வள்ளுவத்தில் சாகாடு × சாக்காடு ; உறழ்பொருண்மை

                       ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

            இலக்கியம் பொருள் பொதிந்த சொற்களால் ஆனது; ஒவ்வொரு சொல்லும் கருத்தைக் கடத்துகின்ற பொருண்மை மதிப்புடையவை என்பதோடு, சொல்லின் பொருளை ஆக்குகின்ற ஒவ்வோர் எழுத்தும் , சொல்லின் பொருளை உறுதிப்படுத்துகின்றன.  அந் நிலையைத் தெளிய,  சொல் வழக்காறு வாய்ப்பாகின்றது. அதனால் திருக்குறளில் பயில்கின்ற சாகாடு ,  சாக்காடு என்னும் குறைந்த ஒலி வேறுபாடுடைய இணைச்சொற்களின் பொருண்மை மாறுபாடு இவண் விளக்கப்படுகின்றது.

சாகாடு= வண்டி :

அற இலக்கியமான வள்ளுவம் எல்லை மீறலைக் குறித்து எச்சரிக்குபோது,

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் ( 475 )

என்று, வலியறிந்து/ எல்லை மீறாமல் செயலாற்றி வெல்க என்று அறிவுறுத்த்கின்றது. இந்தக் குறட்பாவில் சொன்னது ஒன்று; சொல்ல விழைவது இன்னொன்று. ஒரு வண்டியில் எடை மெலிதாக இருக்கின்ற மயில் தோகையை அளவு மீறி ஏற்றினால், எஃகினால் ஆன வண்டியின் வலிமையான அச்சு முரிந்துபோகும். இது இயந்திரவியல் கொள்கை. இதை வள்ளுவர் அரசியல் அறிவியலாக மடைமாற்றித் தருகின்றார். எளிய பகைவர் ஒன்று சேர்ந்தால் வலிமை பெறுதலை இவண் திருக்குறள் எடுத்துரைக்கின்றது.  சங்க இலக்கியங்களிலும் இச் சொல் வணடி என்ற கருத்தில் இயல்கின்றது. மேலும், பதிற்றுப்பத்தின் 27ஆம் பாடலின் 14ஆம் அடியில் சாகாட்டாளர் என்னும் சொல் வண்டி ஓட்டுநரைச் சுட்டுவதும் இவண் ஒப்பத்தக்கது. சகடம் என்பது இதன் இணைச் சொல்லாக இயல்கின்றது.

சாக்காடு = இறப்பு :

            உயிரினங்களின் பண்பு , பிறந்து, வாழ்ந்து,  மூத்து இறப்பதாகும். ஆயினும் இறப்பை யாரும் விரும்புவதில்லை. இருப்பினும் அற / பக்தி இலக்கியங்கள் சாவை நினைவூட்டிக்கொண்டே அறமுரைக்கின்றன.  தொல்காப்பியம் களவியல் 09ஆவது நூற்பாவில் சாக்காடு என்னும் சொல் இறப்பைக் குறிக்கின்றது, திருக்குறளில்,

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு ( 339 )

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து ( 780 )

ஆகிய குறட்பாக்களில் இறத்தல் என்னும் பொருளில் சாக்காடு பயில்கின்றது. நிலையாமையும் வீர மரணத்தின் பெருமையும் முறையே இவண் எடுத்துரைக்கப்படுகின்றன.

            இவ்வாறாக, முறையே வண்டி / இறப்பு என்னும் கருத்தில் , அறமுரைக்க வள்ளுவர் இச் சொற்களை ஆண்டுள்ளார்.

                                                                 பயன்பட்டவை

                                                         இணையத் தரவுகள்

                                                                        ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு