்மைக் களம் விரிவான ஆய்வுத் தளமாக உள்ளது. தொல்பழங்காலச்
சொற்கள் தொடர்ந்து இன்றுவரை பயில்கின்றன. அவ்வாறே தமது விளம்பு நெறிக்கேற்பப்
படைப்பாளர் புதிய சொற்களைப் படைக்க உரிமையுள்ளவர். இந் நிலையில்
‘மாலை’ என்னும் பல்பொருட்சொல் திருக்குறளில்
இயல்வதை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது.
மாலை - சொற்பொருள்:
தனிச் பெயர்ச்சொல்லாக, மாலை என்னும் சொல் ஒரு பகல் நேரத்தின் இறுதி நேரத்தையும்
, பூ மாலை என்று ஒன்றன் திரட்சியையும் குறிக்கின்றது, எனவே ஒரு தொடரில் மாலை என்னும் ஒப்புருச் சொல் பயின்றால், சூழல் நோக்கி முறையாகக் கருத்துணரவேண்டும். அப்போது
தான் மெய்ப்பொருள் அறியலாகும்.
வள்ளுவத்தில்:
பழந்தமிழ் மரபுகளையும்
புதுமையையும் ஏற்றுப்போற்றுகின்ற வள்ளுவத்தில் ,
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை (1225)
என்னும் குறtபாவிலும் மற்றும்
1135, 1221, 1223, 1224, 1226, 1227, 1229, 1230 ஆகிய குறட்பாக்களிலும் நாளின் இறுதி நேரத்தைச்
சுட்டுவதாகவும்,
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் (1035)
என்னும் குறட்பாவில், மாலையவர் என்னும் மாலை என்னும் ’இயல்பு’ என்கின்ற கருத்திலான அடிச்சொல்லாலான தொகைச்
சொல்லைப் படைத்து , தன்னம்பிக்கையுள்ள திறனாளியை
அடையாளப்படுத்துகின்றார். அடுத்து
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர் (1230)
என்னும் குறட்பாவில், பொருள்மாலையாளர் என்னும் தொகைச் சொல்லை, பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவர், பொன்மேல் ஆசைவைத்தவர், பொருள் வளர்த்தலை ஓர் இயல்பாக ஆள்பவர் என்னும் கருத்தில் ஆண்டுள்ளார். இதே குறட்பாவில் நாளின் இறுதி நேரத்தைச் சுட்டுவதாகவும் மாலை பயில்கின்றது. இந்தக் குறளில் உளவியல் நுட்பத்துடன்
பிரிவு ஏக்கம் மாலை என்னும் சொல்லால் படம்பிடித்துக் காட்டப்படுகின்றது.
இவ்வாறு மாலை என்னும் சொல்லின் பொதுப் பொருளோடு, இயல்பு என்னும் சிறப்புப் பொருளையும் தெளிந்து, பல்பொருள் தனமையை / வழக்கை அறிந்து, தொடர்ப் பொருண்மைச் சூழல் நோக்கிக் கருத்துணரலாம்.
பயன்பட்டவை
இணையத் தரவுகள்
Comments
Post a Comment