நிறங்களின் உணர்வுப் பொருண்மை மதிப்பு
முர். ப, கொழந்தசாமி, இணைப் பேராசிரியர், அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
மானுட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளோடு உணர்வுத் தேவைகளும்
இயல்கின்றன. உணவு, உடை, உறைவிடம், கல்வி ஆகிய தேவைகள் நிறைவேறினாலும் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள்,
புகழ். பெருமை என்பவற்றிற்காகவும் மனித மனம் விழைகின்றது.
இதனால் நிறம், திசை, நம்பிக்கை,
சகுணம் ஆகியவை வாழ்க்கையில் முதன்மை பெறுகின்றன. நிறங்களுள் நன்னிறங்களும், விரும்பாத வண்ணங்களும் அமைந்துள்ளன.(இறுதியில் தரப்பட்டுள்ள ஆங்கிலக் குறிப்புகளை ஒப்புநோக்குக) அதனால் இவை உணர்வுப் பொருண்மை மதிப்புடையனவாகத் திகழ்கின்றன. நிறங்கள் அனைத்து மொழிகளிலும் பொருட் களங்களுள் (அதாவது
பல நிறங்களைக் குறிக்கும் சொற்றொகுதி) ஒன்றாக அமைந்துள்ளன.
ஆன்மீக அடிப்படையிலும் நிறங்களுக்கு உணர்வுப் பொருண்மை சுட்டப்படுகின்றது.
குங்குமம், திருநீறு, திருமண்,
மஞ்சள். பூக்கள் ஆகியவற்றின் நிறத்தால் கருத்துகள்
உருவாக்கப்படுகின்றன. புதுச்சேரி அரவிந்தரும் அன்னையும் மலர்களும்
அவற்றின் நிறங்களும் ஆன்மீக மதிப்புடையன என்று அறிவுறுத்தினர். அம்மன் கோவில்களில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் போற்றப்படுகின்றன.
தொல்காப்பியர் உரியியலில்,
கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள
(நூ. 855) என்றும்
நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப
(நூ. 856) என்றும்
முகம் சிவந்தான் என்று உணர்ச்சி
வெளிப்பாட்டிற்கும், செந்தாமரை என நிறத்தைச் சுட்டவும் கறுப்பு, சிவப்பு என்னும்
பெயர்ச் சொற்கள் ஆளப்படுவதை
வகுத்துரைத்துள்ளார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின்
இரண்டாம் மடலமும் ( ப. 690) கறுப்பு என்னும்
சொல் நிறத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்திவருவதைப பதிந்துளது. இத்தகைய இலக்கியச் சொற்பயன்பாடு பொருண்மை
மதிப்புடையனவாகத் திகழ்கின்றன. திருக்குளிலும் எடுத்துரைப்பியலுக்கு
நிறங்கள் பயன்கொள்ளப்பட்டுள்ளன.
புறம்குன்றி
கண்டனைய ரேனும் அகம்குன்றி
மூக்கின் கரியார் உடைத்து (கூடா ஒழுக்கம்- குறள் எண்: 277)
என்னும்
குறட்பாவில் திருவள்ளுவர் போலித் தவ வேடத்தினரைக் கரியார் என்று குறிப்பிடுகின்றார். அதாவது குன்றிமணி போல மேலே சிவந்தும், அடியில் கறுத்தும்
திரிகின்ற போலித் தவ வேடதாரிகள் குறித்துத் திருவள்ளுவர் எச்சரிக்கின்றார்.
இவண் சிவப்பு, கறுப்பு ஆகிய நிறங்கள் முறையே உண்மை.
பொய்மை என்கின்ற முரண்பட்ட நிலைமைகளைச் சுட்டுகிற கருத்துவிளக்கக் குறியீடுகளாகப்
பயனாளப்பட்டுள்ளன.
வெண்மை
எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு (:புல்லறிவாண்மை -
குறள் எண்:844)
என்னும் குறட்பாவில், புல்லறிவுடைமை /அறிவின்மை / அறியாமை என்னும்
பொருளில் வெண்மை என்னும் நிறப் பெயர் ஆளப்பட்டுள்ளது. இங்ஙனமே,
அரியகற்று
ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு ( தெரிந்து தெளிதல் -
குறள் எண்:503)
என்னும் குறட்பாவிலும் வெளிறு(வெண்மை) அறியாமை
என்னும் பொருளில் நிறப்பெயர் இயல்கின்றது. இவ்வாறே,
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்
வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல் ( அவையறிதல் - குறள் எண்:714)
என்னும் குறட்பாவிலும் வெளியார்(வெண்மை) என்று அறியாமை என்னும் பொருளில் நிறப்பெயர் இயல்கின்றது.
ஒவ்வொரு நாட்டின் தேசியக்
கொடியிலும், அமைப்புகள்/ இயக்கங்கள் முதலியவற்றின்
கொடிகளிலும் நிறங்கள் கொள்கை விளக்கக் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சாலைப் போக்குவரத்துத் துறையிலும், எச்சரிக்கைப்
பலகைகளிலும் வண்ணங்கள் பொருண்மை
மதிப்புடையனவாக இயல்கின்றன.
மேல்மருவத்தூர் பக்தர்கள் சிவப்பாடை அணிவதால் செவ்வாடைத் தொண்டர்கள்
என்றும், காவல் துறையினர் காக்கி வண்ணச் சீருடை அணிவதால் அந்த
நிறத்தாலும் அழைக்கப்படுகின்றனர். இன்றைய வழக்கிலும் கணக்கில் காட்டப்படாத வருமானத்தைக் கறுப்புப் பணம் என்றும்,
அப்பழுக்கற்றவரை வெள்ளை உள்ளத்தவர் எனவும் சுட்டுகின்றனர். போராட்டத்தின்போது கறுப்பு வில்லை அணிந்தும், ஒருவரின்
வரவை விரும்பாதபோது கறுப்புக் கொடி காட்டியும் வெறுப்பை வெளிப்படுத்துவதுண்டு.
இவ்வாறாக இலக்கிய
/ பேச்சு வழக்குகளில் நிறங்கள் அமைந்து, வண்ணத்தை
உணர்த்துகின்ற பெயர்ச் சொற்களாகவும் பெயரடைகளாகவும், உணர்ச்சிகளைச்
சுட்டுகின்ற வினைச் சொற்களாகவும் பெயரெச்சங்களாகவும் இயல்கின்றன. இதனால் இவை சொற்பொருளோடு உணர்வுப் பொருண்மை சுட்டுவனவாக மதிப்படைகின்றன. இதை இலக்கிய உத்தியாகவும்,
கருத்துவிளக்கக் காட்சியாகவும் கருதலாம்.
ஒப்புக் குறிப்பு
The appeal of
colour is universal. Colour plays an important role in our lives. Colour
is a source of pleasure to everybody. Colours can change the moods, reduce
or increase tensions, cause excitement and sometimes have a soothing effect for
a tired person. Colour is a powerful and important communication tool,
and it is tied to religious, cultural, political and social influences. By
stopping to consider what each colour represents and is linked to in the 'real
world' we can make informed design decisions that ensure we appeal to our
target audience.
(https://blog.teamtreehouse.com/how-colour-communicates-meaning
-21-10-2021)
பயன்பட்டவை
1.
சுப்பிரமணியன், ச.வே.(1998),தொல்காப்பியம் தெளிவுரை,
சென்னை; மணிவாசகர்
பதிப்பகம்.
2. மோகன்ராசு,கு.
.(1994), திருக்குறள் மக்களுரை. சென்னை;
மணிவாசகர் பதிப்பகம்.
3. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
பேரகரமுதலி, இரண்டாம் மடலம், தமிழ் இணையக் கல்விக்கழக மின்னூலகம்.
4. கூகுள் இணையதளம்.
********
Comments
Post a Comment