வள்ளுவத்தில் ‘சலம்’ : கருத்தாய்வு

ப, கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

                இலக்கியம் மனித வாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டு, மானுட மேன்மைக்காக ஆக்கப்படுகின்றது. பல வகையான இலக்கியங்களுள் அறப் பனுவல்கள் செய் × செய்யாதே ; நன்று × தீது என்னுமாறு இருமைத் தன்மையை எடுத்துரைப்பனவாக இயல்கின்றன. இத்தகைய வாழ்நெறிகளை விளக்கத் தேவையான சொற்களைத் தன் மொழித்திறத்தால் தேர்ந்து / ஆக்கி / திரித்துப் பாவலர் ஆளுகின்றனர். எனவே விளம்பு செய்தியைத் தெளிய, இலக்கியத்தில் பயில்கின்ற ஒவ்வொரு சொல்லையும் நோக்கிக் கருத்தறியலாம். அந் நிலையில் ‘சலம்’ என்னும் பல்பொருட்சொல் திருக்குறளில் ஆளப்பட்டுள்ளதை விளக்குவதாக இக் கட்டுரை இயல்கின்றது.

சலம்: சொற்பொருள்:

பாட்டும் தொகையும் என்னும் சங்கச் சொல்விளக்கி , சலம் என்னும் பல்பொருட்சொல்லுக்கு நீர், தணியாக் கோபம், வஞ்சனை, மாறுபாடு   https://www.tamilvu.org/ta/library-l1300-html-l1300int-128028 (பதிவு வரிசை எண் 4321) ஆகிய பொருளைச் சுட்டுகின்றது.

இவற்றுள் [இன்றும் பயில்கின்ற] நீரைக் குறிக்கும்போது அது வடசொல்லாகின்றது. அதோடு, சங்க காலத்திலிருந்து சினம், வஞ்சனை, மாறுபாடு அனைய பிறழ்உளவியல்சார் கருத்தில் ‘சலம்’ தமிழில்  வழங்கப்படுதல் தெளிவு. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும் இவ்வாறு பல்பொருட்சொல்லாக இது இயல்கின்றது. மொழி மரபைப் போற்றுகின்ற திருக்குறளில்,

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று (660)

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார் (956)

என்னும் ஈரிடங்களில், வஞ்சனை/ தீயது என்னுமாறு இச் சொல் வழங்கப்படுகின்றது. மேலும் 660ஆம் குறட்பாவில் மட்டும் இயல்கின்ற ஏமார்த்தல் என்கின்ற பிறவினைத் தொழிற்பெயர் சேர்த்துவைத்தல் என்னும் கருத்தில் , தீவினைக்கு எதிராக எச்சரிப்பதாக, பேராசையை அறிவால் அகற்று என்று, உணர்ச்சி மேலாண்மை குறித்து வலியுறுத்துகின்றது. இதனால் தீமையை வெறுத்து, நிலையான/ மேன்மையான வாழ்க்கைக்கு நன்மையையே நாடுக என்கின்ற அறநெறி வகுத்துரைக்கப்படுகின்றது.

                                    பயன்பட்டவை

                                    இணையத் தரவுகள்

                                                   ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு